Thursday, August 28, 2008

60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் (1)

அத்தியாயம் 1

நான் வாயடைத்துப் போய் உட்கார்ந்திருந்தேன். வாழ்க்கை நிலையற்றது. நினைப்பதெல்லாம் நடந்துவிடுவதில்லை. நான் போட்ட திட்டத்திற்கு சரியான பதிலடியாய் விழுந்தது அம்மாவின் தொலைபோசி அழைப்பு. நான் என்ன செய்வது. நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாய் அமைவது தானே இயல்பு.

இப்பிரச்சனைக்கு நான் மட்டும் காரணமாக இருந்துவிட்டால் பரவாயில்லை. நளினா என்றொருத்தி இருக்கிறாளே. அவளை சமாளிக்க வேண்டும். இல்லை என்றால் அம்மாவை சமாதானப் படுத்த வேண்டும். எப்படிப் பார்த்தாலும் நான் தப்பிப்பது சிரமம் தான். ஒரு பக்க அடி நிச்சயமாய் காத்திருக்கிறது.

நளினா, என் அழகிய இராட்சசி. சுருக்கமாகச் சொன்னால் என் அன்புக் காதலி. வேண்டாம் என்று சொன்னால் நளினாவின் மூக்குச் சிவந்துவிடும். சாதாரணமாகவே ‘லொட லொட’வென வாய்யடிப்பவள். சாதகமாக இல்லாத ஒரு விசயத்தைச் சொன்னால் என்னை வறுத்தெடுத்துவிடமாட்டாளா? கோபமாய் இருந்தாலும் நளினாவை ரசிப்பவன் நான்.

நேற்றிரவு நளினா ‘எஸ்.எம்.எஸ்’ செய்திருந்தாள். எப்பொழுதும் பேசும் சங்கதி தான். அவள் சலிக்காமல் கேட்கும் கேள்வி. நானும் சலிக்காமல் பதில் சொல்லும் கேள்வி.

“உன்னைப் பார்கனும் போல இருக்கு, மூனு வாரமா உன்னைப் பார்க்காம ரொம்ப ‘மிஸ்’ பன்றேன். உனக்கு என்ன பத்தின ஞாபகம் இருக்கா இல்லையா? என்னைக் கண்டுக்கவே மாட்டுறயே?”. பதிலளித்தேன். வழக்கம் போல் மீண்டும் மீண்டும் பல கேள்விகள். இராவணனின் தலை போல வளர்ந்துக் கொண்டிருந்தது. பாதி இராத்திரி கடந்துவிட்டது. ஒரு வேளை அவளுக்கு தூக்கம் வந்திருக்க வேண்டும்.

“ஓகேடா, நான் தூங்கப் போறேன், குட் நைட்”, என முடித்தாள். நல்ல வேலையாக எஸ்.எம்.எஸ் புயல் ஓய்ந்தது. இல்லையென்றால் அன்று சிவராத்திரியாகத் தான் முடிந்திருக்கும்.

நளினாவின் கேள்வியை மீண்டும் என்னை நான் கேட்டுக் கொள்கிறேன். “உனக்கு என் ஞாபகம் இருக்கா இல்லையா”. எனக்கு பதில் தெரியவில்லை. அவள் ஞாபகம் இல்லாமல் இல்லை. ஆனால் அவளது ஞாபகம் என்னைப் பெரிதாகப் பாதிப்பது இல்லை.

மூன்று வாரமாக வேலைப் பளு என்னை வாட்டிவிட்டது. வேலைகளுக்கிடையே நளினாவின் தெலைபேசி அழைப்புகளும், குறுஞ்செய்திகளும் குறைவில்லாமல் வந்துக் கொண்டிருக்கத்தான் செய்தது. 24 மணி நேரமும் நான் அவள் அருகில் இருந்தாலும் போதாது. சில சமயம் அவள் அன்புத் தொல்லைகள் சின்ன சின்னக் கோபங்களை ஏற்படுத்தும். அவள் குரலைக் கேட்டவுன் தண்ணீர் பட்ட நெருப்பாய் என் கோபம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

நளினாவை விட ஒரு படி மேல் இருப்பவர் என் அம்மா. கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டு எனக்கு எப்போது விடுப்பு கிடைக்கும் என காத்திருப்பார். தொடர்ந்தாற் போல் நான்கு நாட்கள் பொதுவிடுமுறை என தெரிந்தால் போதும், ‘வீட்டுக்கு வாடா’ என புராணம் பாட ஆரம்பித்துவிடுவார். இந்த அன்பு தொல்லைகளுக்குக் காரணமாய் அமையும் தொலைபேசியை என் மனம் பல முறை கொச்சை வார்த்தைகளில் திட்டித் தீர்த்திருக்கின்றது.
விடுமுறைக்கு அம்மா போட்டிருந்த திட்டம் எனக்குப் பிடிக்கவில்லை. நான் என் பாட்டிக்கு செல்ல பேரன் தான். பள்ளிப் பருவங்களில் நான் ஓடி ஆடிய தோட்டபுரம். மீன் பிடிக்க கற்றுக் கொண்டதும், கண்ணி வைக்கக் கற்றுக் கொண்டதும் தோட்டபுரத்தில் தான். ஆனால் நன் இப்போது சிறுவன் இல்லை. பெரியவர்களின் வற்புறுத்தல்களை என் சுதந்திரத்துக்கு முட்டுக் கட்டையாகவே கருதுகிறேன். பாசம் எனும் வார்த்தை நம் எண்ணங்களை பலமாக பாதிக்கும் ஆயுதமாகவே தெரிகிறது.

எனக்குத் தோட்டபுரம் போகப் பிடிக்கவில்லை. கொசுக் கடியும், மாட்டுச் சானியின் வாடையும் எனக்கு நரகமென தெரிகிறது. சிறுபிள்ளையாக இருந்த போது என் மாமன் பிள்ளைகளோடு அந்த மாட்டு தொழுவத்தைச் சுற்றி ஓடி விளையாடி இருக்கிறேன். அப்போதெல்லாம் என் காலில் மிதிபடும் சானியை பெரிதாய் கருதியதில்லை. இரண்டு குவளை நீர் விட்டு அலம்பினால் அகன்றுவிடும் சமாசாரம் என நினைப்பேன். இப்போதெல்லாம் மாட்டுச் சானியும் கோமிய வாடையும் என்னை நா குமட்டச் செய்கிறது.

நம் உறவினர்கள் முன்னேறாமல் இன்னமும் இந்த மாட்டுத் தொழுவத்தைக் கட்டிக் கொண்டு அழுகிறார்களே என என் மனத்திற்குள் பொறிந்துக் கொள்வேன். என் வீட்டுப் பெரியவர்களுக்கு அப்படி இல்லை. தொழுவத்தில் இருக்கும் ஒவ்வொரு பசுவும் அவர்களுடை பிள்ளைகள். புல் வைக்கும் போதும், பால் கறக்கும் போதும் மறுமொழி பேசாத அந்த ஜீவன்களோடு இவர்கள் பேச மறப்பதில்லை.

நாளை முதல் மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக விடுமுறை விழுந்திருக்கிறது. என் அம்மாவை பற்றி சொல்லவா வேண்டும். இதைக் கண்டு கொண்டு வர சொல்கிறார். நீ வீட்டிற்கு வந்துவிட்டல் இருவரும் சேர்ந்து பாட்டி வீட்டிற்குக் கிளம்பிவிடலாம் என்கிறார். நான் போகாவிட்டால். கண்டிப்பாக அழ ஆரம்பித்துவிடுவார். என்ன செய்வது, குடும்பத்தில் ஒரே மகனாகப் பிறந்துவிட்டல் பெரியவர்களின் கண்கானிப்பு எப்படி அமையும் என்பது எனக்குதான் தெரியும்.

போன விடுமுறையும் இப்படிதான் ஒரு வழியாக அடம்பிடித்து என்னை வீட்டிற்கு வரவழைத்துவிட்டார்கள்.

“டேய் பாரி, உனக்கு அப்படி என்னடா தலை போற வேலை? கோமதி ‘ஆன்ட்டி’ மகன் கூட கோலாலம்பூரில் தானே வேலை செய்யுறான், அவனை பாரு ஒரு நாள் ‘லீவு’ கிடைச்சாலும் வீட்டுக்கு ஓடிவந்துடுறான். குடும்பத்து மேல அவனுக்கு இருக்கிற அக்கரைக் கூட உனக்கு இல்லையேடா. அதே வெளியூர் போகலாம் வாடான்னு சொன்னா போதும் முதல் ஆளா வந்து நிக்குற. கடைசி காலத்துல கஞ்சி ஊத்துவனு உன்ன நம்பி இருக்கேன் பாரு, என்ன சொல்லனும்”

கோமதி ‘ஆன்ட்டி’யின் மகன் என்ற சொல் என் காதுகளில் விழுந்ததும் எனக்கு கொஞ்சம் சுரனை வந்தது. அவன் வேறு யாரும் இல்லை. என் நண்பன் அரவிந்தன் தான். ‘பூவிருக்கும் இட்த்தில் தானே வண்டுக்கு வேலை’ என நினைத்துக் கொண்டேன்.

நான் அப்போதுதான் தூங்கி எழுந்திருந்தேன். காலையிலேயே அம்மா சுப்ரபாதத்தை ஆரம்பித்துவிட்டார். நான் என் காதுகளை செவிடாக்கிக் கொண்டேன். அம்மாவின் போதனைகளை கேட்டுக் கேட்டு அலுத்துப் போய்விட்டது. அவ்வப்போது சரி என்பதற்கு அறிகுறியாக தலையாட்டிக் கொண்டேன். என்ன கேள்விக்காக தலையாட்டினேன் என எனக்கேத் தெரியவில்லை. வீட்டிற்கு வருவதற்கு வேம்பாக கசக்கும் என் சுபாவம் அம்மாவிற்குப் பழகிபோய் இருக்க வேண்டும்

எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கிறது. போன வருடம் சீன பெருநாளின் சமயம் என் தாத்தாவின் முதலாம் ஆண்டு தவசமும் வந்தது. சீன பெருநாள் என்றாலே எப்படியும் ஒரு வாரம் விடுமுறையாவது கிடைத்துவிடும். தலைநகரின் நிலமையைச் சொல்லத் தேவை இல்லை. தொலைதூர பயண பேருந்து டிக்கட்டுகளின் விலை விண்ணை முட்டி நிற்கும். எல்லோரும் ஊரைக் காலி செய்து போனது போலத் தலைநகரம் வெறிச்சோடிவிடும்.

அச்சமயம் நான் ஊருக்குப் போகவில்லை. என் தாத்தாவின் தவசத்தில் கலந்துக் கொள்ளவில்லை. நளினா எனக்கு முக்கியமாகத் தெரிந்தாள். அந்த ஒரு வார விடுமுறையில் அவளோடு நான் போக இருந்த ‘கெந்திங் மலை’ பயணம் தான் நினைவில் நின்றது.

பெண்கள் பக்கத்தில் இருந்தால் ஆண்களுக்குப் புத்தி பேதலித்துவிடும் என சொல்வார்களே. அந்த பாதிப்பாகதான் இருக்குமோ? எனக்குத் தெரிந்து நிச்சயமாக இல்லை. இது நானே சுயமாக எடுத்த முடிவுதான். மற்றவர்கள் என்னைப் பைத்தியக்காரன் என நினைத்தாலும் பரவாயில்லை. எனக்கு நளினாவுடன் இருக்கும் பொழுதுகள் தான் முக்கியமாய் பட்டது. அவள் என் இனியவள்.

“உங்க பாட்டிக்கு வயசாயிடுச்சுடா. பார்க்கப் போகும் போதெல்லாம் உன்னை பற்றி பேசாத நேரமில்லை. அந்த வயசான மனுசி உன் மேல வச்சிருக்கும் பாசம் கூடவா உனக்கு புரியல. உன் மாமாவும் பண்ணை வேலைகளிலேயே இருந்திடுரதால, அவங்ளுக்கு வாழ்க்கைப் போர் அடிச்சி போகுது. சில சமயம் சொந்தமாகவே பினாத்த ஆரம்பிச்சிட்டாங்க”.

அம்மா எதற்காக சம்பந்தம் இல்லாத விசயங்களை பேசிக் கொண்டிருக்கிறார் என யோசித்தேன். இளஞ்சூட்டோடு இருக்கும் தேனீரை பருகியவாறு அம்மா பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். சட்டென மாமாவின் நினைவு வந்தது. அந்நினைவு நந்தினியின் நினைவை தூண்டியது. நந்தினி என் தாய் மாமனின் மூத்த பெண். அவளைப் பார்த்து 5 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

“பெரிய மாமா பொண்ணு என்ன பண்ணிக்கிட்டு இருக்கா மா?”

“டேய் பாரி, நான் என்ன பேசிகிட்டு இருக்கேன், நீ என்ன கேட்க்குற?”

எதற்காக அப்படிக் கேட்டேன்? எனக்கே தெரியவில்லை. என்னை அறியாமல் வந்துவிட்ட்து அந்தக் கேள்வி.

“நந்தினி நம்ம டவுன்ல உள்ள துணிக் கடையில் ‘கிராணி’ வேலைப் பார்த்து வரா, பினாங்குப் பக்கம் ஒரு பையனுக்கு பேசி நிச்சயம் பண்ணிருக்காங்க. அன்னிக்கு உங்க மாமாவ பார்த்த போது கூடிய சீக்கிரமா அவளுக்கு கல்யாணத்தை செஞ்சி வைக்கனும்னு சொல்லிக்கிட்டு இருந்தாரு. என்ன முடிவு பண்ணி இருக்காங்கனு தெரியல…”

அம்மா பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்த காய்கறி நறுக்கும் மேசை மேல் அமர்ந்து தேனீரை சுவைத்தபடி இருந்தேன். அம்மாவின் முகத்தை நோக்கினேன். அவர் முகத்தில் லேசான கோடுகள் முதுமையை வரைந்துக் கொண்டிருந்தன.

நந்தினிக்கு கல்யாண வேலைகளை ஆரம்பித்துவிட்டார்களா. நந்தினி இன்போது எப்படி இருப்பாள். கண்டிப்பாக முன்பை விட அழகாகதான் இருக்க வேண்டும். ‘பாலிஷ்’ போட்ட பளிங்கு முகம் அவளுக்கு. சிரிக்கும் போது கன்னத்தில் விழும் குழி அவள் அழகுக்கு அழகு சேர்க்கும். பள்ளிப் பருவங்களில் நான் அவள் ரசிகனாக இருந்தது நான் மட்டுமே அறிந்த விசயம். காலத்தின் ஓட்டம் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியமைத்துவிட்டிருந்தது.

தொடரும்...

Wednesday, August 27, 2008

ஒரு இளமைத் தொடரின் அறிமுகப் பதிவு


ஹாய்… எல்லோரும் சௌக்கியமா இருக்கிங்களா? நான் பாரிதாசன் பேசுறேன். நாளைக்கு வரப் போகும் தொடரில் நான் தான் ஹீரோ. உங்களுக்கு நான் ஸீரோவா இருக்கலாம். ஏன்னா நான் புது முகம் இல்லையா.

நான் மற்றவர்களிடம் பேசியதை விட என்னக்கு நானே பேசிக் கொண்டது தான் அதிகம். என்னுடைய இந்தப் பழக்கம் உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அப்படிப் பிடிக்கவில்லை என்றால் உங்களுக்கும் அப்பழக்கம் இருக்கிறதென்று அர்த்தம்.

இந்தக் கதையை இல்லை… இல்லை… என் வாழ்க்கை சுயசரிதத்தை அல்லது அதில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நான் தான் சொல்லப் போகிறேன். நான் சொல்வது சுவாரசியக் குறைவாக இருக்கலாம். ஏன் சுவாரசியம் குறையும் என கேட்கிறீர்களா? அதான் சொன்னேன் இல்லையா நான் மற்றவர்களுடன் பேசுவது குறைவென்று.
சொல்லிக் கொள்ளும்படி பெரிய வேலையில் இல்லை (தன்னடக்கம்). அதை நீங்க பிறகு தெரிஞ்சுக்குவிங்க. வயசு 25 ஆகுது. தலைநகரில் இருக்கேன். இப்போதைக்கு நான் ஒரு இளைஞன் என சுருக்கமாகச் சொல்லிக் கொள்கிறேன்.
சரி நாளை சந்திப்போம்.. மறக்காம வந்திடுங்க... ஓ.. சொல்ல மறந்துட்டேன் பார்த்திங்களா இந்தக் கதையில் தலைப்பு:
60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும்.
பி.கு: கதைக்கு தலைப்பை தேர்வு செய்ய உதவிய வல்லவன் அதிஷாவுக்கு நன்றி.

Saturday, August 23, 2008

தீட்டு பட்டுருச்சி!

"ஆயா.... பையனுக்கு பொஸ்தகம் வாங்கனும், ஐயா கிட்ட கேட்டிருந்தேன்",தலையை சொரிந்தபடி நின்றிருந்தான் குப்புசாமி.

குப்புசாமி அந்த கிராமத்தில் தோட்ட வேலை பார்ப்பவன். இது போக மதிய வேளைகளில் கிராமத்தார்கள் சொல்லும் சிறு சிறு வேலைகளை செய்து கைகாசு வாங்கிக் கொள்வான். கஷ்டபடும் குடும்பம்.

அவன் ஆயா என அழைத்தது சின்ன தாயி எனும் கிழவியை. கிழவியின் குடும்பம் வசதிபடைத்தது. கிழவி குப்புசாமியை நீசனை பார்ப்பது போல பார்த்தாள்.

"மாச கடைசி ஆனா ஆளாளுக்கு வந்துடுங்கடா, சண்டால பசங்களா, நாங்க என்ன காச மரத்துலயாடா நட்டு வச்சிருக்கோம்", கடுகடுவென வார்த்தைகளை கொட்டினாள் கிழவி.

"எல்லாம் இந்த குணா பையன சொல்லனும். அவனவன வைக்க வேண்டிய எடத்துல வச்சாதானே, கண்டவனுங்ககிட்ட பழகுறது, இப்ப என்னடானா வீட்டு வாசல்ல வந்து நிக்குறானுங்க" கிழவி முனங்கிக் கொண்டே பணம் எடுக்க போனாள்.

குப்புசாமியின் காதில் அது கேட்காமல் இல்லை. கிழவியின் புத்தி அவன் அறிந்தது தான். அதுவும் இல்லாமல் தற்சமயம் பணம் அவனுக்கு முக்கியம். யார் என்ன சொன்னால் என்ன. பயனுக்கு புதிய நோட்டு புஸ்தகம் வாங்க வேண்டும்.

வேண்டா வெறுப்பாக குப்புசாமியிடம் பணத்தை நீட்டினாள் கிழவி. அதை வாங்கிய குப்புசாமியின் கை அவள் மீது பட்டது. கிழவி ஆத்திரமடைந்தாள்.
"எட்டி நின்னு வாங்கிக்க முடியாதாடா எடுபட்ட பயலே" ஏசியவாரு கையை சேலையில் துடைத்தாள்.

குப்புசாமி முகம் சுளிக்காமல் பணத்தை வாங்கிக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்.

அவன் கிளம்பியதும் துணிகளை எடுத்துக் கொண்டு குளிக்கப் போனாள் கிழவி.

"என்ன பாட்டி, இன்னிக்கு இவ்வளோ சீக்கிரம் குளிக்க போற?" கிழவியின் பேத்தி கண்மணி கேட்டாள்.

"அந்த கீழ் சாதிக்காரப் பய கை என் மேல பட்டுறிச்சுடீ".
"நீ திருந்த மாட்ட பாட்டி".

"அடி போடி தீட்டு பட்டுறிச்சுனு சொல்றேன். இப்பதான் பேச வந்துட்டா".

வேகமாய் குளியலறையை நோக்கிச் சென்றாள் கிழவி. எதிர் பாரா விதமாக தடுக்கி விழுந்து தலையில் பலமான காயம் பட்டது. சற்று நேரத்தில் கிழவி உயிரை விட்டாள்.
****
"டேய் குப்பு! பெரியவர் வீட்டு கிழவி மண்டய போட்டுறிச்சி. உன்ன பந்தல் போட கூப்பிடுறாங்க".

குப்புசாமி மறுபடியும் கிழவி வீட்டை நோக்கி ஓடினான். பந்தல் போட்டு மற்ற வேலைகளை முடித்து திரும்புவதற்குள் அவனுக்கு சோர்ந்துவிட்டது. வீட்டுக்குள் நுழைந்த குப்புசாமியிடம் அவனது மகன் கேட்கிறான்.
"அப்பா நோட்டு புஸ்தகம் வாங்கிட்டியா?"
"டேய், செத்து போன கிழவி கொடுத்த காசு டா, பொஸ்தகம் வாங்கினா தீட்டாகிடும், அடுத்த சம்பளதில் அப்பா வாங்கி கொடுக்கிறேன் சரியா".

உடையை மாற்றிக் கொண்டு கள்ளுக் கடை நோக்கி நடக்கிறான் குப்புசாமி.
(பி.கு: இது ஒரு மீள்பதிவு. எனது வாழ்க்கைப் பயணத் தளத்தில் எழுதப்பட்டது)

Wednesday, August 20, 2008

ஒரு கிழவனின் கெட்ட கனவு

"எவ்வளவு ஆச்சு?"

"பதினைந்து வெள்ளிங்க"

"விலை அதிகமா இருக்கே?"

"விலைவாசி ஏறி போச்சிங்க. கட்டுப்படி ஆக மாட்டுது."

பணத்தைக் கொடுத்துவிட்டு வீட்டை நோக்கி நடந்தார் முத்து.

"யோவ் கிழவா நில்லு" முத்துவின் பின்னால் இருந்து ஒரு குரல்.

அவர் திரும்பிப் பார்த்தார்.

"பிள்ளைய பெத்து ஊர் மேய விட்டு வச்சிருக்க. என்ன ஏதுனு பார்த்துக்க மாட்டியா?"

அவருக்கு எதும் சரியாக புரியவில்லை. அந்த இளைஞனைப் பார்த்து திரு திருவென விழித்தார்.

"நான் பேசிகிட்டு இருக்கேன். தெனவெட்டா நிற்குற".

அவன் விட்ட முதல் குத்து மூக்கில் பட்டு நரக வேதனையைக் கொடுத்தது. இரண்டாம் அடி தவிர்க்க முடியாமல் மார்பில் பதிந்தது. முத்து நிலை தடுமாறி சாலை ஓராமக இருந்த புதரில் விழுந்தார்.

அவர் பேச அசுவாசப்படுத்திக் கொள்வதற்குள் அந்த இளைஞன் சொன்னான்.

"யோவ் பெருசு. உன் பையன்கிட்ட சொல்லி வையி, இன்னொரு தடவ என் தங்கச்சி பின்னாடி சுத்துரானு கேள்விபட்டேன் வீடு புகுந்து உதைப்பேன்".

"தம்பி எதுவா இருந்தாலும் வீட்டுக்கு வாங்க பேசிக்கலாம். இப்படி நடு ரோட்டில்..".

"மூடுயா… வந்துட்டான்".

நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறி மறைந்து போனான் அந்த இளைஞன்.

முத்துவின் மூக்கிலிருந்து லேசாக இரத்தம் கசிந்தது. கல்லில் மோதி உடைந்த மூக்குக் கண்ணாடியை எடுத்துப் போட்டுக் கொண்டார். சிதறிய பொருட்களை மீண்டும் பையில் சேகரித்துக் கொண்டு கிளம்பினார்.

****

"என்னப்பா ஆச்சு? ரத்தமா இருக்கே?" என அபிநயா கேட்டாள்.

"இல்லைமா, வர வழியில் நாய் துரத்தி அப்பா கீழே விழுந்துட்டேன்"

இரத்தக் கசிவை துடைத்துக் கொண்டார். மனக் கண்ணீரை யார் துடைக்க முடியும். இடிந்து போய் அமர்ந்திருந்தார்.

அன்று மாலை

சந்துரு வேலை முடிந்து வீடு திரும்பினான். முத்து அவனை முறைத்துப் பார்த்தார். அவரின் கோபம் உச்ச நிலையை அடைந்தது. சந்துருவும் ஒருவாராக புரிந்துக் கொண்டான்.

"யார்டா அது?"

"லலிதாப்பா. எனக்கு அவள ரொம்ப பிடிச்சிருக்கு. அவளதான் கட்டிப்பேன்".

"நல்ல குடும்பமா தெரியல. சரி வராது".

"நான் வாக்கு குடுத்துட்டேன்".

"என்னால ஏத்துக்க முடியாது".

இரண்டு நாட்களுக்கு பிறகு

நேற்றிரவிலிருந்து சந்துருவை காணவில்லை. அவனோடு லலிதாவும் காணாமல் போய்விட்டாள். லலிதாவின் வீட்டிலிருந்து ஆட்கள் வந்திருந்தார்கள். வீட்டின் முன் நின்று கண்டபடி பேசி வம்பிழுத்தார்கள்.

"என் புள்ள செத்துட்டான், அவனை தேடி இந்தப்பக்கம் வராதிங்க". முத்து ஆத்திரத்தோடுச் சொன்னார்.

மீண்டும் பல ஏச்சு பேச்சுகளுக்குப் பிறகு அவர்கள் கிளம்பிவிட்டார்கள்.

காலங்கள் கடந்துவிட்டது. மௌனமாக வாழ்க்கையும் ஓடிக் கொண்டிருந்தது.

பெரியவர்கள் சொல்வார்கள், பிள்ளைகள் பெற்றவர்கள் மீது வைக்கும் நம்பிக்கை கடமை, பெற்றோர்கள் பிள்ளைகள் மீது வைக்கும் நம்பிக்கை எதிர்பார்ப்பு என்று. பெற்றோர்கள் கடமைத் தவறுவது குறைவு. பிள்ளைகளிடம் இருக்கும் எதிர்பார்ப்புகள் பல ஏமாற்றங்களாகவே அமைகிறது என்பது வேதனையான உண்மை.

"அப்பா நான் வேலைக்குப் போயிட்டு வரேன்". அபிநயா தன் கைப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு வாசலை நோக்கிச் செல்கிறாள்.

"சரிமா பார்த்து போயிட்டு வா".

முத்து அபிநயாவின் எதிர்காலத்தை நினைத்து தன் எண்ணச் சிறகை பறக்கவிடுகிறார். அவளின் எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பதில் மட்டுமே அவரது சிந்தனை மூழ்கிக் கிடக்கிறது.

அன்றய தினம் வேலை முடிந்தவுடன் அபிநயா தன் காதலனைச் சந்திக்கச் செல்கிறாள். இனி அவள் வாழ்க்கை அவள் முடிவினில்.

Tuesday, August 19, 2008

சாலையோர சித்தன்


வாழ்க்கையின் எதார்த்தங்கள் இனிமையானது. எதிர்பார்ப்புகளும் அதனால் எற்படும் ஏற்றமும் ஏமாற்றமும் வாழ்வை வளப்படுத்துகிறது. நாம் சந்திக்கும் அனைவரையும் நினைவில் வைத்துக் கொள்வதில்லை. சிலரை எப்பொழுதோ பார்த்திருப்போம், ஆனால் அவர்களின் நினைவுகள் எப்பொழுதும் இருக்கும். இதற்கு காரணம் நாம் அவரை சந்திக்கும் சூழலாக கூட இருக்கலாம்.

நான் ரவிகுமார். இப்பொழுது பினாங்கில் இருக்கிறேன். இன்னும் சற்று நேரத்தில் ஈப்போவிற்கு பயணம் செய்யப் போகிறேன். வியாபார நிமித்தமாக இங்கு வந்துள்ளேன். வெள்ளிக்கிழமை பொது விடுமுறை நாளாகிவிட்டது. கண்டிப்பாக வெளி மாநிலத்தில் வேலை செய்பவர்கள் பலரும் வீடு திரும்பி இருப்பார்கள். இரண்டு நாட்கள் கடந்துவிட்டது. நாளை திங்கள். வேலை நாள். விடுமுறையை கழித்து பலரும் புறப்பட ஆயுத்தமாயிருப்பார்கள்.

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் முதுகை லட்சக் கணக்கான வாகனங்கள் இஸ்திரி செய்துக் கொண்டிருக்கும். நெடுஞ்சாலை நுழைவாயிலும், வெளியேரும் இடத்திலும் நெரிசல் நிச்சயம். சுங்கச் சாவடியில் அதிக நேரம் நிற்க வேண்டிவரலாம். வாகனத்தை நத்தையைப் போல் நகர்த்திக் கொண்டு போவது எரிச்சலான ஒன்று. இப்படிபட்ட சூழ்நிலைகளில் வாகனத்தை நிறுத்திவிட்டு நடந்துவிடலாமா என்று கூட நான் நினைத்தது உண்டு.

சுருங்கச் சொன்னால் விடுமுறை நாட்களில் நெடுஞ்சாலையை பயன்படுத்துவது எனக்கு பிடிக்காது. பழைய சாலையில் பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்தேன். எனக்கு தோதாக வாகனமும் அதிகம் இல்லை.

மதியம் மூன்று மணி இருக்கும். சூரியன் தகித்துக் கொண்டிருந்தான். தூக்கம் கொஞ்சமாய் எட்டிப் பார்த்தது. எனது காரை ஒரு மரத்தடியில் சற்று நிறுத்தினேன். அரை மணி நேரம் காரினுள் உறங்கிப் போனேன்.

லேசான பசி வயிற்றை கிள்ளியது. பினாங்கில் பெயர் போனது ‘நாசி கண்டார்’ அல்லவா, சரி ஒரு கை பார்த்துவிடலாமென ஒரு கடையினுள் நுழைந்தேன். சாப்பாடு சொல்லிவிட்டு ஒரு இடமாய் பார்த்து அமர்ந்துக் கொண்டேன்.

அறிமுகம் இல்லாத சிறுவன் ஒருவன் என்னை நோக்கி வருவதைக் கண்டேன். கசங்கியச் சட்டை, சற்றே கலைந்த முடி, முட்டி அளவிளான அரை காற்சட்டை, ஒட்டி உலர்ந்து போன உடல், இவையாவும் அவன் வறுமையை எடுத்துரைத்தது.

“அண்ணே பலகாரம் வாங்கிக்கிறீங்களா?” இப்பொழுது அவன் என் எதிரில் என்னை நோக்கி புன்சிரிப்புடன் கேட்கிறான்.

அவன் கையில் இருந்த பிலாஸ்டிக் கூடையை என் முன் காட்டினான். பலகார வகைகள் சிறு சிறு பைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்தன.

“வேண்டாமப்பா” இது எனது பதில்.

அவன் இடத்தைவிட்டு நகர்ந்தான். எனது சாப்பாடு வந்ததும் அதை ருசிக்கத் தொடங்கினேன். கை கழுவி விட்டு வந்த பொழுது மறுபடியும் அச்சிறுவன் என் கண்ணில்பட்டான். ஆணும் பெண்ணுமாக இருவர் அமர்ந்து இருந்தார்கள். கணவன் மனைவி என நினைக்கிறேன். பலகாரக் கூடையை அவர்களிடம் நீட்டினான். வேண்டாம் என்பதற்கு அறிகுறியாக தலையை அசைக்கவும், சிறுவன் அவ்விடத்தைவிட்டு சென்றான்.

சாப்பாட்டிற்கு பணத்தை செலுத்திவிட்டு திரும்பினேன். மீண்டும் என் கண்ணெதிரில் அவன்.

“சாப்டாச்சா அண்ணே, பலகாரம் வாங்கிக்கிறீங்களா”, மறுபடியும் என்னை நோக்கிக் கேட்டான்.

“வேண்டாம்பா, வயிறு நிறைய சாப்பிட்டாச்சி”, எனக் கூறியவாறு எனது காரை நோக்கி நடந்தேன்.

அவன் அக்கடை ஐந்தடியின் ஓரத்திற்கு சென்றான். கையிலிருந்த பலகார கூடையை கீழே வைத்துவிட்டு, அந்த பக்கம் வந்து போவோரிடம் பலகாரம் வேண்டுமா என அதே பல்லவியை படித்துக் கொண்டிருந்தான்.

அவன் பேச்சில்தான் எத்தனை மரியாதை. கனிவான பார்வை. எவ்வளவு நேரமாகியும், கொஞ்சமும் சலிப்பு தட்டாமல் அதே தொனியில் அடுத்தவரிடம் கேட்கிறான். “அக்கா பலகாரம் வேணுமா”, “அங்கில் பலகாரம் வேணுமா”. மிஞ்சி போனால் அச்சிறுவனுக்கு 10 வயது தான் இருக்கும். என்ன ஒரு துடிப்பு. தளர்ச்சியில்லா விடா முயற்சியோடு காரியத்தில் கருத்தாய் இருக்கிறான்.

நான் காரில் அமர்ந்து பயணத்திற்கு தயாரனேன். இப்பொழுது அவன் என் கார் கதவருகே நிற்கிறான். முகத்தில் அதே இளஞ்சிரிப்போடு. ஜன்னலை கீழிறக்கினேன்.

“வீட்டில இருகறவங்களுக்கு பலகாரம் வாங்கிட்டு போறிங்களா அண்ணே, தம்பி தங்கச்சிக்கு கொடுக்கலாம், பாருங்க எல்லாம் சைவம்தான்”, கூடையை மறுபடியும் நீட்டினான்.

அவன் முகத்தை பார்த்தேன். முன்பிருந்த அதே புன்னகையை பரிசளித்துக் கொண்டிருந்தான்.

“தம்பி, பலகாரம் எதுவும் வேண்டாம், இந்தா, இந்த காச வச்சிக்க” என்று சிகப்பு நோட்டு ஒன்றை அவன் சட்டை பையில் சொருகினேன். நன்றி கூறி நான் கொடுத்த பத்து ரிங்கிட்டோடு மீண்டும் ஐந்தடிக்கு ஓடினான்.

எனது காரை செலுத்தத் தயாரானேன். அச்சிறுவனை கண்டேன். அவனது செயலை கண்டு அதிர்ந்து போனேன். நான் கொடுத்த பணத்தை வேறோருவனிடம் நீட்டிக் கொண்டிருந்தான்.

“தம்பி, இங்க வா”, என அவனை அழைத்தேன்.

“பலகாரம் வேணுமாண்ணே”, ஒன்றூம் தெரியாதவன் போல் கேட்டுக் கொண்டு என்னருகே வந்தான்.

“நான் கொடுத்த காச எதுக்கு அந்த ஆளுகிட்ட கொடுத்த?”.

“பாவம் அண்ணே அவரு, கண் தெரியாதவரு, இந்த பக்கம் தான் சுத்திகிட்டு இருப்பாரு, சாப்டாரா இல்லையானு கூட தெரியல”,

நான் பணம் வாங்கிய அந்த மனிதனை நோக்கினேன். தூரத்தில் இருந்த அவனது நடை பாவனை அவன் குருடன் என்பதை நிச்சயப்படுத்தியது.

சிறுவன் மீண்டும் தொடர்ந்தான், “சில சமயம் விற்று போக மீதம் இருக்கும் பலகாரத்தை கொடுப்பேன், இன்னிக்கு காலையில் இருந்தே எந்த வியாபாரமும் இல்லை. நீங்க கொடுத்த காச மட்டும் கொண்டு போனால் அம்மா திட்டுவாங்க. முன்னே ஒருத்தர் இப்படிதான் காசு கொடுத்துட்டு போனாரு. வீட்டுக்கு கொண்டு போனப்ப அம்மா கேட்டாங்க. என்னடா பலகாரம் விக்காம இருக்கு காச மட்டும் கொண்டுவந்திருக்கியேனு. உள்ளத சொன்னேன். உழைக்காமல் வரும் பணம் நிலைக்காது. நாம திடகாத்திரமா இருக்கோம். உழைச்சி வாழ முடியும். அடுத்தவர் கொடுப்பதை வாங்குவதுக்குப் பேர் பிச்சை. உழைக்க முடியாதவங்கதான் பிச்சை எடுப்பாங்க அப்படினு சொன்னாங்க. நான் இன்னும் தெம்பாக இருக்கேன் அண்ணே” எனக் கூறினான்.

அவன் மன உறுதியைப் பார்த்து நெகிழ்ந்துப் போனேன்.

“எல்லாம் எவ்வளவு தம்பி?”

“எல்லா பலகாரத்தையும் நீங்களே வங்கிக்க போறீங்களா அண்ணே”,

நான் சரி என்பதற்கு அடையாளமாக தலை அசைத்தேன். பலகாரங்கள் அனைத்தையும் ஒரு பையில் போட்டான்.

“நுப்பத்தி அஞ்சி வெள்ளிதான்னே”,

பலகாரம் நிறப்பப்பட்ட பையை என் பக்கத்து இருக்கையில் வைத்துவிட்டு பணத்தை கொடுத்தேன். நன்றி கூறிய அவன் மீண்டும் ஒரு சிரிப்பை பரிசளித்துவிட்டு சட்டென அங்கிருந்து கிளம்பினான். அவன் என் பார்வையிலிருந்து மறையும் வரை அவனைப் பரர்த்துக் கொண்டிருந்தேன்.

செய்யும் தொழிலே தெய்வம் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதை இச்சிறு நிகழ்வு எனக்கு உணர்த்தியது. அச்சிறுவனை மறுபடியும் என் வாழ்வில் சந்திப்பேனா என்பது சந்தேகம்தான். அவனது பெயரும் எனக்கு தெரியாது. இந்த நிகழ்வும் என்னிலிருந்து மறையாது. அவன் என்றென்றும் எனக்கு போதனை செய்த சாலையோர சித்தன் தான்.

விடியலைத் தேடி

“டேய் ராஜபாகு உங்க ஆத்தா அங்க தூக்கு மாட்டிகிடுச்சுடா, ஆட்டம் போட்டுகிட்டு இருக்க, கிறுக்கு பயலே”, என்று வாயில் இருந்த வெற்றிலை எச்சில் தெரிக்க கத்தினாள் காத்தம்மாள் கிழவி. ஐயோ என்ன இது! கிழவியின் வார்த்தைகள் ஆயிரம் சம்மட்டிகளைச் சேர்த்து வைத்து என் இதயத்தில் அடித்ததைப் போல் இருந்தது. காத்தம்மாள் கிழவி எங்கள் கிராமத்தின் ‘செய்தியாளர்’. தகவல் கிடைத்திருக்காமல் இப்படிச் சொல்லியிருக்க மாட்டாள்.

எங்கள் கிராமத்தில் புதன் கிழமை மாலை வேளைகளில் ரொட்டிக்காரர் வருவது வழக்கம். அவரது மோட்டார் சைக்கிளின் ‘ஹார்ன்’ சத்தத்தை கெட்டவுன் என் நாவில் எச்சில் ஊறத் தொடங்கிவிடும். எனக்கு அப்பொழுது ஏழுவயதுதான் இருக்கும். கிராமத்து பகுதியில் உள்ள தமிழ் பள்ளியில் ஆரம்பக் கல்வியை தொடங்கிய காலகட்டம்.

அன்று ஐந்து மணி வாக்கில் ரொட்டிக்காரரின் மோட்டார் சைக்கிளின் ‘ஹார்ன்’ சத்தம் கேட்டது. என் கால்கள் ஓர் இடமாக நிற்காமல் அலைமோதிக் கொண்டிருந்தது. வாரத்திற்கு ஒரு ரொட்டியாவது வாங்கிச் சுவை பார்க்காவிட்டால் என் மனம் வாடி வதங்கிவிடும். என் தேவையை அறிந்த அம்மா ஐம்பது காசை என் கையில் கொடுத்தார். போய் ரொட்டி வாங்கி சாப்பிடுடா கண்ணா என்று என் தலையை வருடி அனுப்பி வைத்தார்.

எனக்குப் பிடித்த பால் ரொட்டியை வாங்கிக் கொண்டு கோவிலுக்கு அருகில் இருந்த குட்டிச் சுவரில் அமர்ந்துக் கொண்டேன். முதல் கடியை வைப்பதற்குள் காத்தம்மாள் கிழவியின் அதிரடிக் கூச்சல் சத்தம் என்னைச் சிதறடித்தது.
கடவுளே! ஏன் இந்த சோதனை? நான் வெளியே வந்து இன்னும் பதினைந்து நிமிடங்கள் கூட ஆகவில்லையே. அதற்குள் ஏன் அம்மா இப்படி செய்துவிட்டார்? எனக்கு ஆதரவாக இருந்தது அம்மா மட்டும்தானே? இனி யார் என்னைப் பார்த்துக் கொள்வார்கள்? நொடிப் பொழுதில் ஆயிரம் கேள்வி அம்புகள் என்னைத் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தன. சட்டெனச் சுவரில் எட்டிப் பாய்ந்தேன். என் கையில் இருந்த ரொட்டித் துண்டு முண்டியடித்துக் கொண்டு மண்னை கவ்வியது. வீட்டிற்கு விரைந்து ஓடினேன்.

கட்டிலில் அம்மாவின் பிரேதத்தைக் கிடத்தி வைத்திருந்தார்கள். கண்களை திறந்த வண்ணம், சற்று வெளியே தள்ளிய நாக்குடன் அசைவற்ற ஜடமாய் விரைத்து போய் கிடந்தார். என் கண்ணீர் வற்றும் வரை அழுது தீர்த்தேன். அனைத்து இறுதிச் சடங்குகளும் நடந்தாகிவிட்டது. என் அப்பாவோ வீட்டு பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை. இனி என்னை வந்து அழைத்துச் செல்வார் என எதிர்பார்த்துக் காத்திருந்தால் அது என் முட்டாள் தனம்தான்.

நான் சாதரண நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். என் அப்பா வெளியூரில் தங்கி வேலை செய்து கொண்டிருந்தார். அவ்வப்பொழுது பணம் அனுப்பி வைப்பார். இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வந்துச் செல்வார். தந்தையின் பாசம் கிடைக்காதவனாய்த் தான் வளர்ந்தேன். இந்தச் சூழலில் என் அம்மா யாருடைய உதவியையும் எதிர் பார்க்கவில்லை. வீட்டு வேலைகள் போக, ஒழிந்த நேரத்தில் சிறு தையல் வேலைகளை செய்து குடும்பச் செலவுகளைப் பார்த்துக் கொள்வார்.

அம்மா இறப்பதற்கு ஓரிறு தினங்களுக்கு முன் அப்பா வீட்டிற்கு வந்தார். இருவருக்கிடையே ஏற்பட்ட சண்டையில் என் அம்மாவை அடித்துத் துன்புறுத்தினார் அப்பா. அவர்களின் பேச்சு எனக்கு புரியாத புதிராகவே இருந்தது. பயந்து போனவனாய், காரணம் அறிய பக்குவப்படாதவனாய், தடுக்க பலமில்லாதவனாய் ஓர் ஓரமாய் நின்று அழுது கொண்டிருந்தேன். அப்பா தன் துணிமணிகளை எடுத்துக் கொண்டு அன்று இரவே எங்கோ கிளம்பிவிட்டார்.

அதுவே நான் அவரைப் பார்த்த இறுதி நாள். வேறோரு பெண்ணுடன் புதிய உறவை ஏற்படுத்திக் கொண்டதால் தான் இவ்வளவு பிரச்சனைகள் என பின் நாட்களில் அறிந்துக் கொண்டேன். இதன் விளைவாக அனாதையென நடுத்தெருவில் விடப்பட்டேன்.

வீட்டில் காரியம் முடிந்து அனைவரும் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். “பையனை நாங்க அழைச்சிகிட்டு போய் பாத்துக்குறோங்க”, என்றார் என் தாய் மாமன். தன் குடும்பத்தோடு ஆலோசித்து தான் இந்த முடிவை எடுத்தாரா என்பது இன்றளவில் பதில் கிடைக்காத கேள்விதான். இல்லை இவ்வளவு சொந்தங்கள் இருந்தும் என்னைக் கவனிக்காமல் விட்டால் நாலுபேர் பேசும்படி ஆகிவிடுமோ என்பதற்காக இவ்வாறு கூறினாரோ? அவரது இனிப்பான வார்த்தைகளுக்காக ஊரார் மெச்ச, என்னை அழைத்துச் சென்றார்கள்

வாரங்கள் பல கடந்தது. அவர்களும் என்னைப் பள்ளிக்கு அனுப்புவதாக தெரியவில்லை. வீட்டிலும் என்னை ஒரு பாரமாகவே கருதினர். யாரும் முகம் கொடுத்துப் பேச மாட்டார்கள். மொத்தத்தில் உயிருள்ள ஒரு பொருளாய் நடமாடிக் கொண்டிருந்தேன். என் அம்மாவைச் சம்பந்தப்படுத்தி குத்திப் பேசும் பேச்சுகளும் ஏச்சுகளும் எனக்கு மரத்துப் போய்விட்டது.

“உங்க அம்மா என் கிட்ட கொடுத்து வெச்சிட்டுப் போயிருக்காளா? இல்ல உங்க அப்பன் தான் மாச மாசம் கொட்டிக் குடுக்குறானா? இப்ப படிப்பு ஒன்னுதான் உனக்குக் கேடு”, நான் பள்ளிக் கூடம் போகட்டுமா எனக் கேட்டதற்கு அர்ச்சனை செய்தாள் அத்தை. என் பள்ளிக்கூட கனவுகளுக்கு மூட்டை கட்டி வைத்துவிட்டு அவர்கள் கொடுக்கும் சிறு சிறு வேலைகளை செய்துக் கொண்டு வீட்டிலேயே இருக்க ஆரம்பித்தேன்.

சில சமயங்களில் அம்மா மீது சிறு கோபங்கள் தோன்றி மறையும். அம்மா மட்டும் இருந்திருந்தால் நான் இவ்வளவு கஷ்டப்பட தேவையில்லை. நிம்மதியாகப் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டுருந்திருப்பேன் என நினைத்து பல நாட்கள் அழுதிருக்கிறேன். நான் அறியாமல் சிறு தவறுகள் செய்தாலும் அதை பெரிதாக்கி அடிவாங்கச் செய்வாள் அத்தை. ஒரு முறை நான் வீட்டை சுத்தமாக துடைக்கவில்லை என பிரச்சனை எழுப்பினாள். “வேளாவேளைக்கு நல்லா தின்னுற தானே, இந்த வேலைய கூட உன்னால ஒழுங்கா செய்ய முடியாதா”, என என் வலது கையில் கம்பியை காய்ச்சி சூடு வைத்தாள்.

சிறு பிள்ளைகளை சித்திரவாதை செய்தால் காவல் துறையினரிடம் புகார் செய்ய வேண்டுமென என் ஆசிரியர் சொல்லிக் கொடுத்திருக்கிறார். ஆனால் அந்த வயதில் அதையெல்லாம் எப்படி செய்வதென்று எனக்கு தெரியவில்லை. சூடுபட்ட காயத்தால் துடிதுடித்துப் போனேன். அன்றிரவே வீட்டை விட்டுத் தப்பி ஓடினேன். சாலையோரமாக நின்றுக் கொண்டிருந்த லாரியில் ஏறி அமைதியாகப் படுத்துக் கொண்டேன்.

நீண்ட பயணத்திற்கு பிறகு லாரி ஓரிடத்தில் நின்றது. சட்டெனப் பாய்ந்து அங்கிருந்து நகர்ந்தேன். என் பெற்றோரின் சுயநலம் பிள்ளையை எப்படியெல்லாம் பாதிப்படைய செய்கிறது. ஊர் பேர் தெரியாத இடம். ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் மக்களின் நகர வாழ்க்கை. என்ன செய்வதென்று அறியாமல் நாதியற்று கிடக்கும் நான்.

“அண்ணே, நீங்க என்ன வேலை கொடுத்தாலும் செய்யுறேன், கொஞ்சம் சாப்பாடு மட்டும் கொடுங்க’, என்றேன் ஒரு ஒட்டுக் கடை ஓரமாக நின்றவாறு. என்னை ஏற இரங்கப் பார்த்தக் கடைகாரர் “சாப்பாடுலாம் ஒன்னும் கிடையாது கிளம்பு”, என விரட்டினார். பசி மயக்கத்தில் உடல் சோர்ந்து போனேன். வெய்யிலின் தாக்கம் என்னை வறுத்து எடுத்துக் கொண்டிருந்தது. நான் இரண்டு அடி நகர்ந்திருப்பேன் அந்தக் கடைக்காரர் என்னை அழைத்தார். உணவளித்தார்.

திருப்தியாக உண்டேன். என் கதை முழுவதும் கூறி அழுது தீர்த்தேன். அந்த கடைக்காரர் பெயர் முருகேசு. நல்ல மனிதர். எனக்கு சிறந்த ஆலோசகராக விளங்கியவர். “இதோ பாரு தம்பி, சின்ன பசங்களை வேலைக்கு வைச்சிக்கிறது சட்ட படி குற்றம். பக்கத்தில இருக்கும் அன்பு இல்லத்தில் சேர்த்து விடுறேன், பள்ளிக்கூடத்திற்குப் போய் ஒழுங்கா படிக்கனும் புரியுதா”, என்றார். அவரது ஆதரவான வார்த்தைகள் என் வாழ்வில் ஓளி ஏற்றி வைத்ததைப் போல் சந்தோசமாக இருந்தது. சந்தேகத்தால் தான் ஆரம்பத்தில் விரட்டினார் என பிறகு புரிந்துக் கொண்டேன்.

அன்பு இல்லத்தில் இருந்துக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். முருகேசு அண்ணன் நேரம் கிடைக்கும் சமயங்களில் என்னை கண்டு செல்வார். நானும் பள்ளி விடுமுறைகளில் அவரது கடைக்குச் சென்று சிறு சிறு உதவிகள் செய்து வருவேன். பல சிரமங்களுக்குப் பின் படிப்பை தொடர்ந்தது, படிப்பின் ‘சுவையை’ எனக்கு உணர்த்தியது. பாடங்களை ‘ருசித்துப்’ படிக்க ஆரம்பித்தேன்.

என் அம்மாவின் ஞாபகம் ஒரு கணமும் என்னை விட்டு பிறிந்ததில்லை. நாளுக்கு நாள் அம்மா மீதிருந்த ஏக்கத்தைவிட கோபமே அதிகரித்தது. எத்தனையோ மாதர்கள் கணவனை பிரிந்த பின்னர் தங்கள் பிள்ளைகளை சிறப்பாக வளர்க்கிறார்கள். ஏன் என் அம்மா மட்டும் என்னை நாதியற்று நடுத்தெருவில் நிற்கும்படி செய்தார்?

****************************************
‘டாக்டர் அந்த ‘பேசன்ட்’ சுயநினைவிற்கு திரும்பிட்டாங்க”, என்றாள் என் அறைக் கதவை தட்டிக் கொண்டு உள்ளே வந்தாள் தாதி. என்னை சுதாகரித்துக் கொண்டு பழைய நினைவிலிருந்து திரும்பினேன்.

நான்கு ஐந்து நாட்களுக்கு முன் விஷத்தை குடித்து உயிருக்கு போராடிய பெண்ணை நான் பணிபுரியும் மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். நான் மருத்துவனாக வேலை செய்யத் தொடங்கியதிலிருந்து இதுபோல தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பல நோயாளிகளைச் சந்தித்திருக்கிறேன். ஆனால் இவள் விசயத்தில், கூடவே அழுது கொண்டிருந்த அவளது பிள்ளைகளை பார்க்கையில் என் மனம் நெருடியது. இவளை காப்பாற்ற முடியவில்லையெனில் இந்தப் பிள்ளைக்ளின் கதி என்னவாகும்?

சுயநினைவிற்கு திரும்பிய அவளை காண சென்றேன். தன் பிள்ளைகளை கட்டியணைத்து அழுதவாறு படுத்திருந்தாள். என்னைக் கண்டவுடன் கண்களை துடைத்துக் கொண்டு தன்னை சரிபடுத்திக் கொண்டாள். அவள் அருகில் அமர்ந்து மருந்தோடு மருந்தாக சில புத்திமதிகளைக் கூற விழைந்தேன். அவளை விட்டுச் சென்ற கணவனின் செயலால் தான் இந்தத் தற்கொலை முயற்சியென அறிந்துக் கொண்டேன். இனி பிள்ளைகளுக்காக வாழ்வை தொடர்வாள் என விழியோரம் பொங்கிய அவளது கண்ணீர் சொல்லியது. அந்தச் சிறு பிள்ளைகளின் வாழ்வில் விடியலை ஏற்படுத்திய மனத்திருப்தி எனக்கு மகிழ்ச்சியளித்தது.

அதிர்வு விசையில் இருந்த என் கையடக்கத் தொலைபேசி அலறியது. அடுத்த முனையில் என் மனைவி பேசிவிட்டு வைத்தாள் இன்று முருகேசு அண்ணனின் நினைவு நாள். ஆறு ஆண்டுகளுக்கு முன் முதுமையின் காரணமாக அவர் காலமாகிவிட்டார். இப்பொழுது எனக்கு ஐம்பத்து நான்கு வயதாகின்றது. சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை என்பார்கள். என் வாழ்வில் தூண்டுகோலாக இருந்தவர் முருகேசு.

என் தாய் போன்றோரின் கோழைத் தனமான செயல்களால் எவ்வளவு பிள்ளைகள் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அவர்களில் பலர் சமுதாயத்திற்கும் நாட்டிக்கும் கேடு விளைவிற்பவர்களாகவும் உருவாகி இருக்கலாம். நான் இன்று மருத்துவனாக உருவாகியிருப்பதற்கு காரணம் முருகேசு அண்ணனை போன்றேரின் நல்ல உள்ளங்களால் தான். அவருக்கு நினைவஞ்சலி செலுத்த வேண்டுமெனக் கூறி என் மனைவி தொலைபேசி அழைப்பு கொடுத்தாள். வீட்டை அடைந்தவுடன் முருகேசு அண்ணனின் பெயரில் அர்ச்சனை செய்துவரலாம் என என் மனைவி கூறினாள். சரியெனச் சொல்லி துவாலையை இடுப்பில் முடிந்து கொண்டு குளியலறையை நோக்கிச் சென்றேன்.

திருடியது யார் - சிறுகதை


“என்ன மகேன் போன காரியம் நல்லபடியா முடிஞ்சதா, கவலை படாதடா உன் மனசை போலவே எல்லாமே நல்ல படியா நடக்கும்”, என்றான் குமார்.

குமாரின் வார்த்தைகள் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது போல இருந்தது மகேனுக்கு. குமார் மற்றும் மகேன் இருவரும் பாலிய சினேகிதர்கள். குமார் சுய தொழில் செய்து வருபவன், தன் தந்தை இறந்த பிறகு முழு வியாபாரப் பொறுப்பும் அவன் பார்த்து வருகிரான். மகேன் தன் பள்ளி படிப்பு முடிந்த பிறகு ஒரு தனியார் நிறுவணத்தில் பணி புறிந்து வருகிறான். மகேனின் முகத்தில் ஆரம்பத்தில் இருந்த அதே கவலை,

“ என்னடா கப்பல் கவுந்த மாதிரி இனமும் சோகமா இருக்க, அதன் எல்லாம் சரியாயிடுச்சே, பின்ன என்ன கவலை”, என்று மகேனை பார்த்தான் குமார்.

“இல்லடா குமார் நீ கொடுத்த கார்டுல பணம் எடுக்க முடியலடா, பாக்கி பணம் ரொம்ப குறைவா இருக்கு”, என்றான் மகேன். தன் நண்பனின் பதில் குமாரின் காதுகளில் இடி போல் விழுந்தது.

சமீபத்தில் மகேனுக்கு சிறு பண பிரச்சனை எற்பட்டது. கடந்த வருடம் தான் சேமித்து வைத்திருந்த தொகையை முன் பணமாக செலுத்தி அருகில் இருந்த குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டை வாங்கி சந்தோஷமாக தன் குடும்பத்தாருடன் குடி புகுந்தான். வாடகை வீட்டுக்கு பணத்தைக் கொடுப்பதை விட, வங்கியில் சொந்த வீட்டுக்கு மாதத் தவனைச் செலுத்துவது அவனுக்கு ஒரு வித திருப்தியே அளித்தது.

சிறு பிராயத்தில் தந்தையை இழந்த மகேனுக்கு இடைநிலை கல்வியை தொடரும் தம்பியும், மூட்டு வலியால் பாதிக்க பட்ட தாயாரும் உள்ளனர். இரு மாதங்களுக்கு முன்பு தனதுத் தாயாரின் உடல் நிலை பாதிக்க படவே, அவனுக்கு அதிகமான மருத்துவ செலவுகள் எற்பட்டது மட்டுமல்லாமல் வீட்டுத் தவனையும் சரிவர செலுத்த முடியாமல் கால தாமதம் ஆனது. வங்கியிலிருந்து மூன்றாம் நினைவுருத்தல் கடிதம் வந்ததும் தன் நண்பன் குமாரின் உதவியை நாடினான் மகேன்.

குழப்பத்தில் இருந்த தன் நண்பனின் தோளில் கையை வைத்தான் மகேன், “டேய் என்னடா, என் மேல சந்தேகப்படுரியா? நான் பொய் சொல்லல, நிஜமா நான் பார்க்கும் போது பணமே இல்லைடா”, என சங்கடமாகக் கூறினான் மகேன்.

“சேய்! என்னடா இப்படி பேசற, உன் குணம் எனக்கு தெரியாதா, நான் அந்த பணத்தை எந்த காரியத்துக்கும் பயன்படுத்தல. அதான் ரொம்ப குழப்பமா இருக்கு, வா என்ன செய்யலாம்னு யோசிப்போம்”, என தன் வேலைகளை நிறுத்திவிட்டு வந்தான் குமார். தன் மடிக் கனிணியை திறந்து அவன் செய்த வரவு செலவுகளை சரி பார்த்தான், தான் அந்த வங்கியின் பணத்தை உபயோகிக்கவில்லையென தெள்ளத் தெளிவாக தெரிந்தது.

இரு நண்பர்களும் தங்கள் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் இருந்த உணவகத்தில், இனம் புரியாத அழுத்தத்துடனும் குழப்பத்துடனும் அமர்ந்திருந்தார்கள். குமார் தனது ஊழியர்களை தொடர்பு கொண்டு, வியாபார வரவு செலவுகளை குறித்து வைத்து அந்த வங்கி கணக்குடன் ஒப்பிட்டு பார்த்து கொண்டிருந்தான். அவன் செலவு செய்யவில்லை என்பதையே ஊழியர்களும் குறிப்பிட்டார்கள். பலமுறை யோசித்து, மேழும் குழப்பம் அடைந்த அவன் தனது சட்டைப் பையில் இருந்த வெண்சுருட்டை பற்ற வைத்தான்.

“சரி இன்னும் ஒரு வழிதான் இருக்கு, வா ‘பேங்’ போய் என்ன பிரச்சனைனு கேட்டு தெரிஞ்சிக்கலாம்”, என்று தன் நண்பனை அழைத்துக் கொண்டு வங்கிக்கு சென்றான் குமார்.

வங்கிகளில் நாம் செய்த பற்றுவரவிற்கான கணக்கு வழக்குகள் உடனுக்குடன் கனிணி செயல்பாட்டால் பதிவு செய்யப் பட்டிருக்கும். கடந்த நாட்களில் நாம் செய்த பற்றுவரவிற்கான கணக்கு வழக்குகளை வேண்டிய சமயத்தில் பதிவு எடுத்து வைத்துக் கொள்ள வசதிகள் செய்துத் தரப் பட்டுள்ளன.

“போன வாரம்தான் சார் எல்லா பணத்தையும் வெளியாக்கிருக்கிங்க” என கூறி பற்றுவரவு கணக்கு வழக்குகளை குமாரின் முன் வைத்தார் வங்கியின் குமாஸ்தா. தனது சேமிப்புப் பணம் அனைத்துமே தொடர்ந்து ஆயிரம் ஆயிரம் ரிங்கிட்டாக வெளியாக்கி முடிக்கப் பட்டிருந்ததை பார்த்த குமார் மேழும் பேரதிர்ச்சியடைந்தான்.

வங்கி மேலதிகாரியிடம் நடந்தவற்றை விளக்கிக் கூறினான், தன் பணம் மீண்டும் கிடைக்காது என்ற பட்சத்தில், வங்கியின் நிர்வாகம் சரியில்லாததால்தான் தான் பணத்தை இழக்க நேர்ந்தது என கோபத்தில் தகராறு செய்தான். வங்கி நிர்வாகத்தினர் பணம் காணமற் போனதற்கும் வங்கிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதில் விடாப் பிடியாக இருந்தார்கள்.

கஷ்டப் பட்டு சம்பாதித்த பணம் பறிபோனதில் மனம்முடைந்தவன் தன் வங்கி கணக்கு வழக்குகளை ரத்து செய்து விட்டு கிளம்பினான். மகேனுக்கோ தன்னால்தான் தன் நண்பனுக்கு இவ்வளவு சிரமம் எற்பட்டது என் நினைத்து மன வருத்தம் ஏற்பட்டது.

காவல் நிலையத்தில் முழு விவரமும் புகார் செய்யப் பட்டு இருவரும் வீடு திரும்பும் வழியில் பல சிந்தனைகள் குமாரின் மனத் திரையில் சிறகடித்தன. பாதுகாப்பாக வங்கியில் வைத்த பணம் எப்படி காணமற் போக முடியும். இந்த ஒரு கேள்விக்கே அவன் மனம் பதிலைத் தேடி அலைந்து திரிந்தது. வேறு என்னதான் செய்ய முடியும், பாடு பட்ட பலன்கள் யாவும் பஞ்சாய் பறந்து போனால் யாரால்தான் தாங்கிக் கொள்ள முடியும். வங்கி ஊழியர்கள் யாராகினும் பணத்தை எடுத்து விட்டிருப்பார்களா? இப்படியாக மனம் எதையெதையோ எண்ணியது.

“சாரிடா மகேன், என் பிரச்சனையில உன்ன மறந்துட்டேன், இந்த ‘செக்க’ வச்சி உன் கடனை அடைச்சிடு, பயபடாத இது வேர பேங்க் அக்காவுண்ட், கண்டிப்பா பிரச்சனை இருக்காது”, என்று சட்டைப் பையில் இருந்த காசோலையை நீட்டினான் குமார்.

“என்னடா நீ! நீயே கஷ்டத்துல, இருக்க எனக்கு வெற தண்ட செலவு தேவயா? பரவாலடா, நான் வேறு இடத்துல பணத்தை புரட்டிக்கிறேன்”, என்று நண்பனின் காசோலையை வாங்க மறுத்தான் மகேன். அவனை சமதான படுத்தி காசோலையை கொடுத்து விட்டு விடைபெற்று வீடு திரும்பினான் குமார்.

புதிய நாள் கண்திறந்து பத்து நாழிகை கழிந்திருந்தது, ஈப்போ நகரம் வேலைப் பளுவால் கனத்து காணப்பட்டது. இவையனைத்தையும் சற்றும் பொருட்படுத்தாமல் ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்தது ஒரு உருவம். நீண்ட நேரம் ஒலித்துக் கொண்டிருந்த கையடக்கத் தொலைபேசி உறங்கி கொண்டிருந்தவரின் உறக்கத்தை சற்றும் கலைக்கவில்லை.

ஏழாவது முறையாக ஒலியெழும்பிய போது அவரது கைகள் போர்வையிலிருந்து எட்டிப் பார்த்து ஓசை எழுப்பிய கருவியை அலசியது. தொலைபேசி அழைப்பிற்கு பதிலளித்து முடித்தவர் சட்டென கிளம்பினார். அடுத்த அரை மணி நேரத்தில் தனது காரில் காற்றோடு காற்றாக மறைந்தார்.

“வாங்க மிஸ்டர் மாதவன், உங்க விடுமுறை முடியறதுக்கு முன்னதாவே உங்கள வேலைக்கு வர சொன்னதற்கு மன்னிக்கனும், முக்கியமான கேஸ் ஒன்ன சீக்கரமா முடிக்க உத்தரவு போட்டுடாங்க, அதான் உங்கள அழைக்க வேண்டியதா போச்சி”, என்றார் காவல் அதிகாரியான அமீர்.

“பரவாயில்லை சார் நீண்ட நாள் விடுமுறை எனக்கும் போரடிச்சி போச்சி, நேத்து ‘நைட்டுதான்’ ஊர்லெருந்து வந்தேன், தூங்க ‘லேட்டாச்சி’ அதான் நீங்க போன் பண்ணுனது தெரியாம அசந்து தூங்கிட்டேன், நீங்கதான் என்ன மன்னிக்கனும்”, என்றார் மாதவன்.

மாதவன் சிறப்புப் போலிஸ் பிரிவினில் பணிபுரியும், திறமையும், தைரியமும் மிக்க காவல் அதிகாரி. பல சிக்கலான புகார்களை நூதனமான யுக்திகளை கையாண்டு கண்டுபிடித்தவர். இதனால் காவல் இலாக்காவினரிடம் அவருக்கெனெ தனி மதிப்பும் மரியாதையும் இருந்தது.

“சரி மாதவன், இந்த ‘பைல்ஸ்’ எல்லாம் கடந்த மூனு மாதமா இந்த வட்டாரத்தில் இருந்து நமக்கு வந்த ‘கேஸஸ்’,” என்று மாதவன் முன் சில புகார் பதிவுகளை எடுத்து வைத்தார் அமீர்.

“இங்க இருக்கறது எல்லாமே இந்த ஈப்போ நகரத்த சுற்றியுள்ள ‘பேங்’ சம்மந்தப் பட்ட புகார்கள். ‘பேங்’ல உள்ளவங்களுக்கோ, ‘டேப்பாசிட்டர்கோ’ இந்த பணம் எப்படி காணமல் போனதுனு தெரியல. சிக்கலான கேஸ்ஸாக இருக்கறதால தடயங்கள் கிடைக்கவும் சிரமமா இருக்கு. என் சந்தேகமெல்லாம் இது பலரால் செய்யப் பட்டிருக்கலாம் என்பதுதான். கூடிய சீக்கரத்தில் இதை நாம் கண்டிபிடிச்சி தடுக்கனும், இதனால் பலர் பாதிக்க பட்டிருக்காங்க” என சினிமாவில் வரும் போலிஸ் அதிகாரி போல எடுத்துரைத்தார் அமீர்.

“சரி சார் இந்த ‘கேஸ’ நான் எடுத்துக்கிறேன்”, என்று கர்வமற்ற தன்னம்பிக்கையுடன் கூறினார் மாதவன். “ஓகே மாதவன் இந்த ‘கேஸ்’ சம்மந்தமா எந்த உதவியா இருந்தாலும் என்னை நாடலாம்”, என்று மேழும் ஊக்கம் கொடுத்து அனுப்பினார் அமீர்.

தலைமை காவல் நிலையத்திலிருந்து புறப்பட்டவர் அருகிலிருந்த உணவகத்தில் தனது மதிய உணவை முடித்துக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார். சுமாராக ஐந்து மணிவாக்கில், ஒரு நிறைவான தூக்கத்தை முடித்துவிட்டேன் என்பதற்கடையாளமாக நெட்டி முறித்து எழுந்த மாதவன், தன் எதிர் மேஜைமீதிருந்த புகார்களை பார்த்தார்.

அழுது முடித்திருந்த அந்திமழையின் சாரல் காற்று, தன் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்திருந்த மாதவனின் முகத்தை இதமாக வருடிச் சென்றதும் தனக்குள் ஒரு புத்துணர்வு எற்படுவதை உணர்ந்தார். அவரது சிந்தனைகள் தனக்கு கொடுக்கப் பட்டிருந்த பொறுப்பை நோக்கி ஓடியது. அனைத்து புகார்களும் ஒரே மாதிரியாகவும், அருகருகே உள்ள ஊர்களில் நடந்திருந்தாலும் அனைத்தும் சம்மந்த பட்ட ஒரே நபராலோ அல்லது நபர்களாலோ மட்டுமே செய்திருக்கக் கூடும் என முடிவெடுப்பது தவறு. மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட்ட கதையாகி விடுமோ என அஞ்சினார். அவை வெவ்வேரு ஆட்களாலும் செய்யப்பட்டிருக்கலாம் அல்லவா!

சில விஷயங்கள் மட்டுமே உள்ளங்கை நெல்லிக்கனியென மாதவனுக்கு புலப்பட்டது. சம்பவங்கள் பாதிக்கப் பட்ட நபர்களை அறியாமலே நடந்திருக்கிறது. வங்கியின் சேமிப்புப் பணம் பறிபோயிருக்கிறது என்றால் முக்கிய தகவல்களான உறுப்பினர் எண் மற்றும் ரகசிய ‘பின் கோர்டுகள்’, ஆகியன அடுத்தவருக்கு தெரிந்திருக்க வேண்டும். இந்த ரகசியங்கள் தொலைவது எவ்வகையில் சாத்தியமாகும். குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் என யார் வேண்டுமானாலும் செய்திருக்கலாம். மேலும் தெளிவான தடயங்களை புரட்ட பாதிக்கப் பட்டவர்களை சந்தித்து விசாரிக்க முடிவு செய்தார்.

இறுதி நபராக குமார் விசாரணைக்கு அழைக்கப் பட்டான். “கடைசியாக இந்த ‘பேங்’ சம்மந்தப் பட்ட விபரங்களை என்ன விஷயமா பயன்படுத்துனீங்க சொல்ல முடியுமா?” என்றார் மாதவன்.

“கண்டிப்பா ஞாபகம் இருக்கு ‘சார்’, வியாபாரத்துக்காக ‘இன்டர்நெட்’ வழியா பொருட்கள் வாங்க பார்த்தேன், சரியான தகவல்களை கொடுத்தும் வாங்குவதற்கு பிரச்சனையா இருந்ததால ரத்து செஞ்சிட்டேன்” என ரத்தின சுருக்கமாக தன் பதிலைக் கூறி விடைப் பெற்று சென்றான் குமார்.

“விசாரனையில் சில முக்கிய தடயங்கள் நமக்கு கிடைச்சிருக்கு, பாதிக்க பட்ட எல்லோரும் தன் பணம் காணமற் போனதை உணர்வதற்கு முன்பு, பணம் கட்டவோ, அல்லது பொருள் வாங்கவோ, இணையம் வழி வங்கிச் சேவையை பயன்படுத்திருக்காங்க. இதனால அசம்பாவிதம் நடந்திருக்கும் என நான் நினைக்கிறேன். கணினி தொழில் நுட்ப நிபுணர்களின் உதவி இருந்தால் என் வேலையை தொடர சுலபமாக இருக்கும்” என்று அமீரிடம் விசாரனனயின் ஆய்வை கூறினார் மாதவன்.

“ ‘ஓகே’ மாதவன் நாளைக்கே எற்பாடு பண்ணிடலாம்”, என்றார் அமீர். பத்திரிக்கைக்கு இந்த விசாரனை பற்றிய தகவல்களை தெரிவிக்க வேண்டாமெனவும், இதனால் குற்றவாளியைக் கண்டு பிடிப்பதில் சிரமங்கள் எற்படலாமெனவும் கூறினார் மாதவன்.

“இணையத்தின் வழி இப்படிபட்ட பிரச்சனைகள் நடக்க வாய்ப்புகள் இருக்கு ‘சார்’ , ஆனால் வங்கியின் இணைய சேவையும் பலத்த பாதுகாப்புடன்தான் செயல்படுத்தப் படுகிறது, இப்போதய நிலைமைக்கு நாம் யாரையும் சந்தேகிக்க முடியாது, பாதிக்கப்பட்டவர்கள் இறுதியாக எப்பொழுது வங்கியின் இணைய சேவையைப் பயன்படுத்தி இருக்காங்கனு சற்று ஆராய்ந்தால் முக்கிய தகவல்களை திரட்ட வசதியாக இருக்கும்”, என்று மாதவனிடம் விளக்கிக் கூறினார் கணினி நிபுணர் அர்ஜூன்.

அடுத்த அரைமணி நேரத்தில் பாதிக்கப் பட்ட நபர்கள் இறுதியாக இணையத்தின் வழி வங்கியுடன் தெடர்புக் கொண்டதை ஆராய்ந்து பார்த்தார் அர்ஜுன். பாதிக்கப் பட்டவர்கள் வங்கியின் இணைய சேவையைப் பயன்படுத்தி முடித்த பின்பு அவர்களது பெயர் மற்றும் ரகசியப் பின் கோடுகளைப் பயன்படுத்தி வேறொரு கணினியின் மூலம் அவர்களது வங்கி கணக்கு வழக்குகள் மறுபடியும் திறக்கப் பட்டிருந்தது. பாதிக்கப் பட்டவர்கள் கூறிய திகதி மற்றும் நேரத்திற்கு பிறகும் இணையம் வழி வங்கியின் கணக்கு வழக்குகள் பார்வையிட பட்டிருந்தது. இதை விட சுவாரசியமாக புகார் கொடுத்தவர்கள் அனைவரது கணக்கு வழக்குகளும் ஒரே இணைய சேவையின் மூலம் திறந்து பார்வையிடப் பட்டிருந்ததே.

“இந்த ‘IP Address’ எந்தத் தொலைபேசி தொடர்பின் வழி இணையத்தில் இணைக்கப் பட்டிருக்கிறது என்பதை வைத்து நாம் அவர்களின் முகவரியை அறிந்து கொள்ள முடியும்”, என்ற திருப்தியான பதிலை மாதவனிடம் கூறினார் அர்ஜுன்.

முகவரியை அறிந்து கொண்ட மாதவன் மேலும் சில காவல் அதிகாரிகளுடன் புறப்பட்டார். ஒரு அடுக்கு மாடி குடியிருப்புப் பகுதியில் தன் வாகனத்தை நிறுத்தி வைத்தவர், தன் சக நண்பர்களுடன் தேடி வந்த வீட்டை நோக்கிச் சென்றார். கதவைத் தட்டியவுடன், இருபது வயது மதிக்கதக்க இளைஞன் வெளியே எட்டிப் பார்த்தான். மாதவன் தான் விசாரனைக்கு வந்துள்ளதாக சொல்வதற்கு முன்பே, தன் நண்பர்களிடம் ‘போலீஸ்’ என கூச்சலிட்டு தன்னுடன் இருந்த இரு நண்பர்களுடன் தப்பிக்க முயன்றான். போலிசாரின் தர்ம அடிகளுடன் மூவரும் கைது செய்யப் பட்டார்கள். அவர்களது குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப் பட்ட பொருட்கள் அனைத்தும் கைபற்றப் பட்டன.

விசாரணையின் போது தங்கள் குற்றங்களை ஒப்புக் கொண்ட அந்த மூவரும் படித்து முடித்த பின்பு வேலையில்லாததால் இந்த குற்றத்தை புரிய தூண்டுதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். வங்கியின் இணைய அகப்பக்கத்தை போன்ற போலி அகபக்கத்தை உறுவாக்கி, தவறுதலாக அதில் நுழையும் பயனீட்டாளர்களின் முக்கிய தகவல்களை திரட்டியுள்ளார்கள். அந்த தகவல்களின் அடிப்படையில், இணையம் வழி கணக்கு வழக்குகளை ஆராய்ந்து, சட்டவிரோத முறையில் போலி வங்கி அட்டைகளை செய்து பணத்தைத் திருடியிருக்கிறார்கள், என திரு.அமீரிடம் தெள்ளத் தெளிவாக குறிப்பிட்டு சமர்பித்தார் மாதவன்.

தொழில் நுட்பத்தின் பரிணாம வளர்ச்சி, குற்ற செயல்களையும் அதிகரிக்கவே செய்துள்ளது. மக்களிடம் விழிப்புணர்வு இருந்தால் குற்றச் செயல்களை தடுக்க முடியும், என பொறிக்கப் பட்டிருந்த பத்திரிக்கை செய்தியை படித்த மாதவன், பச்சை விளக்கு விழுந்தவுடன் பத்திரிக்கையை பக்கத்து இருக்கையில் வைத்துவிட்டு தன் காரை செலுத்தினார். நிறைவாக வேலையை முடித்தத் திருப்தியுடன் ஊருக்குச் சென்று கொண்டிருக்கிறார் மாதவன்.

(பி.கு: நான் முதலாவதாக எழுதிய சிறுகதை. 09.09.2007லில் மலேசிய நண்பனின் வெளியிடப்பட்டது)

தள அறிமுகம்


நான் விக்னேஸ்வரன் அடைக்கலம். எனக்குத் தமிழ் கவிதை, கதை, கட்டுரை என எல்லாம் பிடிக்கும். மொத்தத்தில் தமிழ் மொழி பிடிக்கும்.

நான் எழுதும் சிறுகதைகள் மற்றும் தொடர்கதைகளுக்காக இந்தத் தளத்தை தொடங்கியுள்ளேன்.