Sunday, November 30, 2008

60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் (14)


அத்தியாயம் 14

அவள் எனது கைவிரல்களை இருக்கப் பற்றி இருந்தாள். நேரம் ஆக ஆக பற்றி இருந்த விரல்களின் இருக்கம் அதிகமாவதை உணர்ந்தேன். அவளை நோக்கினேன் கண்களை மூடியபடி என் தோள் மீது சாய்ந்திருந்தாள். மக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்திருந்தது. அவர்களுக்கான பேருந்து விரைவில் வந்துவிட்டதாக அறிந்தேன். அடிக்கடி கண்களை என் கைக்கடிகாரத்தின் முட்களிடையே ஓடவிட்டுக் கொண்டிருந்தேன். வெளியே லேசான தூரள் போட்டுக் கொண்டிருந்தது வானம். ஈரப்பதம் நிறைந்தக் காற்று இதமாக முகத்தை வருடியது. மின்னல் கீற்றுகள் வானத்தைக் கிழித்துக் கொண்டு அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டிருந்தன.

அவள் கைப்பிடியில் இருந்து லேசாக என்னை விடுவித்தேன். தலை நிமிர்த்தி என் முகத்தைப் பார்த்தாள்.

"காபி ஏதும் வாங்கி வரவா?" புன்னகைத்தபடி முகத்தில் சரிந்திருந்த முடியை காதிடுக்கினில் கோதிவிட்டுக் கொண்டாள்.

"எனக்கு தூக்க தூக்கமா இருக்கு", கொஞ்சும் குரலில் பதிலளித்தாள்.

" 'பஸ்' ஏரினதும் நல்லா தூங்கலாமே?", என்றேன்.

" நான் 'டிராவல்' செஞ்சி ரொம்ப நாளாகுது. இந்த முறை வீட்டுக்கு போக அசௌகரியமா இருக்கு".

"அப்ப நானும் கூட வரவா?"

"ம்ம்ம்... நான் அன்னிக்கு கூப்பிட்ட போது 'லீவ்' கிடைக்காது, வேலை இருக்கு, அது இதுனு 1008 காரணம் சொன்ன, இப்ப என்னவாம்?"

"அப்படிலாம் ஏதும் இல்லை, இந்த முறை எந்த தொந்தரவும் இல்லாமல் உன் விடுமுறை இருக்கட்டும்... ஆனா இப்போதைக்கு அப்பாக்கிட்ட நம்ம பத்தி ஒன்னும் சொல்ல வேணாம் 'பிலிஸ்'.

அவள் முகம் சற்றே சுருங்கியது, "ஏன் உனக்கு பிடிக்கலையா?".

"பிடிக்கலைன்னு இல்லை, இப்போதைக்கு வேண்டாம்னு நினைக்கிறேன்... இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்.." அவள் முகம் சுழித்தாள்.

"சரி... நான் அப்பாகிட்ட ஏதும் சொல்லல... ஆனா நீ மறக்காம எனக்கு போன் பண்ணு..." என் கைகளை மீண்டும் இருக்கப் பற்றிக் கொண்டாள்.

"உன்னோட டிக்கட் எங்க?".

" பேக்ல இருக்கு", தனது தோளில் மாட்டி இருந்த பணப்பையைக் காட்டினாள்.

சற்று நேரத்தில் பேருந்தும் வந்தது. அவளது துணி பையை எடுத்துக் கொண்டு பேருந்து நிற்குமிடம் போனேன். கிளம்புவதற்கு இன்னும் ஒரு சில நிமிடங்கள் இருந்தது. நளினாவின் முகத்தில் சோகம் அப்பிக் கிடந்தது. என்னை அணைத்து சட்டென கன்னத்தில் இதழ்களை பதித்தாள். அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்திருந்தது.

அவள் கிளம்பியதும் எனது கரை நோக்கி நடக்கலானேன். மழை தனது மெல்லிய தூறலை இன்னமும் விட்டபாடில்லை. நளினாவின் முத்தத் தடங்கள் அழியாமல் இருக்கவோ என்னவோ அவசர அவசரமாக காருக்குள் புகுந்துக் கொண்டேன்.

மீண்டும் மீண்டும் அவளது நினைவுகள் என்னைத் துரத்திக் கொண்டே இருந்தன. அவளும் இப்படி தான் என்னை நினைத்துக் கொண்டிருப்பாளா? இல்லை தூங்கியிருப்பாளா? அவளை தனிமையில் விட்டுவந்த நானும் இனி தமிமையில் தான் இருக்கப் போகிறேன். இல்லை மனைவியென பெயர் கொண்டவள் உன்னோடு இருக்கிறாள் என்றது மனம்.

வீட்டிற்கு வந்து சேர்ந்த போது இரவு 11.30ஆகிவிட்டது. அறைக்கதவை திறந்த போது கண்கொள்ளா திருக்கோலத்தில் நந்தினி படுத்திருக்கக் கண்டேன். கதவு திறந்த சத்தம் மேலிட சட்டென எழுந்துவிட்டாள். என்னைக் கண்டு அவளும் திடுக்கிட்டிருக்க வேண்டும். கையில் கிடைத்த போர்வையைக் கொண்டு மெல்லிய இரவு உடை கொண்டிருந்த தன் மேனியை மறைத்துக் கொண்டாள்.

" நீங்க வர 'லேட்டாகும்னு நினைச்சேன்", அவள் பேசினாள்.

நானும் பேசத்தான் நினைத்தேன். ஆனால் குரல் ஒலி அடித் தொண்டையில் அடைத்துக் கொண்டு வர மறுத்தது.

"சாவி தேடுறிங்களா? அந்த மேசை மேல இருக்கு", என்றாள்.

நெஞ்சு படபடத்துக் கொண்டது. ஏன் என்று தெரியவில்லை.

அந்த சிறிய அறையைத் திறந்து கதவைச் சாத்திக் கொண்டு படுத்தேன். நந்தினி தன்னை இழுத்துப் போர்த்திக் கொண்ட காட்சி மனத்திரையில் ஓடியது. நீண்ட பெருமூச்சைவிட்டேன். போர்வையை போர்த்திக் கொண்டேன். வெளியே மழையின் சத்தம் வேகமாக இருந்தது.

தொடரும்...

5 Comments:

VG said...

~~நளினாவின் முத்தத் தடங்கள் அழியாமல் இருக்கவோ என்னவோ அவசர அவசரமாக காருக்குள் புகுந்துக் கொண்டேன்.~~

nalla karpanaiyana vari...

Anonymous said...

விக்கி, நல்ல கற்பனை உங்களுக்கு. ஒரு சினிமா படத்துக்கு வசனம் எழுத உங்களை முன்மொழியலாம்....தொடரை எங்கோ விட்டு எங்கோ தொடரிங்க?...

Anonymous said...

இந்த வாரமும் ஒன்னும் நடக்கல...
:-( சீக்கிரமா நந்தினியை பாரியோடு சேர்த்து வைங்க :-)

Anonymous said...

என்ன புனிதா இப்படி சொல்லிட்டிங்க? அப்படினா நளினாவுடைய நிலமை என்னாவது?

அகரம் அமுதா said...

கதையின் இறுதிப் பத்தி என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது. கணவன் மனைவி இருவருக்குள்ளும் இயல்பான உறவில்லை என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள். வாழ்த்துகள்.