Saturday, August 23, 2008

தீட்டு பட்டுருச்சி!

"ஆயா.... பையனுக்கு பொஸ்தகம் வாங்கனும், ஐயா கிட்ட கேட்டிருந்தேன்",தலையை சொரிந்தபடி நின்றிருந்தான் குப்புசாமி.

குப்புசாமி அந்த கிராமத்தில் தோட்ட வேலை பார்ப்பவன். இது போக மதிய வேளைகளில் கிராமத்தார்கள் சொல்லும் சிறு சிறு வேலைகளை செய்து கைகாசு வாங்கிக் கொள்வான். கஷ்டபடும் குடும்பம்.

அவன் ஆயா என அழைத்தது சின்ன தாயி எனும் கிழவியை. கிழவியின் குடும்பம் வசதிபடைத்தது. கிழவி குப்புசாமியை நீசனை பார்ப்பது போல பார்த்தாள்.

"மாச கடைசி ஆனா ஆளாளுக்கு வந்துடுங்கடா, சண்டால பசங்களா, நாங்க என்ன காச மரத்துலயாடா நட்டு வச்சிருக்கோம்", கடுகடுவென வார்த்தைகளை கொட்டினாள் கிழவி.

"எல்லாம் இந்த குணா பையன சொல்லனும். அவனவன வைக்க வேண்டிய எடத்துல வச்சாதானே, கண்டவனுங்ககிட்ட பழகுறது, இப்ப என்னடானா வீட்டு வாசல்ல வந்து நிக்குறானுங்க" கிழவி முனங்கிக் கொண்டே பணம் எடுக்க போனாள்.

குப்புசாமியின் காதில் அது கேட்காமல் இல்லை. கிழவியின் புத்தி அவன் அறிந்தது தான். அதுவும் இல்லாமல் தற்சமயம் பணம் அவனுக்கு முக்கியம். யார் என்ன சொன்னால் என்ன. பயனுக்கு புதிய நோட்டு புஸ்தகம் வாங்க வேண்டும்.

வேண்டா வெறுப்பாக குப்புசாமியிடம் பணத்தை நீட்டினாள் கிழவி. அதை வாங்கிய குப்புசாமியின் கை அவள் மீது பட்டது. கிழவி ஆத்திரமடைந்தாள்.
"எட்டி நின்னு வாங்கிக்க முடியாதாடா எடுபட்ட பயலே" ஏசியவாரு கையை சேலையில் துடைத்தாள்.

குப்புசாமி முகம் சுளிக்காமல் பணத்தை வாங்கிக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்.

அவன் கிளம்பியதும் துணிகளை எடுத்துக் கொண்டு குளிக்கப் போனாள் கிழவி.

"என்ன பாட்டி, இன்னிக்கு இவ்வளோ சீக்கிரம் குளிக்க போற?" கிழவியின் பேத்தி கண்மணி கேட்டாள்.

"அந்த கீழ் சாதிக்காரப் பய கை என் மேல பட்டுறிச்சுடீ".
"நீ திருந்த மாட்ட பாட்டி".

"அடி போடி தீட்டு பட்டுறிச்சுனு சொல்றேன். இப்பதான் பேச வந்துட்டா".

வேகமாய் குளியலறையை நோக்கிச் சென்றாள் கிழவி. எதிர் பாரா விதமாக தடுக்கி விழுந்து தலையில் பலமான காயம் பட்டது. சற்று நேரத்தில் கிழவி உயிரை விட்டாள்.
****
"டேய் குப்பு! பெரியவர் வீட்டு கிழவி மண்டய போட்டுறிச்சி. உன்ன பந்தல் போட கூப்பிடுறாங்க".

குப்புசாமி மறுபடியும் கிழவி வீட்டை நோக்கி ஓடினான். பந்தல் போட்டு மற்ற வேலைகளை முடித்து திரும்புவதற்குள் அவனுக்கு சோர்ந்துவிட்டது. வீட்டுக்குள் நுழைந்த குப்புசாமியிடம் அவனது மகன் கேட்கிறான்.
"அப்பா நோட்டு புஸ்தகம் வாங்கிட்டியா?"
"டேய், செத்து போன கிழவி கொடுத்த காசு டா, பொஸ்தகம் வாங்கினா தீட்டாகிடும், அடுத்த சம்பளதில் அப்பா வாங்கி கொடுக்கிறேன் சரியா".

உடையை மாற்றிக் கொண்டு கள்ளுக் கடை நோக்கி நடக்கிறான் குப்புசாமி.
(பி.கு: இது ஒரு மீள்பதிவு. எனது வாழ்க்கைப் பயணத் தளத்தில் எழுதப்பட்டது)

6 Comments:

விஜய் ஆனந்த் said...

நானும் முன்பே படித்திருக்கிறேன்...
ஆயினும் கதையின் வீச்சை இப்போதுதான் முழுமையாக உணர்கிறேன்....

பரிசல்காரன் said...

//உடையை மாற்றிக் கொண்டு கள்ளுக் கடை நோக்கி நடக்கிறான் குப்புசாமி. //

!!!!!!

VIKNESHWARAN ADAKKALAM said...

@விஜய் ஆனந்த்

நன்றி விஜய் ஆனந்த். மீண்டும் வருக.

@ பரிசல்காரன்

பரிசல் என்ன சொல்லவரிங்க... போனதடவ இத எழுதிதானே வாங்கிக்கட்டிக்கிட்டெ. இன்னுமா அறிவு வரலனு கேட்கிறிங்களா?

Anonymous said...

மீள்பதிவு என்றாலும் அதன் வேகம் தனியவில்லை.
அனைவரும் படிக்க வேண்டியது.

ஹேமா said...

விக்கி,எங்கள் தமிழ் ஈழத்திலும் இது போன்ற நிகழ்வுகள் நிறையவே.
கிணறு வெட்ட,பனை தென்னை ஏற,வீடு கட்ட,முடி வெட்ட,துணி வெளுக்கன்னு தங்களுக்குச் செய்ய முடியாத வேலைகளுக்கு கூப்பிட்டுவிட்டு,அவர்களுக்கே தெரியாமல் அவர்களை அசிங்கப் படுத்தி அனுப்புவார்கள்.அவர்கள் அமர்ந்த இடத்தைக்கூட கழுவுவார்கள்.அறியாமை மனிதர்கள்.
உலகம் எவ்வளவோ வளர்ந்த பின்னும் இன்னும் மனங்கள் வளராத மனிதர்களைப் பற்றி என்ன சொல்ல முடியும்!ஆனால் ஐரோப்பிய நாடுகளில் நான் காணவில்லை இப்படிப் பிரிவினை.எததனையோ தேவையற்ற தீய பழக்க வழக்கங்கள்
இங்கு இருந்தாலும் அவர்களிடமிருந்து படிக்க வேண்டிய நல்ல பழக்க வழக்கங்கள்
நிறையவே இருக்கு.

என்ன விக்கி,படத்துக்கும் பதிவுக்கும் சம்பந்தமே இல்லையே!

VIKNESHWARAN ADAKKALAM said...

@ அனானி, ஹேமா

வருகைக்கு நன்றி. மீண்டும் வருக.