Monday, December 8, 2008

60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் (16)

அத்தியாயம் 16

என் முதலாளி வீட்டிற்கான பயணம் குறுகிய காலத்தில் முடிவதைப் போல் இருந்தது. வழி நெடுகப் பல யோசனைகளிலேயே மிதந்து கிடந்தேன்.

"என்னை மன்னிச்சிடு பாரி என்னால உன் 'ப்ரோக்கிரம்' வீணாப் போச்சி".


சூழ்நிலை ஒவ்வொருவருக்கும் ஒரு விதமாய் அமைந்துவிடுகிறது. நினைத்தது அனைத்தும் நினைத்தபடி நடக்காமலும் போகிறது.

"நம்மள பத்தி யார்கிட்டயும் எதும் சொல்ல வேணா. உன்ன பத்தி நான் எதுவும் சொன்னதில்லை".

நந்தினியின் முகத்தில் லேசான சோகம் படர்ந்தது. அது அதிக நேரம் நீடிக்காமல் ஒரு இளம் புன்னகையை மெல்லியதாய் உதிர்த்தாள். எனக்கு அர்த்தம் புரியாத புன்னகை. அதை பற்றி நான் கண்டு கொள்ளவில்லை.


முதலாளியின் வீட்டில் விளக்குகளின் அலங்காரம் கோலாகலமாக இருந்தது. எனது வண்டி அவர் வீட்டை நெருக்கிய போது காவலர்கள் கை உயத்தி வரவேற்றார்கள். வீட்டில் தெரிந்தவர்கள் பலர் இருந்தார்கள். ஆட்களும் அதிகம் தான்.

"பாரி'' முதலாளி என்னைக் கை கொடுத்து வரவேற்றார். "நீ தான் ரொம்ப 'லேட்' " என்றார்.

"மன்னிக்கனும்..." என பேச வாயெடுத்த என்னை அவர் பேச்சில் வெட்டினார்.

"சரி.. சரி.. போய் சாப்பிடு" என்றபடி நந்தினியைப் பார்த்தார். அந்தப் பார்வையில் இவள் யார் எனும் கேள்வியும் சேர்ந்திருந்தது.

"என்னுடைய சொந்தகாரவங்க... நந்தினி".

"சொந்தமா?"

"ஆமா... இப்ப தான் படிப்ப முடிச்சி இருக்காங்க... கோ.எல்ல வேலை தேடிகிட்டு இருக்காங்க".

அவருடன் பேசிக் கொண்டிருக்கையில் முரளி அவ்விடம் வந்தான். தன்னை அறிமுகப்படுத்தி நந்தினிக்கு கை கொடுத்தான். அவள் என்னைப் பார்த்தபடி தயக்கம் கொண்டே கை குழுக்கினாள்.

"நந்தினி வந்து சாப்பிடுங்க.." முதலாளி சொன்னார். முரளி என்னை அனுகவும் சாப்பாடு வைத்திருந்த இடத்தை நோக்கி அவள் சென்றாள்.

"உனக்கு சொந்தகார பொண்ணு இருக்கிறத பத்தி என்னிட்ட சொல்லவே இல்லை", என்றான்.

"எல்லாத்தையும் அவசியம் சொல்லனுமா?"

"அதுக்கு இல்லைடா... பொண்ணு அழகா இருக்கா..." என்றபடி அவன் பார்வை நந்தினியை திருடிச் சென்றது.

"அதனால..?"

" 'பாய் ஃப்ரெண்ட்' இருகானா?''

கடுப்பில் தலையசைத்தேன். என்ன நினைத்தான் என தெரியவில்லை. நான் அவ்விடம் விட்டு அகன்றேன்.

என் பார்வை அவ்வப்போது நந்தினி மீதே இருந்தது. அவள் கொஞ்சம் உணவு எடுத்துக் கொண்டு அந்த பக்கம் இருந்த பெண்களோடு சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். என் மனதிற்குள் ஏதோ ஒரு பயம் வாட்டிக் கொண்டிருந்தது.

"ஹெய் பாரி... யாரு அது உன் கூட வந்தது?" என்னுடன் வேலை பார்க்கும் சந்தோஷ். கைகுழுக்கியபடி கேட்டார்.

"ம்ம்... அழகா இருக்காங்க... நீதான் கல்யாணம் பண்ணிக்க போரியா?"

"ஹா ஹா ஹா... அப்ப என் நளினாவ என்ன பண்றது?"

"நளினாவவிட இந்த பொண்ணு பொருத்தமா இருக்கும் உனக்கு", என்றபடி சிரித்தார்.

"நளினா எங்க?"

"ஊருக்கு போயிருக்கா... வர நாளாகும்.."

" நீ கூட போகலையா?"

"அந்த அளவுக்கு அவ குடும்பத்தோட அறிமுகமாகல"

"உன் 'வைப்' எங்க?"

"வீட்டில் இருக்கா... 4 மாசமாகுது..."

" ஓ,,, வாழ்த்துக்கள்... அப்பாவாக போரிங்களா? எப்ப எங்களுக்கு விருந்து?"

அவருடன் சற்று நேரம் உரையாடிக் கொண்டிருந்தேன். நந்தினி சாப்பிட்டுவிட்டு ஒரு இடமாக அமர்ந்திருந்தாள். முரளி அவளருகே சென்றான். நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தான். அவன் வருகை அவளுக்கு அசௌகரியமாக இருந்திருக்க வேண்டும். அதுவும் கொஞ்ச நேரம் தான். பிறகு அவனது சகஜமான பேச்சுக்கு சிரித்துக் கொண்டிருந்தாள்.


"ரொம்ப சுவாரசியமா ஏதோ பேசுறிங்க போல?" அவ்விடம் சென்ற எனது பேச்சில் கொஞ்சம் திமிரும் கலந்திருந்ததாகவே அறிகிறேன்.

"என்னடா நீ புதுசா வந்திருக்காங்க... தனியா விட்டுட்டு நீ பாட்டுக்கு இருக்கியே..."

"நீ 'பார்ட்டில' 'ஜாய்ன்' பண்ணிக்கலையாடா???", நான் நந்தினியின் பக்கத்தில் அமர்ந்தேன்.

"அதான் அவுங்க எல்லோரையும் தினம் தினம் 'ஆப்பீஸ்ல' பாக்குறோமே... பிறகு என்ன?"


அவன் மேலும் தொடர்ந்தான். " டேய் பாரி... இவுங்க படிச்சி முடிச்சிட்டு வேலை தேடுறதா சொன்னியே..".

"ம்ம்ம்..." நந்தினி ஆமாம் என தலையசைத்தாள்.

"அப்படினா நம்ம 'ஆப்பீஸ்'ல மூயற்சி செஞ்சி பார்க்கலாமே... நமக்கு தான் வேலைக்கு ஆள் தேவை படுதே..".

"ஆமாவா.." வேண்டா வெறுப்பாக பதில் சொன்னேன்.

" ஆமாண்டா... "அக்கவுன்ஸ் டிப்பார்ட்மெண்டில்' 'கிளார்க்கு' வேலைக்கு ஆள் தேடிகிட்டு தானே இருக்காங்க.."

"ஓ... இப்ப உள்ள 'கிளர்க்' என்ன ஆச்சு?"

"அவுங்க வெளியூருக்கு மாறி போறாங்களாம்.."

"பரவாலை மச்சி... நந்தினிக்கு 'அக்கவுண்ஸ்' பார்க்க வராது".

"அது ஒன்னும் பிரச்சனை இல்லை. கத்துக்கிலாம்... நான் பிறகு முதலாளிகிட்ட சொல்லி வைக்கிரேன்... கண்டிப்பா கிடைச்சிடும்". அவனாகவே திறமை மிக்க முடிவுகளைக் காட்டிக் கொண்டான்.

"ஆமா... இப்ப நந்தினிக்கு என்ன வயசாகுது..?" மேலும் தொடர்ந்தான்.

" எதுக்கு... நீ இங்கயே 'இண்டர்வியூ' பண்ண போரியா?"

"இல்லைடா... ஒரு அறிமுகத்துக்கு தான் கேட்டேன்... கொஞ்ச நாளாவே வெறுபாதான் நடந்துக்கிற... ஏன்னு எனக்கு தெரியும்..."

"ஏன்...?''

"அது சரி... நேத்து நளினாவ 'பஸ்' ஏற்றிவிட்டுட்டு எத்தன மனிக்கு வந்த... எப்ப மறுபடியும் ஊருக்கு வரா?"


'அட பாவி. என் தலையில கல்ல தூக்கி போட்டியே' என நினைத்துக் கொண்டேன். இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அக்கனம் நந்தினியைப் பார்த்தேன். முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. முதலில் கண்ட சிரிப்பும் கூட மரைந்து போய் இருந்தது. இப்போது அவன் பேசியதை கேட்க விரும்பாதவள் போல் பார்வைவை வேரு பக்கம் வைத்திருந்தாள். நான் ஒன்றும் பேசாதிருந்தேன். என் முக மாற்றத்தை அறிந்தவனாக மேலும் கேட்டான்.

"நாளைக்கு நந்தினிய 'இண்டர்வியூக்கு' கூட்டிட்டு வரதானே?"

"அவளுக்கு இந்த வேலை பிடிச்சிருக்கிறதா ஒன்னும் சொல்லலையே", நந்தினி என்னுடைய இச்சொல்லை ஆமோதிப்ப்பாள் என்றே நினைத்தேன். அதிலும் மண் விழுந்தது.

"பரவாலை நான் 'ட்ரை' பண்ணி பார்குறேன்", நான் அதிர்ச்சியான பார்வையோடு அவளைப் பார்த்தேன். அவள் அதை கண்டு கொண்டதாக தெரியவில்லை.

"நானும் வேலைக்கு பார்த்துகிட்டு தான் இருக்கேன்.... இவ்வளவு சீக்கிரம் வாய்ப்பு கிடைக்கும்னு எதிர் பார்க்கலை.. இது 'இண்டர்வியூ' மட்டும் தானே... கண்டிப்பாக கிடைக்கும்னு இல்லை... முயற்சி பண்ணி பார்க்கிறேன்" என்றாள்.

எனக்கு தலை சுத்தி போனது. "நீங்க கவலைப் படாதிங்க... அதான் பாரி இருக்கானே... கண்டிப்பா உங்களுக்கு வேலை கிடைக்கும்... ஓரே இடத்தில் வேலை செஞ்சா உங்களுக்கு சுலபம்... 'டிரன்ஸ்போட்' பிரச்சனை இருக்காது... நளினா ஊருக்கு போய்ட்டு வந்ததுக்கு அப்புரம் கொஞ்சம் கஷ்டம் தான்... இருந்தாலும் பிரச்சனை இல்லை... நான் இருக்கேன்..." என்று சொல்லி சிரித்தான்.

அவனது பேச்சு என் இரத்தத்திற்கு தீ மூட்டி கபாலத்திற்கு சூடேற்றியது. கைகள் முடிச்சிட்டு அவன் முகத்தில் குத்த வேண்டும் போல் இருந்தது. நாசமாய்ப் போனவன் என் வாழ்க்கையில் மண் அள்ளி போடுறானே.

தொடரும்...

60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் (15)

அத்தியாயம் 15

"எத்தனை நாளைக்கு ஊர்ல இருக்க போறிங்க?", மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டிருந்த அம்மாவிடம் கேட்டேன்.

"தெரியலைப்பா... நான் போய்ட்டு போன் பண்றேன்".

காலையில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஊரில் இருந்து அழைத்திருந்தார்கள். பாட்டிக்கு உடல் நலமில்லை. மாமாதான் தொலைபேசி இருந்தார்.

"நந்தினியையும் கூட்டிக்கிட்டு போறிங்களா?"

" இல்லைப்பா நந்தினி இங்கயே இருக்கட்டும். மாமா ஏதோ பேசனும்னு சொல்றாரு..."

காலையில் எழுந்து இன்னமும் முகம் கழுவாமல் பல் விலக்காமல் அரைத் தூக்க மயக்கத்தோடு அமர்ந்திருந்தேன். அம்மா கண்ணாடியில் தன்னை சரி செய்து கொண்டிருந்தார். அரை நூற்றாண்டைக் கடந்த வாழ்க்கை அவருடையது. அம்மா இன்னமும் திடகாத்திரமாக இருக்கிறார்.

அவரிடம் எப்போதுமே ஒரு மன உறுதி இருக்கிறது. அப்பா இறந்த பின் தனியாளாக தான் என்னை வளர்த்தார். எந்த சிரமமும் இல்லாமல் வளர்ந்துவிட்டேன். எத்தனை முறை அவரிடம் கோபித்துக் கொண்டுள்ளேன். சில சமயங்களில் அதை யோசிக்கையில் வருத்தமாக தான் இருக்கிறது.

"என்னப்பா தூக்கமா இருந்தா போய் படுத்துக்க. நான் கிளம்புறேன்''.

"இல்லைமா, 'அடுத்த மாசத்துல ஒரு 'பிராஜெக்ட்' ஆரம்பிக்க இருக்காங்க. நான் அந்த இடத்துக்கு போகனும். கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிகிட்டு மதியானம் தான் வருவேன்".

"மத்தியானம் வெளிய சாப்பிட்டுக்குவியா.... அப்படினா நந்தினிய ராத்திரிக்கு மட்டும் சமைச்சிட சொல்லு".

" ம்ம்ம்... இல்லைமா... இன்னிக்கு முதளாலி வீட்டுல 'டின்னர்' இருக்கு..." தயங்கி சொன்னேன்.

" ஹம்ம்ம்... வீட்டுல சாப்பிட உனக்கு அவளோ கஷ்டமா இருக்கு...".

வெளியே அப்பாவின் கார் ஒரு ஓரமாக இருக்கும். அதை அவ்வளவாக உபயோகிப்பதில்லை. பழுதுபடாமல் இருக்க அம்மா சந்தைக்கு போகவும், அவருடைய வேலைகளுக்கு உபயோகித்துக் கொள்வார்.

நானும் பல முறை சொல்லி இருக்கேன் அந்த காரை விற்று புதிய கார் வாங்க. அம்மா ஒப்புக் கொண்டதில்லை. ஏன் நான் சம்பாதித்து புதிதாக வீடு வாங்கிவிட்ட போதும் பழைய வீட்டை விற்க மறுத்துவிட்டார். கல்யாணத்துக்கு முன்பு அம்மா அங்குதான் இருந்தார். நான் கேலாலம்பூரிலேயே வேலை பார்த்து வந்தேன்.

நான் அப்பாவின் காரை சாவி கொடுத்து வைத்தேன். இயந்திரயம் சூடாகட்டும் என்று.

"தனியாதான் போக போறிங்களா... பார்த்து போங்கம்மா..."

"இவ்வளோ நாளும் தனியாதானெப்பா இருந்தேன்... இங்க அடி வாசலுக்கு போய்ட்டு வர என்ன இருக்கு".

நந்தினி அவ்வளவாக பேசவில்லை. தன் குடும்பத்தை பார்க்க அழைத்துச் செல்லாமல்விட்ட ஆதங்கமா என்றும் புரியவில்லை. அம்மா கிளம்புவதற்காக பணிவிடைகளை செய்துக் கொண்டிருந்தாள்.

"என்ன விசயமா மாமாகிட்ட பேசப் போறிங்க... என்கிட்ட கூடவா சொல்லக் கூடாது?".

அம்மா சிரித்து மட்டும் வைத்தார். வேறு பதில் இல்லை.

" நான் உன்கிட்ட என்னப்பா மறைக்க போறேன்...." நெடுமூச்செறிந்து மீண்டும் தொடர்ந்தார்.

"மாமாவுக்கு வயசாகிடுச்சு... அடிக்கடி உடம்புக்கு முடியாம போய்டுது.. தோட்டத்து வேலை எல்லாம் எதும் சரியா சொய்ய முடியரதில்லையாம்...".

எனக்கு 'பக்' என நெஞ்சி உறுதியது. இப்படி இருக்கும் மனிதனிடம் ஒரு வருடம் முடிந்து விவாகரத்து கதையை தொடங்கினா என்ன ஆவது?

"அப்ப தோட்ட வேலையெல்லாம் யார் பார்த்துக்கிறாங்க?"

"வேலைக்கு ஆள் வச்சி பார்த்துக்கிட்டாராம்... யாரும் சரியா வேலை செய்யறதில்லையாம்... கொஞ்ச நாள்ல விட்டுட்டு போட்டுறாங்களாம்... அதுவும் இல்லாம இந்த காலத்து ஆளுங்களுக்கு விவசாயத்துல நாட்டமும் இல்லாம போய்டுச்சி இல்லையா..."

அம்மா கிளம்ப ஆயத்தமானார். "பசியார செஞ்சி வச்சிருக்கேன். சாப்பிட்டு போங்க அத்தை" நந்தினி கூறினாள்.

"இல்லைமா... நான் சீக்கிரமா வீட்டுக்கு போய்டுவேன். அங்க சாப்பிட்டுக்கிறேன். இன்னிக்கு வீட்டில ஒன்னும் சமைக்க வேணா... பாரி ராத்திரி வெளிய போறானாம். நீயும் அவன் கூட வெளிய சாப்பிட்டுக்கோ..."

ஐய்யோ என்ன கதை இது... ஊருக்கு கிளம்புவதும் இல்லாமல் பிரச்சனையில் மாட்டி விட பார்க்கிறாரே... நான் எப்போது அவளை அழைத்து போவதாக சொன்னேன்.

"நான்..." பேச வாயெடுத்த மாத்திரத்தில் அம்மா தொடர்ந்தார்.

" நந்தினியயும் கூட்டிடு போப்பா... ராத்திரி அவ இங்க தனியா இருக்க வேணா... சரி நான் கிளம்புறேன்... போனதும் 'போன்' போடுறேன்".

எனக்கு நெருடலாக இருந்தது. நந்தினியின் முகத்தை பார்த்தேன். அவள் வாசலில் கிளம்பும் காரை பார்த்தபடி இருந்தாள். அவள் அங்கேயே நின்றிருந்தாள். நானும் வேலைக்கு கிளம்ப மேல் மாடியை நேக்கிச் சென்றேன்.

தொடரும்...