அத்தியாயம் 11
அன்றய தினம் காலையில் சிற்றுண்டியை சுவைத்துக் கொண்டிருந்தேன்.
"டேய் பாரி, சாப்பிட்டுட்டு நந்தினிய 'பேங்'கு அழைச்சிட்டு போ, பிறகு சலவைக்கு கொடுத்த உன் துணிகளை வாங்கிட்டு வந்திடு, இனி வீட்டிலேயே சலவை பண்ணிக்கலாம், உனக்கு ஒரு செலவும் மிச்சமா இருக்கும்"
"எதுக்குமா 'பேங்'கு?"
"அவ தங்கச்சி காலேஜ்ல படிக்கிறா இல்லையா அவளுக்கு பணம் போடனும்னு நந்தினி சொல்லிக்கிட்டு இருந்தா. இன்னிக்கு உனக்கு ஓய்வு தானே? கூட்டிட்டு போய்டு வாயேன்?"
முடியாது என நான் சொன்னாலும் அவ்விடத்தில் எடுபடாமல் தான் போகும். வாக்கு வாதம் நீளும். அதற்கு இடம் கொடுக்காமல் சரியென தலையசைத்து வைத்தேன்.
"அத முடிச்சிட்டு அப்படியே…" அம்மா தொடர்ந்தார்.
"ஐயோ அம்மா, என்ன இது காலையிலயே இப்படி தொல்ல பண்ணிகிட்டு இருக்கிங்க, ச்சே".
ஓய்வு நாட்களில் சுதந்திரமாக சுற்றித் திரிந்தவன். அம்மாவின் இப்பேச்சு என்னை எரிச்சலூட்டியது. குடும்ப சுமைகளுக்குள் அடைக்கப்படுவதாய் உணர்ந்தேன்.
"முதல்லதான் 'பசாருக்கு' போனிங்களே அப்பவே எல்லா வேலையும் முடிச்சிருக்க வேண்டிதானே?" நான் தொடர்ந்தேன்.
"டேய் அது சமையலுக்கு உள்ள பொருள் வாங்க போனேண்டா. வீட்டுக்கு தேவையான மற்ற பொருளை 'சூப்பர் மார்க்கேட்ல' தான் வாங்கனும், விடிஞ்சதும் யாரு 'சூப்பர் மார்க்கேட்' திறந்து வச்சிருக்கா? போற வழி தானே.. நீ ஒன்னும் வாங்க வேணாம் நான் நந்தினிகிட்ட சொல்லிட்டேன் அவ வாங்கிடுவா. நீ கூட்டிக்கிட்டு போனா போதும்."
நந்தினியை அழைத்துக் கொண்டு போனேன். வங்கியில் சேவை இயந்திரத்தில் பனத்தைச் செழுத்திவிட்டு, பேரங்காடிக்குச் சென்று வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு சலவைக் கடைக்குப் போனேன்.
"என்ன தம்பி துணி கொடுத்து ரொம்ப நாளாகுது இன்னிக்கு தான் வர?" சலவைக் கடை 'ஆண்டி' கேட்டார்.
"ஊருக்கு போயிருந்தேன் ஆண்டி. அதான் கொஞ்சம் லேட்" அவர் எடுத்து வைத்த துணிகளை பெற்றுக் கொண்டு பணத்தைச் செலுத்தினேன்.
"யாருப்பா இது? புதுசா இருக்காங்க?"
"என் மாமா பொண்ணு. பேரு நந்தினி. லீவுல வந்திருக்காங்க."
அங்கிருந்து கிளம்பினேன். இந்த ஆண்டி ஆள் கிடத்தால் ஊர் கதைகளை பேசும் ஆள். இவரிடம் பேசிக் கொண்டிருந்தால் நந்தினியின் வாயையும் கிண்டி விடுவார். அது நல்லதர்கல்ல.
"அந்த அண்டிக்கு ஒரு பொண் இருந்தா. ஒரு ஆக்சிடண்ட்ல இறந்துட்டா. அவுங்களுக்கு பெண் பிள்ளைங்கனா ரொம்ப பிடிச்சி போகும்".
அவளிடம் சொல்லிக் கொண்டு வந்தேன். ஏதாவது பேசுவோம் எனும் எண்ணத்தில் பேசினேன். எதிரில் ஒரு தேனீர் கடை தெரிந்தது. நந்தினியை தேனீர் சாப்பிட அழைத்தேன்.
"என்ன சாப்பிடுற?"
"எனக்கு காபி போதும்" என்றாள்.
"நந்தினி நம்ம பிரச்சனைய சீக்கிரமா தீர்த்தாகனும். ரெண்டு பேருமே அமைதியா இருக்கிறது யாருக்கும் எந்த நன்மையும் இல்ல. நம்ம வாழ்க்கை தான் பாதிக்கும்", நானே ஆரம்பித்தேன்.
"நமக்கு நடந்தது எல்லாம் உனக்கு தெரியாம இல்ல.." மேலும் தொடர்ந்தேன்.
"பாரி, சின்ன வயசுல நம்ம வாழ்க்கை வேற ஆனா இப்ப அப்படி இல்லை. பொறுப்புகள் அதிகமாகுது. சுமத்தவும்படுது. நமக்கு நடந்த கல்யாணமும் அப்படிதான். கொஞ்சமும் யோசிக்காம நம்ம குடும்பத்த நீ காப்பாத்தினதுக்கு நன்றி".
"அது மாமாவுக்காக நந்தினி…" அவள் மொல்லிய புன்னகையை சிந்தினாள் அதன் அர்த்தம் அவளுக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டும்.
"நாம சொந்தம்கிறது மட்டுமே என் மனசுல ஊறி இருக்கு நந்தினி… எந்த காலத்திலும் அது மட்டுமே எனக்குள்ள உறுதியா இருக்கு. இந்த நிமிசம் வரை நடந்துகிட்டு இருக்கிறதெல்லாம் கனவு போலவே இருக்கு. நமக்குள்ள வேற வேற கனவுகள் இருக்கலாம், ஆன கண் சிமிட்டும் நேரத்தில் எல்லாமே மாறி போய்டுச்சு".
"உன் வாழ்க்கையை தெந்தரவு செய்ததற்கு என்னை மன்னிச்சிரு பாரி. நடந்தது எல்லாமே எதிர் பார்க்காத விஷயம் தான். எதுவுமே நாம் விரும்பி நடக்கறதில்லை", என்று சொல்லியவளின் கண்களில் நீர் துளித்திருந்தது. அதை மறைக்கும் விதமாய் பார்வையை வெளியே படரவிட்டாள்.
"இந்த விசயத்தில் நான் நேர்மையானவனா நேர்மை இல்லாதவனானு எனக்கே ஒன்னும் புரியல நந்தினி. என்னை பொருத்த வரை நான் எதுக்கும் தயாரகளைன்றது தான் நிஜம்".
"நடந்ததுலாம் கசப்பான சம்பவம் தான். எல்லாதுக்கும் நன்றி பாரி". நான் பேசுவது ஒன்றாகவும் அவள் சொல்லும் பதில் ஒன்றாகவும் இருந்தது. என் மனதில் இருப்பதை அவள் புரிந்துக் கொண்டதாக தெரியவில்லை.
"தப்பு நம்ம மேல இல்லை பாரி. எல்லாம் சூழ்நிலை காரணமா நடந்தது தான். இது எல்லாத்துக்கும் நான் தான் காரணம். எல்லாத்துக்கும் நான் தான் பொறுப்பாகனும். கல்யாணம்ற பேர்ல நாம கடைசி வரை சேராமல் போனாலும் நான் ஏத்துக்கிறேன்… ஆனா…" மீண்டும் தன் பேச்சை தொடர்ந்தவர் சற்றே நிறுத்தினாள்.
"ஆனா என்ன?"
"உடனடியான பிரிவு நமக்கு வேண்டம்னு தோணுது பாரி, எனக்காக இத நீ ஒத்துக்குவியா? இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே.. 'அட் லிஸ்ட்' இந்த வருடமாவது ஆகட்டும். நம்ம தீடீர்னு பிரிஞ்சி போனா அப்பா ரொம்ப பாதிக்கப்படுவாரு". என்றாள்.
"ம்ம்.. நான் நாம் பிரியனும்னு சொல்லல நந்தினி…" நான் பேசுவதறியாமல் உளர ஆரம்பித்தேன். மாமாவின் முகம் ஒரு கனம் என் நினைவை வெட்டிச் சென்றது.
"எனக்கு புரியுது பாரி… விதி வசத்தால் நாம் பிரியனும்னா நான் ஏத்துக்குவேன். அதுவே நாம் சேர்ந்து வாழனும்னு வந்தா, இப்ப உள்ள நிலைமைல நாமே நம்மை கொடுமை படுத்திக் கொள்றதுக்கு சமமாதான் கடைசி வரை அமையும்". என்னால் என் நிலை அறிய முடியவில்லை. ஆனால் அவளின் பேச்சு அவள் தெளிவாக இருப்பதையே குறித்தது.
" 'ஐஆம் சாரி' ".
"நானும் மன்னிப்பு கேட்டுக்கிறேன் பாரி, இப்போதைக்கு இந்த மன்னிப்பு மட்டும் தான் நமக்கு ஆறுதல். இனிமேலாவது நாம நாமளா வாழ முயற்சி செய்யலாம்", அவள் என்னை பார்த்து புன்னகைத்தாள். நான் இன்னமும் சுவைக்கப்படாமல் வைத்திருக்கும் தேனீர் கோப்பையை நோக்கியபடியே இருந்தேன்.
"ம்ம்ம்… பாரி ஒரு உதவி செய்வியா?"
"உதவியா… என்ன உதவி நந்தினி?" நெற்றியைச் சுறுக்கினேன்.
"நாளைக்கு நான் வீட்டுக்கு போறேன். என்னை 'பஸ்' ஏற்றி விடுறியா?".
என்னை திகைக்க வைத்தாள். அவளை பார்க்க பாவமாக இருந்தது. ஒரு புரம் ஏதோ ஒரு சுமையில் இருந்து நான் தப்பும் துருப்புச் சீட்டு கிடைக்கப் போவதாகவும் உணர்ந்தேன்.
தொடரும்…