Thursday, January 1, 2009

60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் (17)

அத்தியாயம் 17

முதலாளி பல முறை சொன்னார். "இரு விருந்து முடிந்த்தும் கிளம்பலாம்" என்று. அங்குள்ள நிலை எனக்கு தோதானதாக இல்லை. கூப்பிட்ட கடமைக்கு வந்தாகிவிட்டது. எப்படியாவது நழுவிக் கொள்ள வேண்டும் என உறுதிக் கொண்டேன்.

இந்த முரளியும் ஒரு புரம் நந்தினியோடு பேசுவதிலேயே குறியாக இருந்தான். பெட்ரோல் தெளிக்காமலேயே என் வயிறு ஒரு புரம் பற்றி எறிய ஆரம்பித்தது. போதா குறைக்கு இங்குள்ள சிலர் நளினாவை நன்கு அறிவார்கள்.

"சரி நாளைக்கு மறக்காம நம்ப 'ப்ரோஜேக்ட் சைட்டுக்கு' வந்திடு… நந்தினி கூட இருக்கிறத காரணம் காட்டி தப்பிக்க பார்க்குற… ஒன்னும் சொல்றதிக்கில்லை…"

" நிச்சயமா வந்திடுறேன் முதலாளி… பை த வே…. தேங்ஸ் பார் த டின்னர்…" என்னை அறியாமலேயே நந்தினியின் கைகளை பற்றியிருந்தேன்… எப்படி என்பது தெரியவில்லை. யாரும் பார்த்துவிடும் முன் விலக்கிக் கொண்டேன்.

"உன் நண்பன் கிளம்புறானு நீயும் போக போறியாப்பா?" முரளியைப் பார்த்துக் கேட்டார்.

" இல்லைங்க சார்… இங்க தான் இருப்பேன்".

நான் அதிக நேரம் அங்கிருக்கவில்லை. இப்போதைய எனது தேவை நான் இங்கிருந்து கிளம்ப வேண்டும். என் மீது யாருக்கேனும் சந்தேகம் வராமல் இருக்க வேண்டும். முரளி நந்தினியோடு நெருங்கிப் பழகாமல் இருக்க வேண்டும்.

பின்னிருக்கும் இருள் துரத்தி வர முன்னிருக்கும் இருளை கிழித்துச் சென்று கொண்டிருந்தது எனது மகிழுந்து. பக்கத்தில் நந்தினி அமைதியாகவே இருந்தாள். முன் சாலையை வெறித்துக் கொண்டிருந்தாள். அது எண்ண ஓட்டத்தின் சாயல் என்பதை அறிவேன்.

ஒலி தட்டைப் போட்டு வானொலியை மெல்லமாக திறந்து வைத்தேன். நந்தினி சற்றே என்னைப் பார்த்துவிட்டு மீண்டும் தனது பார்வையை சாலையை நோக்கி படரவிட்டாள்.

"தூக்கம் வருதா நந்தினி?" நானாகவே பேச்சு கொடுத்தேன். இல்லை என்பதாக தலையை மட்டும் அசைத்தாள்.

"பசிக்குதா?" மீண்டும் தலையசைத்தாள். இரண்டுமே எரிச்சலான பதில்கள். கடுப்பில் மகிழுத்தின் வேகத்தை அதிகப்படுத்தினேன்.

" ஏன் நந்தினி ஏதும் பேச மாட்ற? மறுபடியும் தலைவலிக்குதா?"

"இல்லை, நீங்க என் மேல கோபமா இருக்கிங்களா?"

"கோபமா? எதுக்கு..?"

"முதல உங்க ஃபிரண்டு முரளி கேட்டதுக்கு சம்மதம்னு சொன்னனே அதுக்கு கோவமானு கேட்டேன்?"

"அவன் என்ன சொன்னான்? புரியலையே…?"

"உங்க வேலை செய்யுற இடத்துக்கு இண்டர்வியூ வர சொன்னார் இல்லையா, அதுக்கு நான் சரினு சொன்ன்னே… அத கேட்குறேன்…"

ஹம்ம்ம் இது தானா, என எனக்குள் ஒரு பெருமூச்சு வெளியேறியது.

"உண்மையாவே 'இண்டர்வியூ' வர போறியா நந்தினி?"

"முயற்சி செஞ்சி பார்க்கலாம்னு நினைக்கிறேன்…"

"கண்டிப்பா வேலைக்கு போக போறியா?" ஆமாம் என தலையசைத்தாள்.

" ஊர்ல தங்கச்சிங்களாம் இன்னும் படிச்சிகிட்டு இருக்காங்க. அப்பாவுக்கும் வயசாகிட்டு இருக்கு. நான் வேலைக்கு போனா அவுங்களுக்கு கொஞ்சம் உதவியா இருக்கும் இல்லையா…"

அவள் சொன்ன வார்த்தைகள் என்னைச் சம்மட்டியைக் கொண்டு அடித்தை போல் இருந்தது. அவள் வாழ்க்கையில் இருந்து தூரமாய் இருக்கிறேன் என்பதை அது சொன்னது.

"நாம தான்…" அதற்கு மேல் பேசாமல் நிறுத்தினேன். எப்படி சொல்வேன் 'கணவன் மனைவி' எனும் அந்த வார்த்தையை. குடும்பத்தின் பார்வைக்கும், பெயரளவிலும் மட்டுமே தம்பதிகள் எனும் பட்டம்.

"நாம… என்ன?"

"ம்ம்ம்… ஒண்ணும் இல்லை…" அவள் அமைதியானாள். நானும் ஏதும் பேசாமல் வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் அங்கு அமைதி மட்டுமே நிலவியது. நந்தினி தூங்கிவிட்டிருப்பாளோ என்று நினைத்தேன். அமைதியாக முன்னோக்கி பார்த்துக் கொண்டு வந்தாள்.

கொஞ்ச நேரத்தில் வீட்டை அடைந்தோம். கதவை திறந்தபடி அவளிடம் பேசினேன்.

"நந்தினி நீ நிச்சயமா வேலை செய்ய போறேனா நான் உன்னை நாளைக்கு 'ஆபிஸ்'க்கு கூட்டிட்டு போறேன்" என்று அமைதியை உடைத்தேன்.

"உனக்கு ஏதும் பிரச்சனை இல்லையா பாரி?"

வரவேற்பறையில் இருந்த மெத்தை நாற்காலியில் உடலை கிடத்தினேன். "உன்னோட விருப்பத்துக்கு நான் என்னானு மறுப்பு சொல்ல முடியும். நீ கூட அன்னிக்கு சொன்னியே... இன்னும் கொஞ்ச நாளுக்கு பிறகு இதையெல்லாம் மறந்துட்டு பழயபடியே நம்ம பாதையில போயிடலாம்னு..."

சற்று அதிகமாகவே பேசிவிட்டதை உணர்ந்தேன். ஏன் இப்படி பேசினேன்? தெரியவில்லை... நந்தினியின் முகத்தில் சலனம் இருந்தது.

"உன்னால பழைய நிலைக்கு மாற முடியுமா பாரி?" நந்தினி கேட்டாள். அது என்னை பெரிதும் குழம்பச் செய்யும் கேள்வியாகவே இருந்தது.

" ம்ம்ம்... முடியும்..." எனது பதிலில் அவள் புன்னகைத்தாள்.

"உறுதியா உன்னால பழைய நிலைமைக்கு மாற முடியுமா? முடிஞ்சி போன விசயத்த மாத்தி அமைக்கிறது சுலபமில்ல பாரி. அது எவ்வளோ கஷ்டம்னு உனக்கே தெரியும். இந்த கொஞ்ச காலத்துல பல மாற்றங்கள் நம்ம வாழ்க்கையில நடந்திடுச்சு. உன்னோட உணர்ச்சிகளும் இயல்பு நிலையும் இதுல விட்டு போகல".

"என்ன சொல்ல வர நந்தினி?" நெற்றியைச் சுறுக்கி சற்று கடுகடுவென்றே கேட்டேன்.

" சுற்றியுள்ளதை உணரவும் புரிஞ்சிக்கவும் மனுசனால முடியும் பாரி. நானும் ஒரு சாதாரன மனுசி தான்" என்றபடி மேல் மாடியில் இருக்கும் அறையை நோக்கிச் சென்றாள்.

முடிவாக அவள் என்னதான் சொல்ல வருகிறாள் என்பதினை என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. குழப்பத்தோடு சிந்தனை செய்து கொண்டு படுத்திருந்தேன்.


தொடரும்...

Monday, December 8, 2008

60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் (16)

அத்தியாயம் 16

என் முதலாளி வீட்டிற்கான பயணம் குறுகிய காலத்தில் முடிவதைப் போல் இருந்தது. வழி நெடுகப் பல யோசனைகளிலேயே மிதந்து கிடந்தேன்.

"என்னை மன்னிச்சிடு பாரி என்னால உன் 'ப்ரோக்கிரம்' வீணாப் போச்சி".


சூழ்நிலை ஒவ்வொருவருக்கும் ஒரு விதமாய் அமைந்துவிடுகிறது. நினைத்தது அனைத்தும் நினைத்தபடி நடக்காமலும் போகிறது.

"நம்மள பத்தி யார்கிட்டயும் எதும் சொல்ல வேணா. உன்ன பத்தி நான் எதுவும் சொன்னதில்லை".

நந்தினியின் முகத்தில் லேசான சோகம் படர்ந்தது. அது அதிக நேரம் நீடிக்காமல் ஒரு இளம் புன்னகையை மெல்லியதாய் உதிர்த்தாள். எனக்கு அர்த்தம் புரியாத புன்னகை. அதை பற்றி நான் கண்டு கொள்ளவில்லை.


முதலாளியின் வீட்டில் விளக்குகளின் அலங்காரம் கோலாகலமாக இருந்தது. எனது வண்டி அவர் வீட்டை நெருக்கிய போது காவலர்கள் கை உயத்தி வரவேற்றார்கள். வீட்டில் தெரிந்தவர்கள் பலர் இருந்தார்கள். ஆட்களும் அதிகம் தான்.

"பாரி'' முதலாளி என்னைக் கை கொடுத்து வரவேற்றார். "நீ தான் ரொம்ப 'லேட்' " என்றார்.

"மன்னிக்கனும்..." என பேச வாயெடுத்த என்னை அவர் பேச்சில் வெட்டினார்.

"சரி.. சரி.. போய் சாப்பிடு" என்றபடி நந்தினியைப் பார்த்தார். அந்தப் பார்வையில் இவள் யார் எனும் கேள்வியும் சேர்ந்திருந்தது.

"என்னுடைய சொந்தகாரவங்க... நந்தினி".

"சொந்தமா?"

"ஆமா... இப்ப தான் படிப்ப முடிச்சி இருக்காங்க... கோ.எல்ல வேலை தேடிகிட்டு இருக்காங்க".

அவருடன் பேசிக் கொண்டிருக்கையில் முரளி அவ்விடம் வந்தான். தன்னை அறிமுகப்படுத்தி நந்தினிக்கு கை கொடுத்தான். அவள் என்னைப் பார்த்தபடி தயக்கம் கொண்டே கை குழுக்கினாள்.

"நந்தினி வந்து சாப்பிடுங்க.." முதலாளி சொன்னார். முரளி என்னை அனுகவும் சாப்பாடு வைத்திருந்த இடத்தை நோக்கி அவள் சென்றாள்.

"உனக்கு சொந்தகார பொண்ணு இருக்கிறத பத்தி என்னிட்ட சொல்லவே இல்லை", என்றான்.

"எல்லாத்தையும் அவசியம் சொல்லனுமா?"

"அதுக்கு இல்லைடா... பொண்ணு அழகா இருக்கா..." என்றபடி அவன் பார்வை நந்தினியை திருடிச் சென்றது.

"அதனால..?"

" 'பாய் ஃப்ரெண்ட்' இருகானா?''

கடுப்பில் தலையசைத்தேன். என்ன நினைத்தான் என தெரியவில்லை. நான் அவ்விடம் விட்டு அகன்றேன்.

என் பார்வை அவ்வப்போது நந்தினி மீதே இருந்தது. அவள் கொஞ்சம் உணவு எடுத்துக் கொண்டு அந்த பக்கம் இருந்த பெண்களோடு சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். என் மனதிற்குள் ஏதோ ஒரு பயம் வாட்டிக் கொண்டிருந்தது.

"ஹெய் பாரி... யாரு அது உன் கூட வந்தது?" என்னுடன் வேலை பார்க்கும் சந்தோஷ். கைகுழுக்கியபடி கேட்டார்.

"ம்ம்... அழகா இருக்காங்க... நீதான் கல்யாணம் பண்ணிக்க போரியா?"

"ஹா ஹா ஹா... அப்ப என் நளினாவ என்ன பண்றது?"

"நளினாவவிட இந்த பொண்ணு பொருத்தமா இருக்கும் உனக்கு", என்றபடி சிரித்தார்.

"நளினா எங்க?"

"ஊருக்கு போயிருக்கா... வர நாளாகும்.."

" நீ கூட போகலையா?"

"அந்த அளவுக்கு அவ குடும்பத்தோட அறிமுகமாகல"

"உன் 'வைப்' எங்க?"

"வீட்டில் இருக்கா... 4 மாசமாகுது..."

" ஓ,,, வாழ்த்துக்கள்... அப்பாவாக போரிங்களா? எப்ப எங்களுக்கு விருந்து?"

அவருடன் சற்று நேரம் உரையாடிக் கொண்டிருந்தேன். நந்தினி சாப்பிட்டுவிட்டு ஒரு இடமாக அமர்ந்திருந்தாள். முரளி அவளருகே சென்றான். நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தான். அவன் வருகை அவளுக்கு அசௌகரியமாக இருந்திருக்க வேண்டும். அதுவும் கொஞ்ச நேரம் தான். பிறகு அவனது சகஜமான பேச்சுக்கு சிரித்துக் கொண்டிருந்தாள்.


"ரொம்ப சுவாரசியமா ஏதோ பேசுறிங்க போல?" அவ்விடம் சென்ற எனது பேச்சில் கொஞ்சம் திமிரும் கலந்திருந்ததாகவே அறிகிறேன்.

"என்னடா நீ புதுசா வந்திருக்காங்க... தனியா விட்டுட்டு நீ பாட்டுக்கு இருக்கியே..."

"நீ 'பார்ட்டில' 'ஜாய்ன்' பண்ணிக்கலையாடா???", நான் நந்தினியின் பக்கத்தில் அமர்ந்தேன்.

"அதான் அவுங்க எல்லோரையும் தினம் தினம் 'ஆப்பீஸ்ல' பாக்குறோமே... பிறகு என்ன?"


அவன் மேலும் தொடர்ந்தான். " டேய் பாரி... இவுங்க படிச்சி முடிச்சிட்டு வேலை தேடுறதா சொன்னியே..".

"ம்ம்ம்..." நந்தினி ஆமாம் என தலையசைத்தாள்.

"அப்படினா நம்ம 'ஆப்பீஸ்'ல மூயற்சி செஞ்சி பார்க்கலாமே... நமக்கு தான் வேலைக்கு ஆள் தேவை படுதே..".

"ஆமாவா.." வேண்டா வெறுப்பாக பதில் சொன்னேன்.

" ஆமாண்டா... "அக்கவுன்ஸ் டிப்பார்ட்மெண்டில்' 'கிளார்க்கு' வேலைக்கு ஆள் தேடிகிட்டு தானே இருக்காங்க.."

"ஓ... இப்ப உள்ள 'கிளர்க்' என்ன ஆச்சு?"

"அவுங்க வெளியூருக்கு மாறி போறாங்களாம்.."

"பரவாலை மச்சி... நந்தினிக்கு 'அக்கவுண்ஸ்' பார்க்க வராது".

"அது ஒன்னும் பிரச்சனை இல்லை. கத்துக்கிலாம்... நான் பிறகு முதலாளிகிட்ட சொல்லி வைக்கிரேன்... கண்டிப்பா கிடைச்சிடும்". அவனாகவே திறமை மிக்க முடிவுகளைக் காட்டிக் கொண்டான்.

"ஆமா... இப்ப நந்தினிக்கு என்ன வயசாகுது..?" மேலும் தொடர்ந்தான்.

" எதுக்கு... நீ இங்கயே 'இண்டர்வியூ' பண்ண போரியா?"

"இல்லைடா... ஒரு அறிமுகத்துக்கு தான் கேட்டேன்... கொஞ்ச நாளாவே வெறுபாதான் நடந்துக்கிற... ஏன்னு எனக்கு தெரியும்..."

"ஏன்...?''

"அது சரி... நேத்து நளினாவ 'பஸ்' ஏற்றிவிட்டுட்டு எத்தன மனிக்கு வந்த... எப்ப மறுபடியும் ஊருக்கு வரா?"


'அட பாவி. என் தலையில கல்ல தூக்கி போட்டியே' என நினைத்துக் கொண்டேன். இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அக்கனம் நந்தினியைப் பார்த்தேன். முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. முதலில் கண்ட சிரிப்பும் கூட மரைந்து போய் இருந்தது. இப்போது அவன் பேசியதை கேட்க விரும்பாதவள் போல் பார்வைவை வேரு பக்கம் வைத்திருந்தாள். நான் ஒன்றும் பேசாதிருந்தேன். என் முக மாற்றத்தை அறிந்தவனாக மேலும் கேட்டான்.

"நாளைக்கு நந்தினிய 'இண்டர்வியூக்கு' கூட்டிட்டு வரதானே?"

"அவளுக்கு இந்த வேலை பிடிச்சிருக்கிறதா ஒன்னும் சொல்லலையே", நந்தினி என்னுடைய இச்சொல்லை ஆமோதிப்ப்பாள் என்றே நினைத்தேன். அதிலும் மண் விழுந்தது.

"பரவாலை நான் 'ட்ரை' பண்ணி பார்குறேன்", நான் அதிர்ச்சியான பார்வையோடு அவளைப் பார்த்தேன். அவள் அதை கண்டு கொண்டதாக தெரியவில்லை.

"நானும் வேலைக்கு பார்த்துகிட்டு தான் இருக்கேன்.... இவ்வளவு சீக்கிரம் வாய்ப்பு கிடைக்கும்னு எதிர் பார்க்கலை.. இது 'இண்டர்வியூ' மட்டும் தானே... கண்டிப்பாக கிடைக்கும்னு இல்லை... முயற்சி பண்ணி பார்க்கிறேன்" என்றாள்.

எனக்கு தலை சுத்தி போனது. "நீங்க கவலைப் படாதிங்க... அதான் பாரி இருக்கானே... கண்டிப்பா உங்களுக்கு வேலை கிடைக்கும்... ஓரே இடத்தில் வேலை செஞ்சா உங்களுக்கு சுலபம்... 'டிரன்ஸ்போட்' பிரச்சனை இருக்காது... நளினா ஊருக்கு போய்ட்டு வந்ததுக்கு அப்புரம் கொஞ்சம் கஷ்டம் தான்... இருந்தாலும் பிரச்சனை இல்லை... நான் இருக்கேன்..." என்று சொல்லி சிரித்தான்.

அவனது பேச்சு என் இரத்தத்திற்கு தீ மூட்டி கபாலத்திற்கு சூடேற்றியது. கைகள் முடிச்சிட்டு அவன் முகத்தில் குத்த வேண்டும் போல் இருந்தது. நாசமாய்ப் போனவன் என் வாழ்க்கையில் மண் அள்ளி போடுறானே.

தொடரும்...

60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் (15)

அத்தியாயம் 15

"எத்தனை நாளைக்கு ஊர்ல இருக்க போறிங்க?", மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டிருந்த அம்மாவிடம் கேட்டேன்.

"தெரியலைப்பா... நான் போய்ட்டு போன் பண்றேன்".

காலையில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஊரில் இருந்து அழைத்திருந்தார்கள். பாட்டிக்கு உடல் நலமில்லை. மாமாதான் தொலைபேசி இருந்தார்.

"நந்தினியையும் கூட்டிக்கிட்டு போறிங்களா?"

" இல்லைப்பா நந்தினி இங்கயே இருக்கட்டும். மாமா ஏதோ பேசனும்னு சொல்றாரு..."

காலையில் எழுந்து இன்னமும் முகம் கழுவாமல் பல் விலக்காமல் அரைத் தூக்க மயக்கத்தோடு அமர்ந்திருந்தேன். அம்மா கண்ணாடியில் தன்னை சரி செய்து கொண்டிருந்தார். அரை நூற்றாண்டைக் கடந்த வாழ்க்கை அவருடையது. அம்மா இன்னமும் திடகாத்திரமாக இருக்கிறார்.

அவரிடம் எப்போதுமே ஒரு மன உறுதி இருக்கிறது. அப்பா இறந்த பின் தனியாளாக தான் என்னை வளர்த்தார். எந்த சிரமமும் இல்லாமல் வளர்ந்துவிட்டேன். எத்தனை முறை அவரிடம் கோபித்துக் கொண்டுள்ளேன். சில சமயங்களில் அதை யோசிக்கையில் வருத்தமாக தான் இருக்கிறது.

"என்னப்பா தூக்கமா இருந்தா போய் படுத்துக்க. நான் கிளம்புறேன்''.

"இல்லைமா, 'அடுத்த மாசத்துல ஒரு 'பிராஜெக்ட்' ஆரம்பிக்க இருக்காங்க. நான் அந்த இடத்துக்கு போகனும். கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிகிட்டு மதியானம் தான் வருவேன்".

"மத்தியானம் வெளிய சாப்பிட்டுக்குவியா.... அப்படினா நந்தினிய ராத்திரிக்கு மட்டும் சமைச்சிட சொல்லு".

" ம்ம்ம்... இல்லைமா... இன்னிக்கு முதளாலி வீட்டுல 'டின்னர்' இருக்கு..." தயங்கி சொன்னேன்.

" ஹம்ம்ம்... வீட்டுல சாப்பிட உனக்கு அவளோ கஷ்டமா இருக்கு...".

வெளியே அப்பாவின் கார் ஒரு ஓரமாக இருக்கும். அதை அவ்வளவாக உபயோகிப்பதில்லை. பழுதுபடாமல் இருக்க அம்மா சந்தைக்கு போகவும், அவருடைய வேலைகளுக்கு உபயோகித்துக் கொள்வார்.

நானும் பல முறை சொல்லி இருக்கேன் அந்த காரை விற்று புதிய கார் வாங்க. அம்மா ஒப்புக் கொண்டதில்லை. ஏன் நான் சம்பாதித்து புதிதாக வீடு வாங்கிவிட்ட போதும் பழைய வீட்டை விற்க மறுத்துவிட்டார். கல்யாணத்துக்கு முன்பு அம்மா அங்குதான் இருந்தார். நான் கேலாலம்பூரிலேயே வேலை பார்த்து வந்தேன்.

நான் அப்பாவின் காரை சாவி கொடுத்து வைத்தேன். இயந்திரயம் சூடாகட்டும் என்று.

"தனியாதான் போக போறிங்களா... பார்த்து போங்கம்மா..."

"இவ்வளோ நாளும் தனியாதானெப்பா இருந்தேன்... இங்க அடி வாசலுக்கு போய்ட்டு வர என்ன இருக்கு".

நந்தினி அவ்வளவாக பேசவில்லை. தன் குடும்பத்தை பார்க்க அழைத்துச் செல்லாமல்விட்ட ஆதங்கமா என்றும் புரியவில்லை. அம்மா கிளம்புவதற்காக பணிவிடைகளை செய்துக் கொண்டிருந்தாள்.

"என்ன விசயமா மாமாகிட்ட பேசப் போறிங்க... என்கிட்ட கூடவா சொல்லக் கூடாது?".

அம்மா சிரித்து மட்டும் வைத்தார். வேறு பதில் இல்லை.

" நான் உன்கிட்ட என்னப்பா மறைக்க போறேன்...." நெடுமூச்செறிந்து மீண்டும் தொடர்ந்தார்.

"மாமாவுக்கு வயசாகிடுச்சு... அடிக்கடி உடம்புக்கு முடியாம போய்டுது.. தோட்டத்து வேலை எல்லாம் எதும் சரியா சொய்ய முடியரதில்லையாம்...".

எனக்கு 'பக்' என நெஞ்சி உறுதியது. இப்படி இருக்கும் மனிதனிடம் ஒரு வருடம் முடிந்து விவாகரத்து கதையை தொடங்கினா என்ன ஆவது?

"அப்ப தோட்ட வேலையெல்லாம் யார் பார்த்துக்கிறாங்க?"

"வேலைக்கு ஆள் வச்சி பார்த்துக்கிட்டாராம்... யாரும் சரியா வேலை செய்யறதில்லையாம்... கொஞ்ச நாள்ல விட்டுட்டு போட்டுறாங்களாம்... அதுவும் இல்லாம இந்த காலத்து ஆளுங்களுக்கு விவசாயத்துல நாட்டமும் இல்லாம போய்டுச்சி இல்லையா..."

அம்மா கிளம்ப ஆயத்தமானார். "பசியார செஞ்சி வச்சிருக்கேன். சாப்பிட்டு போங்க அத்தை" நந்தினி கூறினாள்.

"இல்லைமா... நான் சீக்கிரமா வீட்டுக்கு போய்டுவேன். அங்க சாப்பிட்டுக்கிறேன். இன்னிக்கு வீட்டில ஒன்னும் சமைக்க வேணா... பாரி ராத்திரி வெளிய போறானாம். நீயும் அவன் கூட வெளிய சாப்பிட்டுக்கோ..."

ஐய்யோ என்ன கதை இது... ஊருக்கு கிளம்புவதும் இல்லாமல் பிரச்சனையில் மாட்டி விட பார்க்கிறாரே... நான் எப்போது அவளை அழைத்து போவதாக சொன்னேன்.

"நான்..." பேச வாயெடுத்த மாத்திரத்தில் அம்மா தொடர்ந்தார்.

" நந்தினியயும் கூட்டிடு போப்பா... ராத்திரி அவ இங்க தனியா இருக்க வேணா... சரி நான் கிளம்புறேன்... போனதும் 'போன்' போடுறேன்".

எனக்கு நெருடலாக இருந்தது. நந்தினியின் முகத்தை பார்த்தேன். அவள் வாசலில் கிளம்பும் காரை பார்த்தபடி இருந்தாள். அவள் அங்கேயே நின்றிருந்தாள். நானும் வேலைக்கு கிளம்ப மேல் மாடியை நேக்கிச் சென்றேன்.

தொடரும்...

Sunday, November 30, 2008

60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் (14)


அத்தியாயம் 14

அவள் எனது கைவிரல்களை இருக்கப் பற்றி இருந்தாள். நேரம் ஆக ஆக பற்றி இருந்த விரல்களின் இருக்கம் அதிகமாவதை உணர்ந்தேன். அவளை நோக்கினேன் கண்களை மூடியபடி என் தோள் மீது சாய்ந்திருந்தாள். மக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்திருந்தது. அவர்களுக்கான பேருந்து விரைவில் வந்துவிட்டதாக அறிந்தேன். அடிக்கடி கண்களை என் கைக்கடிகாரத்தின் முட்களிடையே ஓடவிட்டுக் கொண்டிருந்தேன். வெளியே லேசான தூரள் போட்டுக் கொண்டிருந்தது வானம். ஈரப்பதம் நிறைந்தக் காற்று இதமாக முகத்தை வருடியது. மின்னல் கீற்றுகள் வானத்தைக் கிழித்துக் கொண்டு அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டிருந்தன.

அவள் கைப்பிடியில் இருந்து லேசாக என்னை விடுவித்தேன். தலை நிமிர்த்தி என் முகத்தைப் பார்த்தாள்.

"காபி ஏதும் வாங்கி வரவா?" புன்னகைத்தபடி முகத்தில் சரிந்திருந்த முடியை காதிடுக்கினில் கோதிவிட்டுக் கொண்டாள்.

"எனக்கு தூக்க தூக்கமா இருக்கு", கொஞ்சும் குரலில் பதிலளித்தாள்.

" 'பஸ்' ஏரினதும் நல்லா தூங்கலாமே?", என்றேன்.

" நான் 'டிராவல்' செஞ்சி ரொம்ப நாளாகுது. இந்த முறை வீட்டுக்கு போக அசௌகரியமா இருக்கு".

"அப்ப நானும் கூட வரவா?"

"ம்ம்ம்... நான் அன்னிக்கு கூப்பிட்ட போது 'லீவ்' கிடைக்காது, வேலை இருக்கு, அது இதுனு 1008 காரணம் சொன்ன, இப்ப என்னவாம்?"

"அப்படிலாம் ஏதும் இல்லை, இந்த முறை எந்த தொந்தரவும் இல்லாமல் உன் விடுமுறை இருக்கட்டும்... ஆனா இப்போதைக்கு அப்பாக்கிட்ட நம்ம பத்தி ஒன்னும் சொல்ல வேணாம் 'பிலிஸ்'.

அவள் முகம் சற்றே சுருங்கியது, "ஏன் உனக்கு பிடிக்கலையா?".

"பிடிக்கலைன்னு இல்லை, இப்போதைக்கு வேண்டாம்னு நினைக்கிறேன்... இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்.." அவள் முகம் சுழித்தாள்.

"சரி... நான் அப்பாகிட்ட ஏதும் சொல்லல... ஆனா நீ மறக்காம எனக்கு போன் பண்ணு..." என் கைகளை மீண்டும் இருக்கப் பற்றிக் கொண்டாள்.

"உன்னோட டிக்கட் எங்க?".

" பேக்ல இருக்கு", தனது தோளில் மாட்டி இருந்த பணப்பையைக் காட்டினாள்.

சற்று நேரத்தில் பேருந்தும் வந்தது. அவளது துணி பையை எடுத்துக் கொண்டு பேருந்து நிற்குமிடம் போனேன். கிளம்புவதற்கு இன்னும் ஒரு சில நிமிடங்கள் இருந்தது. நளினாவின் முகத்தில் சோகம் அப்பிக் கிடந்தது. என்னை அணைத்து சட்டென கன்னத்தில் இதழ்களை பதித்தாள். அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்திருந்தது.

அவள் கிளம்பியதும் எனது கரை நோக்கி நடக்கலானேன். மழை தனது மெல்லிய தூறலை இன்னமும் விட்டபாடில்லை. நளினாவின் முத்தத் தடங்கள் அழியாமல் இருக்கவோ என்னவோ அவசர அவசரமாக காருக்குள் புகுந்துக் கொண்டேன்.

மீண்டும் மீண்டும் அவளது நினைவுகள் என்னைத் துரத்திக் கொண்டே இருந்தன. அவளும் இப்படி தான் என்னை நினைத்துக் கொண்டிருப்பாளா? இல்லை தூங்கியிருப்பாளா? அவளை தனிமையில் விட்டுவந்த நானும் இனி தமிமையில் தான் இருக்கப் போகிறேன். இல்லை மனைவியென பெயர் கொண்டவள் உன்னோடு இருக்கிறாள் என்றது மனம்.

வீட்டிற்கு வந்து சேர்ந்த போது இரவு 11.30ஆகிவிட்டது. அறைக்கதவை திறந்த போது கண்கொள்ளா திருக்கோலத்தில் நந்தினி படுத்திருக்கக் கண்டேன். கதவு திறந்த சத்தம் மேலிட சட்டென எழுந்துவிட்டாள். என்னைக் கண்டு அவளும் திடுக்கிட்டிருக்க வேண்டும். கையில் கிடைத்த போர்வையைக் கொண்டு மெல்லிய இரவு உடை கொண்டிருந்த தன் மேனியை மறைத்துக் கொண்டாள்.

" நீங்க வர 'லேட்டாகும்னு நினைச்சேன்", அவள் பேசினாள்.

நானும் பேசத்தான் நினைத்தேன். ஆனால் குரல் ஒலி அடித் தொண்டையில் அடைத்துக் கொண்டு வர மறுத்தது.

"சாவி தேடுறிங்களா? அந்த மேசை மேல இருக்கு", என்றாள்.

நெஞ்சு படபடத்துக் கொண்டது. ஏன் என்று தெரியவில்லை.

அந்த சிறிய அறையைத் திறந்து கதவைச் சாத்திக் கொண்டு படுத்தேன். நந்தினி தன்னை இழுத்துப் போர்த்திக் கொண்ட காட்சி மனத்திரையில் ஓடியது. நீண்ட பெருமூச்சைவிட்டேன். போர்வையை போர்த்திக் கொண்டேன். வெளியே மழையின் சத்தம் வேகமாக இருந்தது.

தொடரும்...

Thursday, November 20, 2008

60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் (13)

அத்தியாயம் 13

யாருக்குத் தான் பிரச்சனையில்லை. நமது மனம் ஆறுதல் பெற ஒரு தோள் கிடைக்குமா என ஏங்குகிறோம். அவருக்கு என்ன பிரச்சனையோ என அறிவார் இல்லை. முரளி என்னை நாடிய போது எனக்கு அப்படித்தான் தோனியது.

"சொல்லு... மறுபடியும் 'லவ்'ல பிரச்சனையா?"

"இல்லை டா! எங்க அம்மா தான்... அவுங்களுக்கு தெரிஞ்சவங்க மகளுக்கு என்னைக் கல்யாணம் பேசி முடிக்க நினைக்கிறாங்க..".

"நல்ல விசயம் தானே?".

"என்னடா நல்லது? உனக்கு தான் என்னைத் தெரியுமே! யாருன்னே முகம் தெரியாதவங்கள எப்படிடா கல்யாணம் பண்ணிக்க முடியும்? அதுவும் பெரியவங்களுக்கு நம்ம 'டேஸ்ட்' தெரியாது...".

"நீ பொண்ணப் பார்த்தியா
?" அவன் இல்லையெனத் தலையசைத்தான்.

"பார்க்காம எப்படி முடிவு பண்ணுன
?"

" எதுக்குடா பார்க்கனும்
?... எனக்கு விருப்பமில்ல... அம்மாவோட தொந்தரவு தான் தாங்க முடியல... சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கச் சொல்றாங்க... இப்ப எனக்கு 28 வயசு தான் ஆகுது... இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னு நினைக்கிறேன்".

எனக்கு 25 தானே ஆகிறது... கணவன் எனும் முத்திரை என் மீது குத்தப்பட்டுவிட்டது. இது இவனுக்கு தெரிந்தால்...
?

" இந்த வயசுல கல்யாணம் வேண்டாம்னு சொன்னா எப்பதான் பண்ணிக்க போற
?"

" தெரியல.. ஆனா இப்ப நான் தயாரா இல்லை".

" ஒரு பொண்ணயாவது உருப்படியா காதலிச்சிருக்கியா
? 'லவ்' பண்ணி கொஞ்ச நாள்ல பிரச்சனைனு சொல்லுவ... மறுபடியும் அடுத்தவ...".

" நீ பேசுவடா... எனக்கும் உன்னை மாதிரி
'லவ்வர்' கிடைச்சா நான் ஏன் புலம்ப பொறேன்... உனக்கு என் கவலை புரியாது".

முரளியின் பேச்சு எனக்கு நகைச்சுவையாக இருந்தது. எப்படிப்பட்ட பெண்ணாகட்டும்
, கொஞ்ச நாளில் பிரச்சனை, சண்டையெனச் சொல்லி விலகிக் கொள்வான்.

இந்த முரளி ஆண்களை வர்ணிப்பதை போல் தும்பி இனத்தைச் சேர்ந்தவன் என நினைக்கிறேன். இரண்டு மூன்று மாதத்திற்கொரு முறை அடுத்த பூவிற்கு தாவிவிடும் ரகம். சட்டையை மாற்றுவது போல் பெண்களை மாற்றிக் கொள்ளும் அவனுக்கு எந்தச் சட்டை சரியாய் இருக்குமென அறிவார் இல்லை. அவனை பேசிச் சமாளிக்க போதும் போதும் என்றாகிவிட்டது.

"சரி இந்த வாரம்
'சாட்டர்டே' 'ஃப்ரியா' இருப்பியா?".

"வெள்ளிக்கிழமை ராத்திரி நளினாவ வழியனுப்ப போறேன். வர
'லேட் ஆகும்.சனிக் கிழமை 'ஃப்ரியா' இருப்பனானு தெரியல".

"
நளினாவ எங்க வழியனுப்ப போற?"

"
அவ ஊருக்கு போறா".

"
அப்படினா நீ மறுபடியும் 'பேச்சுலர்'னு சொல்லு. பிரச்சனை இல்ல ஊர் சுத்தவும் ஆட்டம் போடவும் நான் 'ஜாய்ன்' பண்ணிக்கிறேன்". என்றான் கிண்டலாக.

நான் ஒன்றும் பேசாமல் சிரித்துமட்டும் வைத்தேன்.

அவன் மேலும் தொடர்ந்தான். "அப்படினா சனிக் கிழமை ராத்திரி உன் வீட்டுக்கு வந்திடுறேன். "பார்ட்டிய' 'ஓப்பன்' பண்ணிடலாம் 'ஓகேவா' ?".

சில காலமாக நான் மது அருந்துவதை விட்டுவிட்டேன். ஏன், எதனால் என்ற காரணங்கள் தெரியவில்லை. அவன் அப்படி கூறியதும் வீட்டில் சூழ்நிலை ஞாபகத்துக்கு வந்தது. அம்மாவும் நந்தினியும் உடன் இருக்கும் சமயத்தில் இந்த ஜந்து அங்கே வந்து தொலைத்தால் என் கதி அதோகதிதான்.

"
வேண்டாம் மச்சான். கஸ்டம்... எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு..." பட படவென வார்த்தைகளை உதிர்த்தேன்.

முரளியின் முகம் சுருங்கியது. என்ன நினைத்திருப்பான் என தெரியவில்லை.

"
சரி மச்சான்... நான் 'ஃப்ரியா' இருக்கும் போது உன் வீட்டு பக்கம் வந்துட்டு போறேன்."

"
எதுக்கும் வரத்துக்கு முன்ன எனக்கு போன் போடு", என்றேன்.

**********************

நந்தினியின் முகத்தைப் பார்த்தேன். பூசினாற் போன்ற முகம். பல வருடங்களுக்கு முன் பார்த்தைவிட எழில் மிகுந்து இருந்தாள். கண்களை மூடி தூங்கி இருந்தாலும் அதில் ஒரு வசீகரம் இருந்தது. அழகிய கழுத்து. காற்றாட விழுந்திருக்கும் அவள் கூந்தல்...

குரலை கனைக்கும் சத்தம் கேட்டது. அம்மா நின்றிருந்தார்.

"
அவளை எழுப்பாதட பாரி... பாவம் பயண களைப்புல அசந்து தூங்குறா..."

யார் எழுப்பினார்கள். இவள் ஏன் வரவேற்பு அறையில் இருக்கும் மெத்தை நாட்காலியிலேயே தூங்குகிறாள் என்று தான் பார்த்தேன். இச்சமயம் அம்மா என்னை பார்த்தது தான் வெட்கமாக போய்விட்டது. அம்மாவிடம் ஏதும் பேசாமல் மேல் மாடியில் இருக்கும் என் அறையை நோக்கி விரைந்தேன்.

"
தண்ணி சாப்பிடலையாப்பா?"

"
இருங்கம்மா குளிச்சிட்டு வரேன்", சோர்வாக பதிலளித்தேன்.

அறையில் புகுந்தவுடன் எதிரே இருந்த மெத்தை மீது தொப்பென விழுந்தேன். கடந்த சில நாட்களாக இந்தக் கட்டிலில் தான் என் கனவுகள் தொடர்ந்தன. இன்று நந்தினி வந்துவிட்டாள். இன்றிரவு முதல் மீண்டும் அந்த குட்டி அறையில் தான் எனது கனவுலக சாம்ராஜியம் தொடர வேண்டுமென்பது விதி. பரவாயில்லை. இந்த வருடம் வரைதானே. இந்த வருடம் முடிந்ததும் மீண்டும் பழைய பாரி தாசன் பிரவேசிப்பான்.

கொஞ்ச நேரம் படுத்திருந்தேன். பிறகு குளித்து கிளம்பினேன். அப்போது நந்தினி மேல் அறைக்கு வந்தாள்.

"
எனக்கு ரொம்ப தலைவலியா இருக்கு. நான் இங்க படுத்து தூங்கவா?" நான் தலையசைத்து வைத்தேன்.

"
உடம்புக்கு முடியலையா நந்தினி?".

"
எனக்கு எப்போதும் இப்படிதான். ரொம்ப தூரம் நடந்தாலே தலை வலி கொடுக்க ஆரம்பிச்சிடும். கொஞ்ச நேரம் தூங்கினா சரியாகிடும்" என்றாள்.
நான் ஏதும் பேசாமல் இருந்தேன். படுத்தவுடன் கண்களை மூடி அயர்ந்து போனாள்.

கட்டில் அருகே இருக்கும் சிறு விளக்கை போட்டேன். குளிரூட்டியின் அளவைக் குறைத்துவிட்டு போர்வையை அவள் மீது போர்த்திவிட்டேன். அறையின் விளக்கை அனைத்துவிட்டு கீழ் மாடிக்கு வந்த போது அம்மா தேநீரை சுவைத்தபடி இருந்தார்.

"
பாரி, நந்தினிக்கு உடம்பு சரி இல்லைப்பா". அவர் பேச்சை ஆமோதித்த விதமாய் தலையசைத்துவிட்டு நாட்காலியை இழுத்து போட்டு அமர்ந்தேன்.

"
முதல்ல அவ வாந்தி எடுத்தா", அம்மா என்னை பார்த்து சிரித்தபடி கூறினார்.

"
வாந்தியா... காய்ச்சலா இருக்குமோ...?"

"
உடம்பு சூடா இல்லை. ஒரு வேளை மாசமா இருக்கா போல...".

"
ஏம்மா நீங்க வேற... அவளுக்கு சின்ன வயசுல இருந்த மாதிரியே இன்னமும் ஒற்றைத் தலைவலி இருக்கு போல".

நந்தினிக்கு இளம் பிராயத்திலேயே இப்படி இருந்தது. கலைத்து போகுப்படியானால் அவளுக்கு தலைவலி ஏற்படும். பித்த வாந்தியும் எடுப்பாள். இதனாலேயெ அவளை வெளியே எங்கேனும் அழைத்துச் செல்ல வீட்டில் பயப்படுவார்கள். இன்னமும் அந்த பிரச்சனை அவளைவிட்டு நீங்கவில்லை என்றே அறிகிறேன்.

ஆனால் என் அம்மாவுக்குதான் என்னவெல்லாம் கனவுகள். அர்த்தமற்ற கனவுகள்.

"
டேய் பாரி அவளுக்கு நல்ல வேலையய பார்க்கனும்டா..".

"
என்ன வேலை? ஊர்ல நல்லா தானே வேலை பார்த்துகிட்டு இருந்தா? அந்த வேலைக்கு என்ன வந்துச்சு?".

"
அவ அந்த வேலைய விட்டுட்டா". அம்மா அப்படிச் சொன்னதும் நெற்றியைச் சுறுக்கினேன்.

அம்மா மேலும் தொடர்ந்தார். "என்னடா அப்படி பார்க்குற? அவ ஊர்ல வேலை செஞ்சிகிட்டு, நீ இங்க தனியா இருந்துகிட்டு நல்லாவா இருக்கு... உன் மாமா என்ன நினைப்பாரு... அதான் நந்தினிய வேலைய நிப்பாட்டி இங்கயே இருக்க சொல்லி அனுப்பிச்சிட்டாரு">

நான் என் பெரு மூச்சை அமைதியாக இறக்கி வைத்தேன்.

"
முதல்லயே அவகிட்ட கேட்டேன். ஏதாவ்து 'கிராணி' வேலை கிடைச்சா செய்யறதா சொல்றா... குழந்தை குட்டினு ஆன பிறகு வேணும்னா வேலைய விட்டுட்டு வீட்டோட இருக்கட்டும்".

அம்மாவின் பேச்சில் நிதர்சனம் இருந்தது. ஆனால் எனக்கு அது வேம்பாக கசத்தது.

"
உனக்கு தான் நிறைய பேர தெரியுமே... யார்கிட்டயாவது சொல்லி நல்ல வேலையா கிடைக்குமானு பாரு".

"
சரிமா நான் சொல்லி வைக்கிறேப்". நான் ஒப்புக்கு சொல்லி வைத்தேன். எனது பதில் அம்மாவுக்கு நிறைவை தந்திருக்கிறது என்பதை அவர் முகம் காட்டியது.

தேநீர் குடித்துவிட்டு சற்று நேரம் தொலைக்காட்சியைப் பார்த்தேன். மறுபடியும் மாடிக்குச் சென்று பார்த்த போது நந்தினி எழுந்துவிட்டிருப்பதைக் கண்டேன்.

"
இன்னும் தலைவலியா இருக்கா நந்தினி?" இல்லை என்பதாக தலையசைத்தாள்.

கட்டில் ஓரத்தில் பார்த்தேன். நந்தினியின் துணிப் பை இருந்தது. மதியம் நடந்த சம்பவத்துக்கு என் மனம் இட்டுச் சென்றது. அவளை அழைத்து வந்தவன் யார் என கேட்கலாமா என்று நினைத்தேன். அதைக் கேட்க உரிமை இல்லாதது போல் உணர்ந்தேன்.

"
நீங்க எங்க கிளம்புறிங்க". நான் பேச நினைத்துக் கொண்டிருக்கையில். நந்தினி என்னிடம் கேள்வியைக் கேட்டாள்.

"
கொஞ்சம் வெளிய போய்ட்டு வரேன்".

"
நானும் கூட வரவா? என்னையும் அழைச்சிகிட்டு போவிங்களா?" எனக் கனிவாக கேட்டாள்.

வீட்டில் இருப்பது அவளுக்கு இறுக்கமான சூழ்நிலையை உணர்த்துகிறது போலும். என்னுடன் வெளியே வர விரும்புகிறாள். அவளது கேள்வி எனக்கு நெருடலாக இருந்தது. என்ன பதில் சொல்வதென தெரியவில்லை. முக்கியமான விடயம் ஏதும் சொல்ல விரும்புகிறாளோ என்றும் உள்ளணர்வு சொல்லியது.

தொடரும்....

Thursday, November 6, 2008

60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் (12)

அத்தியாயம் 12

நந்தினி ஊருக்கு கிளம்பி நான்கு நாட்களாகிவிட்டன. இப்போதெல்லாம் வேலையில் சரிவர கவனம் செலுத்த முடியாததை போன்ற எண்ணமே அடிக்கடி தோன்றி மறைகிறது. அன்று அலுவலகத்தில் இருந்த போது அம்மா தொலைபேசினார். நந்தினி ஊரில் இருந்து வருவதாகவும் பேருந்து நிலையத்திற்குச் சென்று என்னை அழைத்துவரும்படியும் கூறினார்.

அம்மா தொலைபேசிய போது காலை மணி 10.20. எப்படியும் நந்தினி இங்கு வந்தடைய இன்னும் 1.30 மணி நேரத்திற்கு மேலாகும். அலுவலக வேலைகள் தலைக்கு மேல் இருந்தது. நான் அவளைச் சென்றழைப்பது கடினம் என்றே கருதுகிறேன்.

"அம்மா! அவள டாக்ஸி பிடிச்சி வீட்டுக்கு வந்திட சொல்லுங்க. எனக்கு வேலை அதிகமா இருக்கு".

"டேய்! கிறுக்குப் பய மாதிரி பேசாதடா, பொண்டாட்டிய தனிய வர சொல்லுறியே. அவ இந்த ஊருக்கு புதுசு டா. ஆபீஸ்ல சொல்லிட்டு, அவள போய் அழைச்சிட்டு வா". நான் பயப்பட மாட்டேன் என தெரிந்தும் அதட்டலாகவே சொன்னார்.

இன்னும் சற்று நேரத்தில் முதலாளியுடனான சந்திப்பு தொடங்கிவிடும்.எந்நேரத்திலும் எனது மேசை மீதிருக்கும் இண்டர்காம் ஒலிக்கலாம். முதலாளி என்னை அழைக்கலாம். மேசை மீது தயார் படுத்தி வைத்திருந்த கோப்புகளை சரி பார்த்துக் கொண்டேன்.

அம்மாவின் நினைவுறுத்தல் என் கவனத்தைச் சிதறடித்தது. நந்தினியை அழைத்து வரச் செல்வதா இல்லை முதலாளியுடன் சந்திப்பா? யோசிக்கவே சிரமமாக இருந்தது.

"மச்சான் ரெடியாகிடிட்டியா? அந்த ஆள பார்க்கவே பயமா இருக்குடா. கடு கடுனு இருக்காரு."

"5 நிமிசத்துக்கு ஒரு தடவ போன்ல தொங்குற இல்லைனா காணாம போயிடுற பின்ன ஏசாம கொஞ்சுவாங்களா?"

எனது குழுவினரோடு அன்றய சந்திப்பில் படைப்பினை சமர்பித்தோம். அதில் ஒரு நிறைவு கிடைத்ததாக மேனேஜரின் முகத்தில் இருந்த புன்னகையில் அறிய முடிந்தது. என் கைக்கடிகாரத்தைப் பார்த்த போது நேரம் மதியம் 1.

நிறுவணத்தில் அனைவரும் மதிய உணவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். எனக்கு அதில் மனம் சொல்லவில்லை. வீட்டிற்கு தொலை பேசினேன்.

" 'ஹலோ' அம்மாவா?"

''இல்லை நந்தினி பேசுறேன்'' தூக்கி வாரி போட்டது. அதற்குள் வீட்டில் இருக்கிறாளா. காலம் எவ்வளவு விரைவாக உள்ளது!

"அம்மா இருக்காங்களா?" அவள் அம்மாவை அழைத்து தொலைபேசியைக் கொடுத்தாள்.

"டேய் எங்கடா போன?" வாய் திறப்பதற்குள் வாங்கிக் கட்டிக் கொண்டேன்.

" மீட்டிங் இருந்துச்சுமா, அதான் போன் ஆப் பண்ணி வச்சிட்டேன்".

"ஹம்ம்ம்... பரவால... நந்தினி நல்லபடியா வீட்டுக்கு வந்துட்டா?"

"நீங்க தான் பயபட்டிங்க, அவ சரியா 'டேக்சி' ஏறி வந்துட்டா பாருங்க".

"அட போட. நல்ல வேளையா அவ ஃபிரண்ட அங்க பார்த்திருக்கா, அந்த பையன் தான் அழைச்சிட்டு வந்தான்".

எனக்கு தலை சுற்றியது. வீட்டுக்கு போகிறேன் என சொன்னவள் எதற்காக திரும்பி வர வேண்டும். கோலாலம்பூரில் அவளுக்கு யாரைத் தெரியும்? அழைத்து வந்த அந்தக் கேடு கெட்டவன் யார் என்றெல்லாம் சிந்தனை சிதறி ஓடியது.

மதிய உணவு தயாரனதும் வேலை செய்பவர்கள் எல்லோரும் அழைக்கப்பட்டார்கள். நானும் கடமைக்காக சாப்பாட்டு மேசையில் அமர்ந்தேன். மரியாதைக்கு கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு வெளியே சென்றேன். எனது உணவு வேளை ஒரு வெண்சுருட்டு புகைக்கப்படாமல் நிறைவு பெறாது. அன்று அளவுக்கு அதிகமாகவே மன உளைச்சல் என்னை வாட்டி இருந்ததால். வெண்சுருட்டுகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருந்தது.

மணி 2.30 அலுவலகத்தினுள் நுழைந்தேன். மேசைமீதிருந்த நாட்குறிப்பைப் பார்த்தேன். எதிர் வரும் ஞாயிறு அன்று ஒரு சிகப்பு வட்டம் போட்டு வைக்கப்பட்டிருந்தது. ஆம நினைவிற்கு வந்தது. நளினா ஊருக்கு போவதாக சொன்ன தேதி.

பக்கத்திலேயே அவளது புகைப்படம். சின்னதாக 'ஃபிரேம்' போட்டு மேசை மீது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. என்னிடம் அடம்பிடித்து வைக்கச் சொன்னாள். வேலை நேரத்திலும் நீ என்னை மறக்காமல் இருக்கனும் அப்படினு சொல்வாள்.
இப்போது அதை நினைக்கையில் எனக்குள் லேசான புன்னகை.

இந்த வாரம் நளினா என்னைவிட்டு பிரிந்து போகிறாள். மனதுக்குள் ஏதோ ஒரு வித வலி இருக்கவே செய்தது. பிரிவு பாசத்தின் பிணைப்பு என்று கூட சொல்வார்கள். இக்கனம் மனம் அதை ஏற்க மறுக்கிறது.


மறுபக்கம் நந்தினியை பற்றிய எண்ணங்கள். அவளை அழைத்து வந்த ஆடவன் யார் என்றே சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். அவளிடம் இதை பற்றி கேட்க எனக்கு உரிமை இருக்கிறதா இல்லையா என்று எனக்கு புரியவில்லை. உரிமை இருந்தும் இல்லாத ஒரு நிலை. 'ச்சே.. என்ன வாழ்க்கை இது' என்றே
வருத்திக் கொள்கிறேன்.

என் அறைக் கதவு தட்டபட்டதும் நினைவுகள் சட்டென்று காற்றில் கரைந்து காணாமல் போனது.

முரளி வந்திருந்தான்.

" ஏன் டா?" என கேட்டேன்.

"உன் கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்."

" அதான் 'பிரசண்டேசன்' முடிஞ்சதே இன்னும் என்ன?"

"வேலை சம்பந்தமா இல்லை, வாழ்க்கை சம்பந்தமா பேசனும்." என்றான்.

எனக்கு மேலும் தலைவலி அதிகரித்தது.

தொடரும்...

Friday, October 31, 2008

60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் (11)

அத்தியாயம் 11

அன்றய தினம் காலையில் சிற்றுண்டியை சுவைத்துக் கொண்டிருந்தேன்.

"டேய் பாரி, சாப்பிட்டுட்டு நந்தினிய 'பேங்'கு அழைச்சிட்டு போ, பிறகு சலவைக்கு கொடுத்த உன் துணிகளை வாங்கிட்டு வந்திடு, இனி வீட்டிலேயே சலவை பண்ணிக்கலாம், உனக்கு ஒரு செலவும் மிச்சமா இருக்கும்"

"எதுக்குமா 'பேங்'கு?"

"அவ தங்கச்சி காலேஜ்ல படிக்கிறா இல்லையா அவளுக்கு பணம் போடனும்னு நந்தினி சொல்லிக்கிட்டு இருந்தா. இன்னிக்கு உனக்கு ஓய்வு தானே? கூட்டிட்டு போய்டு வாயேன்?"

முடியாது என நான் சொன்னாலும் அவ்விடத்தில் எடுபடாமல் தான் போகும். வாக்கு வாதம் நீளும். அதற்கு இடம் கொடுக்காமல் சரியென தலையசைத்து வைத்தேன்.

"அத முடிச்சிட்டு அப்படியே…" அம்மா தொடர்ந்தார்.

"ஐயோ அம்மா, என்ன இது காலையிலயே இப்படி தொல்ல பண்ணிகிட்டு இருக்கிங்க, ச்சே".

ஓய்வு நாட்களில் சுதந்திரமாக சுற்றித் திரிந்தவன். அம்மாவின் இப்பேச்சு என்னை எரிச்சலூட்டியது. குடும்ப சுமைகளுக்குள் அடைக்கப்படுவதாய் உணர்ந்தேன்.

"முதல்லதான் 'பசாருக்கு' போனிங்களே அப்பவே எல்லா வேலையும் முடிச்சிருக்க வேண்டிதானே?" நான் தொடர்ந்தேன்.

"டேய் அது சமையலுக்கு உள்ள பொருள் வாங்க போனேண்டா. வீட்டுக்கு தேவையான மற்ற பொருளை 'சூப்பர் மார்க்கேட்ல' தான் வாங்கனும், விடிஞ்சதும் யாரு 'சூப்பர் மார்க்கேட்' திறந்து வச்சிருக்கா? போற வழி தானே.. நீ ஒன்னும் வாங்க வேணாம் நான் நந்தினிகிட்ட சொல்லிட்டேன் அவ வாங்கிடுவா. நீ கூட்டிக்கிட்டு போனா போதும்."

நந்தினியை அழைத்துக் கொண்டு போனேன். வங்கியில் சேவை இயந்திரத்தில் பனத்தைச் செழுத்திவிட்டு, பேரங்காடிக்குச் சென்று வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு சலவைக் கடைக்குப் போனேன்.

"என்ன தம்பி துணி கொடுத்து ரொம்ப நாளாகுது இன்னிக்கு தான் வர?" சலவைக் கடை 'ஆண்டி' கேட்டார்.

"ஊருக்கு போயிருந்தேன் ஆண்டி. அதான் கொஞ்சம் லேட்" அவர் எடுத்து வைத்த துணிகளை பெற்றுக் கொண்டு பணத்தைச் செலுத்தினேன்.

"யாருப்பா இது? புதுசா இருக்காங்க?"

"என் மாமா பொண்ணு. பேரு நந்தினி. லீவுல வந்திருக்காங்க."

அங்கிருந்து கிளம்பினேன். இந்த ஆண்டி ஆள் கிடத்தால் ஊர் கதைகளை பேசும் ஆள். இவரிடம் பேசிக் கொண்டிருந்தால் நந்தினியின் வாயையும் கிண்டி விடுவார். அது நல்லதர்கல்ல.

"அந்த அண்டிக்கு ஒரு பொண் இருந்தா. ஒரு ஆக்சிடண்ட்ல இறந்துட்டா. அவுங்களுக்கு பெண் பிள்ளைங்கனா ரொம்ப பிடிச்சி போகும்".

அவளிடம் சொல்லிக் கொண்டு வந்தேன். ஏதாவது பேசுவோம் எனும் எண்ணத்தில் பேசினேன். எதிரில் ஒரு தேனீர் கடை தெரிந்தது. நந்தினியை தேனீர் சாப்பிட அழைத்தேன்.

"என்ன சாப்பிடுற?"

"எனக்கு காபி போதும்" என்றாள்.

"நந்தினி நம்ம பிரச்சனைய சீக்கிரமா தீர்த்தாகனும். ரெண்டு பேருமே அமைதியா இருக்கிறது யாருக்கும் எந்த நன்மையும் இல்ல. நம்ம வாழ்க்கை தான் பாதிக்கும்", நானே ஆரம்பித்தேன்.

"நமக்கு நடந்தது எல்லாம் உனக்கு தெரியாம இல்ல.." மேலும் தொடர்ந்தேன்.

"பாரி, சின்ன வயசுல நம்ம வாழ்க்கை வேற ஆனா இப்ப அப்படி இல்லை. பொறுப்புகள் அதிகமாகுது. சுமத்தவும்படுது. நமக்கு நடந்த கல்யாணமும் அப்படிதான். கொஞ்சமும் யோசிக்காம நம்ம குடும்பத்த நீ காப்பாத்தினதுக்கு நன்றி".

"அது மாமாவுக்காக நந்தினி…" அவள் மொல்லிய புன்னகையை சிந்தினாள் அதன் அர்த்தம் அவளுக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டும்.

"நாம சொந்தம்கிறது மட்டுமே என் மனசுல ஊறி இருக்கு நந்தினி… எந்த காலத்திலும் அது மட்டுமே எனக்குள்ள உறுதியா இருக்கு. இந்த நிமிசம் வரை நடந்துகிட்டு இருக்கிறதெல்லாம் கனவு போலவே இருக்கு. நமக்குள்ள வேற வேற கனவுகள் இருக்கலாம், ஆன கண் சிமிட்டும் நேரத்தில் எல்லாமே மாறி போய்டுச்சு".

"உன் வாழ்க்கையை தெந்தரவு செய்ததற்கு என்னை மன்னிச்சிரு பாரி. நடந்தது எல்லாமே எதிர் பார்க்காத விஷயம் தான். எதுவுமே நாம் விரும்பி நடக்கறதில்லை", என்று சொல்லியவளின் கண்களில் நீர் துளித்திருந்தது. அதை மறைக்கும் விதமாய் பார்வையை வெளியே படரவிட்டாள்.

"இந்த விசயத்தில் நான் நேர்மையானவனா நேர்மை இல்லாதவனானு எனக்கே ஒன்னும் புரியல நந்தினி. என்னை பொருத்த வரை நான் எதுக்கும் தயாரகளைன்றது தான் நிஜம்".

"நடந்ததுலாம் கசப்பான சம்பவம் தான். எல்லாதுக்கும் நன்றி பாரி". நான் பேசுவது ஒன்றாகவும் அவள் சொல்லும் பதில் ஒன்றாகவும் இருந்தது. என் மனதில் இருப்பதை அவள் புரிந்துக் கொண்டதாக தெரியவில்லை.

"தப்பு நம்ம மேல இல்லை பாரி. எல்லாம் சூழ்நிலை காரணமா நடந்தது தான். இது எல்லாத்துக்கும் நான் தான் காரணம். எல்லாத்துக்கும் நான் தான் பொறுப்பாகனும். கல்யாணம்ற பேர்ல நாம கடைசி வரை சேராமல் போனாலும் நான் ஏத்துக்கிறேன்… ஆனா…" மீண்டும் தன் பேச்சை தொடர்ந்தவர் சற்றே நிறுத்தினாள்.

"ஆனா என்ன?"

"உடனடியான பிரிவு நமக்கு வேண்டம்னு தோணுது பாரி, எனக்காக இத நீ ஒத்துக்குவியா? இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே.. 'அட் லிஸ்ட்' இந்த வருடமாவது ஆகட்டும். நம்ம தீடீர்னு பிரிஞ்சி போனா அப்பா ரொம்ப பாதிக்கப்படுவாரு". என்றாள்.

"ம்ம்.. நான் நாம் பிரியனும்னு சொல்லல நந்தினி…" நான் பேசுவதறியாமல் உளர ஆரம்பித்தேன். மாமாவின் முகம் ஒரு கனம் என் நினைவை வெட்டிச் சென்றது.

"எனக்கு புரியுது பாரி… விதி வசத்தால் நாம் பிரியனும்னா நான் ஏத்துக்குவேன். அதுவே நாம் சேர்ந்து வாழனும்னு வந்தா, இப்ப உள்ள நிலைமைல நாமே நம்மை கொடுமை படுத்திக் கொள்றதுக்கு சமமாதான் கடைசி வரை அமையும்". என்னால் என் நிலை அறிய முடியவில்லை. ஆனால் அவளின் பேச்சு அவள் தெளிவாக இருப்பதையே குறித்தது.

" 'ஐஆம் சாரி' ".

"நானும் மன்னிப்பு கேட்டுக்கிறேன் பாரி, இப்போதைக்கு இந்த மன்னிப்பு மட்டும் தான் நமக்கு ஆறுதல். இனிமேலாவது நாம நாமளா வாழ முயற்சி செய்யலாம்", அவள் என்னை பார்த்து புன்னகைத்தாள். நான் இன்னமும் சுவைக்கப்படாமல் வைத்திருக்கும் தேனீர் கோப்பையை நோக்கியபடியே இருந்தேன்.

"ம்ம்ம்… பாரி ஒரு உதவி செய்வியா?"

"உதவியா… என்ன உதவி நந்தினி?" நெற்றியைச் சுறுக்கினேன்.

"நாளைக்கு நான் வீட்டுக்கு போறேன். என்னை 'பஸ்' ஏற்றி விடுறியா?".

என்னை திகைக்க வைத்தாள். அவளை பார்க்க பாவமாக இருந்தது. ஒரு புரம் ஏதோ ஒரு சுமையில் இருந்து நான் தப்பும் துருப்புச் சீட்டு கிடைக்கப் போவதாகவும் உணர்ந்தேன்.

தொடரும்…