Thursday, January 1, 2009

60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் (17)

அத்தியாயம் 17

முதலாளி பல முறை சொன்னார். "இரு விருந்து முடிந்த்தும் கிளம்பலாம்" என்று. அங்குள்ள நிலை எனக்கு தோதானதாக இல்லை. கூப்பிட்ட கடமைக்கு வந்தாகிவிட்டது. எப்படியாவது நழுவிக் கொள்ள வேண்டும் என உறுதிக் கொண்டேன்.

இந்த முரளியும் ஒரு புரம் நந்தினியோடு பேசுவதிலேயே குறியாக இருந்தான். பெட்ரோல் தெளிக்காமலேயே என் வயிறு ஒரு புரம் பற்றி எறிய ஆரம்பித்தது. போதா குறைக்கு இங்குள்ள சிலர் நளினாவை நன்கு அறிவார்கள்.

"சரி நாளைக்கு மறக்காம நம்ப 'ப்ரோஜேக்ட் சைட்டுக்கு' வந்திடு… நந்தினி கூட இருக்கிறத காரணம் காட்டி தப்பிக்க பார்க்குற… ஒன்னும் சொல்றதிக்கில்லை…"

" நிச்சயமா வந்திடுறேன் முதலாளி… பை த வே…. தேங்ஸ் பார் த டின்னர்…" என்னை அறியாமலேயே நந்தினியின் கைகளை பற்றியிருந்தேன்… எப்படி என்பது தெரியவில்லை. யாரும் பார்த்துவிடும் முன் விலக்கிக் கொண்டேன்.

"உன் நண்பன் கிளம்புறானு நீயும் போக போறியாப்பா?" முரளியைப் பார்த்துக் கேட்டார்.

" இல்லைங்க சார்… இங்க தான் இருப்பேன்".

நான் அதிக நேரம் அங்கிருக்கவில்லை. இப்போதைய எனது தேவை நான் இங்கிருந்து கிளம்ப வேண்டும். என் மீது யாருக்கேனும் சந்தேகம் வராமல் இருக்க வேண்டும். முரளி நந்தினியோடு நெருங்கிப் பழகாமல் இருக்க வேண்டும்.

பின்னிருக்கும் இருள் துரத்தி வர முன்னிருக்கும் இருளை கிழித்துச் சென்று கொண்டிருந்தது எனது மகிழுந்து. பக்கத்தில் நந்தினி அமைதியாகவே இருந்தாள். முன் சாலையை வெறித்துக் கொண்டிருந்தாள். அது எண்ண ஓட்டத்தின் சாயல் என்பதை அறிவேன்.

ஒலி தட்டைப் போட்டு வானொலியை மெல்லமாக திறந்து வைத்தேன். நந்தினி சற்றே என்னைப் பார்த்துவிட்டு மீண்டும் தனது பார்வையை சாலையை நோக்கி படரவிட்டாள்.

"தூக்கம் வருதா நந்தினி?" நானாகவே பேச்சு கொடுத்தேன். இல்லை என்பதாக தலையை மட்டும் அசைத்தாள்.

"பசிக்குதா?" மீண்டும் தலையசைத்தாள். இரண்டுமே எரிச்சலான பதில்கள். கடுப்பில் மகிழுத்தின் வேகத்தை அதிகப்படுத்தினேன்.

" ஏன் நந்தினி ஏதும் பேச மாட்ற? மறுபடியும் தலைவலிக்குதா?"

"இல்லை, நீங்க என் மேல கோபமா இருக்கிங்களா?"

"கோபமா? எதுக்கு..?"

"முதல உங்க ஃபிரண்டு முரளி கேட்டதுக்கு சம்மதம்னு சொன்னனே அதுக்கு கோவமானு கேட்டேன்?"

"அவன் என்ன சொன்னான்? புரியலையே…?"

"உங்க வேலை செய்யுற இடத்துக்கு இண்டர்வியூ வர சொன்னார் இல்லையா, அதுக்கு நான் சரினு சொன்ன்னே… அத கேட்குறேன்…"

ஹம்ம்ம் இது தானா, என எனக்குள் ஒரு பெருமூச்சு வெளியேறியது.

"உண்மையாவே 'இண்டர்வியூ' வர போறியா நந்தினி?"

"முயற்சி செஞ்சி பார்க்கலாம்னு நினைக்கிறேன்…"

"கண்டிப்பா வேலைக்கு போக போறியா?" ஆமாம் என தலையசைத்தாள்.

" ஊர்ல தங்கச்சிங்களாம் இன்னும் படிச்சிகிட்டு இருக்காங்க. அப்பாவுக்கும் வயசாகிட்டு இருக்கு. நான் வேலைக்கு போனா அவுங்களுக்கு கொஞ்சம் உதவியா இருக்கும் இல்லையா…"

அவள் சொன்ன வார்த்தைகள் என்னைச் சம்மட்டியைக் கொண்டு அடித்தை போல் இருந்தது. அவள் வாழ்க்கையில் இருந்து தூரமாய் இருக்கிறேன் என்பதை அது சொன்னது.

"நாம தான்…" அதற்கு மேல் பேசாமல் நிறுத்தினேன். எப்படி சொல்வேன் 'கணவன் மனைவி' எனும் அந்த வார்த்தையை. குடும்பத்தின் பார்வைக்கும், பெயரளவிலும் மட்டுமே தம்பதிகள் எனும் பட்டம்.

"நாம… என்ன?"

"ம்ம்ம்… ஒண்ணும் இல்லை…" அவள் அமைதியானாள். நானும் ஏதும் பேசாமல் வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் அங்கு அமைதி மட்டுமே நிலவியது. நந்தினி தூங்கிவிட்டிருப்பாளோ என்று நினைத்தேன். அமைதியாக முன்னோக்கி பார்த்துக் கொண்டு வந்தாள்.

கொஞ்ச நேரத்தில் வீட்டை அடைந்தோம். கதவை திறந்தபடி அவளிடம் பேசினேன்.

"நந்தினி நீ நிச்சயமா வேலை செய்ய போறேனா நான் உன்னை நாளைக்கு 'ஆபிஸ்'க்கு கூட்டிட்டு போறேன்" என்று அமைதியை உடைத்தேன்.

"உனக்கு ஏதும் பிரச்சனை இல்லையா பாரி?"

வரவேற்பறையில் இருந்த மெத்தை நாற்காலியில் உடலை கிடத்தினேன். "உன்னோட விருப்பத்துக்கு நான் என்னானு மறுப்பு சொல்ல முடியும். நீ கூட அன்னிக்கு சொன்னியே... இன்னும் கொஞ்ச நாளுக்கு பிறகு இதையெல்லாம் மறந்துட்டு பழயபடியே நம்ம பாதையில போயிடலாம்னு..."

சற்று அதிகமாகவே பேசிவிட்டதை உணர்ந்தேன். ஏன் இப்படி பேசினேன்? தெரியவில்லை... நந்தினியின் முகத்தில் சலனம் இருந்தது.

"உன்னால பழைய நிலைக்கு மாற முடியுமா பாரி?" நந்தினி கேட்டாள். அது என்னை பெரிதும் குழம்பச் செய்யும் கேள்வியாகவே இருந்தது.

" ம்ம்ம்... முடியும்..." எனது பதிலில் அவள் புன்னகைத்தாள்.

"உறுதியா உன்னால பழைய நிலைமைக்கு மாற முடியுமா? முடிஞ்சி போன விசயத்த மாத்தி அமைக்கிறது சுலபமில்ல பாரி. அது எவ்வளோ கஷ்டம்னு உனக்கே தெரியும். இந்த கொஞ்ச காலத்துல பல மாற்றங்கள் நம்ம வாழ்க்கையில நடந்திடுச்சு. உன்னோட உணர்ச்சிகளும் இயல்பு நிலையும் இதுல விட்டு போகல".

"என்ன சொல்ல வர நந்தினி?" நெற்றியைச் சுறுக்கி சற்று கடுகடுவென்றே கேட்டேன்.

" சுற்றியுள்ளதை உணரவும் புரிஞ்சிக்கவும் மனுசனால முடியும் பாரி. நானும் ஒரு சாதாரன மனுசி தான்" என்றபடி மேல் மாடியில் இருக்கும் அறையை நோக்கிச் சென்றாள்.

முடிவாக அவள் என்னதான் சொல்ல வருகிறாள் என்பதினை என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. குழப்பத்தோடு சிந்தனை செய்து கொண்டு படுத்திருந்தேன்.


தொடரும்...