அத்தியாயம் 7
“டேய் பாரி. என்னாச்சு நேத்து? ஆள காணும்?” யாரோ முதுகில் தட்டவும் திரும்பிப் பார்க்கிறேன். என்னுடன் பணிபுரியும் முரளி அங்கே நின்றிருந்தான்.“
"லீவு எடுக்க வேண்டியாதாப் போச்சு? கொஞ்சம் வேலையாயிருச்சு.”
“உன் மாமன் பொண்ணுக்கு தான் கல்யாணம்னு கேள்விப்பட்டேன், நீ எதுக்குடா தேவை இல்லாம ‘லீவு போட்ட” அவன் பேச்சில் கிண்டல் இருந்தது. எனக்கோ எரியும் நெருப்பில் நெய்யை வார்த்தது போல் இருந்தது.
“கல்யாண வேலையை நான் தான் குத்தகைக்கு எடுத்திருந்தேன், அதான் வர முடியல”, அவன் சிரித்தான்.
“நேத்து நீ வருவேன்னு எதிர்பார்த்திருந்தேன். அந்த “ஃபேராஜேக்ட்” விசயமா எல்லாம் பேசி முடிச்சாச்சு, இன்னும் ஒரு வாரத்தில் முடிவு தெரிஞ்சிடும்”.
“தேங்ஸ்டா, நீ கண்டிப்பா முடிச்சு கொடுத்திடுவேன்னு தெரியும்”.
“சரி அதை விடு. இன்னிக்கு “நைட் நீயும் போறீயா?”
அவன் கேட்க வருவது புரியாமல் நெற்றியை சுருக்கினேன், “எங்க போகனும்?”
“அட நம்ப சுந்தர் மகளுக்கு ஒரு வயசு பிறந்த நாள் கொண்டாறாங்கடா, அதுக்குள்ள மறந்துட்டியா?”
நான் மறந்து போய் இருந்தேன். “நீ போறீயாடா?”
“கண்டிப்பா.. போகமலா.. நீயும் வாயேன், நளினாவையும் கூட்டிக்கிட்டு”.
நளினா என்ற வார்த்தையை கேட்டவுடன் என்னுள் அச்சம் ஏற்பட்டது.குற்ற உணர்வு வாட்டியது. மனதை திட படுத்திக் கொண்டு என் கைப்பேசியை எடுத்தேன்.
“ஹலோ, நளி..”
“பாரி..” சட்டென அழைப்புத் துண்டித்து போனது. என்ன ஆனது. அவளுக்கு என் மேல் ஏதும் கோபமா.
ஓரிரு நொடிகளில் அவள் மீண்டும் அழைத்தாள், “பாரி எங்கடா போயிருந்த, நான் “கால் பண்ணப்ப கூட ‘அன்சர்’ பண்ணல… நான் உன்ன ‘ரொம்ப மிஸ் பண்றேன் தெரியுமாடா”.
எனக்குள் ஒரு நிம்மதி பெருமூச்சு வந்தது.
“என்னய்யா இன்னிக்கு சீக்கிரமா வந்துட்டே?” வீட்டிற்கு வெளியே காலனியை கழற்றிக் கொண்டிருந்தேன். அம்மா என்னருகே வந்து கேட்டார்.
“இல்லமா ‘நைட் ஒரு டின்னர் இருக்கு போகனும்” அம்மாவின் முகம் சுருங்கியது.
“முன்னாடியே போன் பண்ணி சொல்லிருக்கலாமேயா? வீட்டில அதிகமா சமைச்சிருக்க வேண்டாம்ல?”
நான் வரவேற்பு அறையில் இருந்த மெத்தை நாற்காலியில் என் உடலைக் கிடத்தினேன். அம்மாவும் என்னைத் தொடர்ந்து அருகே வந்தார்.
“ம்ம்ம்… என்ன சமைச்சீங்க?” வேண்டா வெறுப்பாக கேட்டேன்
“நான் சமைக்கலப்பா, நந்தினிதான் சமைச்சா, உனக்கு பிடிச்ச நண்டு பிரட்டல்”
எனக்கு எச்சில் ஊறியது. இது கண்டிப்பாக அம்மாவின் வேலையாகத்தான் இருக்க வேண்டும். அவர் தான் நந்தினியிடம் சொல்லி நண்டு பிரட்டல் செய்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் முன்பு பாட்டி சமைத்து வைக்கும் நண்டு பிரட்டலுக்கு நானும் அவளும் அடித்துக் கொள்வதை மனதில் வைத்திருந்து சமைத்திருக்க வேண்டும்.
அந்த நினைவுகள் அவள் மனதில் இருக்கக்கூடுமா? என் தட்டில் கூடுதலாக ஒரு துண்டு நண்டு இருந்துவிட்டாலும் போதும். எரித்துவிடும் பார்வைக் கனலை என் மீது எரிவாள். நான் வில்லத்தனமான ஒரு நமட்டுச் சிரிப்பை உதிர்த்து வைப்பேன்.
“சாப்பிடறதுக்கு கூட அடிச்சிகிட்டு… என்ன பிள்ளைகளோ”. பாட்டி கடிந்துக் கொள்வார்.
நான் ஒன்றும் பேசாமல் மெத்தை நாற்காலியில் சாய்ந்திருந்ததால் அம்மா சமையல் அறையை நோக்கி நடந்தார். என் கண்கள் பாரமாவதை உணர்ந்தேன். சிந்தனைகள் புரியாத புதிர் ஒன்றுக்கு விடை தேடி அலைய தொடங்கியது. மாமா வீட்டை விட்டு கிளம்பியதில் இருந்து நான் பேசுவது வெகுவாக குறைந்து போய் இருந்தது. சூழ்நிலை எனக்கு புதிதாய் புலப்பட்டது. கல்யாணம் ஆகிவிட்டது. ஊர் பார்வைக்கு நந்தினி என் மனைவி. ஆனால் என் மனம் அதை ஏற்க மறுத்தது.
அவளிடம் நான் எப்படி பேசுவது? ஆசையாகவா, அன்பாகவா, அதிகாரமாகவா. என்னுள் விடை தேடி அலுத்துப் போனேன். சில வேலைகளில் நினைப்பதுண்டு. ஊமையாக பிறந்திருந்தால் எவ்வளவு சுலபம். யாரிடமும் எதுவும் பேச தேவை இல்லை. கேட்கும் கேள்விகளுக்கு வார்த்தைகளை அடுக்கி பதில் சொல்லவும் தேவை இல்லை. எனக்கும் நந்தினிக்கும் ஏற்பட்ட இடைவெளி, வார்த்தை பரிமாற்றங்களுக்கு சுவர் எழுப்பிவிட்டிருந்தது. ஆனால் எங்களுக்கு ஏற்பட்ட திருமணம் நான் எதிர்பார்க்காத ஒன்று. விபத்து என்று சொன்னால் மிக பொருந்தும்.
அம்மாவின் பேச்சு சத்தம் கேட்டது. இப்போதெல்லாம் வீட்டில் அவர்தான் அதிகம் பேசுகிறார். வரவேற்பறையில் தூங்கி போய் இருந்த நான் மேல் மாடியை நோக்கி விரைந்தேன்.
குளித்து முடித்து கிளம்பும் போது மணி சரியாக 8.24. நான் என் கார் சாவியை எடுத்துக் கொண்டு காரை நோக்கி நடந்தேன். கதவோரமாக அம்மா நின்றுக் கொண்டிருந்தார்.
“சாப்பிடலையாப்பா?”
நான் இல்லை என்பதற்கு அறிகுறியாக தலையை மட்டும் அசைத்து வைத்தேன். யாரோ என்னை நெருக்கி வருவதாக தோன்றிற்று. திரும்பிப் பார்த்தேன். நந்தினி எங்களை நோக்கி வந்துக் கொண்டிருந்தாள்.
“நீங்க இன்னும் சாப்பிடலையாம்மா? நீங்களும் நந்தினியும் சாப்பிட்டுட்டு படுங்க, எனக்காக காத்திருக்க வேண்டாம், நான் வர ‘லேட்’ ஆகும்னு நினைக்கிறேன்”.
அம்மா என் கையை கிள்ளினார், “ஏய், அவளையும் கூட்டிட்டு போயேண்டா?” என் காதருகே மெதுவாகச் சொன்னார்.
“இல்லைம்மா.. அதெல்லாம் வேண்டாம், அவளை அழைச்சிட்டு போயிட்டா நீங்க வீட்டில் தனியா இருக்கனும், அதுவும் இல்லாம முரளியும் என் கூட வருவதா சொல்லியிருக்கான்”
நான் என் கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். நளினா எனக்காக காத்துக் கொண்டிருப்பது மனக் கண்களில் தெரிந்தது. நிச்சயம் அழகான உடைக் கொண்டிருப்பாள். எப்போதும் போல பலரின் பார்வைகள் அவளைத் திருடித் தின்னக் காத்திருக்கும். அதில் எனது கள்ளப் பார்வையும் ஒன்றல்லவா?
நான் காரில் அமர்ந்து தயாரானேன். என்னையும் அறியாமல் என் விழிகள் ஈர்த்துச் சென்று நந்தினியைப் பார்க்க வைத்தது. அவளும் என்னைதான் பார்த்திருந்தாள். எனக்கு ஒரு விதமான மன நெருடலாக போனது.
நான் வீட்டில் இருந்து கிளம்பியபோது எனது பயணம் விடுதலையை நோக்கிச் செல்வதை போல் இருந்தது. எத்துணை இனிமையான இரவு அது. மனம் குளிரும் இரவு. இறைமை எனது ஞாபக திறனை அழித்து விட்டிருந்தால் இந்த இரவு மேலும் அர்த்தப்படும்.
தொடரும்...