Tuesday, September 16, 2008

60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் (5)

அத்தியாயம் 5

அச்சமயம் மணமகனாக வேடம் போடுக் கொள்வது சற்றுக் கடினமாகவும் எரிச்சலாகவும் இருந்தது. என் உடல் மட்டுமே வேடம் பூண்டுக் கொண்டிருந்து. உயிர் அங்கில்லை. அது என்னைவிட்டு பிரிந்து எங்கோ பறந்துச் சென்றது. அது என் தேவதையைத் தேடி அலைந்துக் கொண்டிருந்தது. சில மாறுதல்கள் இக்கணம் நடக்க வேண்டுமென மனம் ஏங்கித் தவித்தது. அது நடக்குமா? நடந்தால் நான் பிழைப்பேன் அல்லவா என உயிர் மௌனக் கண்ணீர் வடித்தது.

மணமேடையில் அமர்ந்தேன். ஐயர் ஓர் ஈனப் பார்வை பார்த்தார். அவர் என்ன நினைத்திருப்பார். இவன் தானே முதலில் அங்கும் இங்கும் ஓடி வேலைப் பார்த்துக் கொண்டிருந்தான்? இவனா மாப்பிள்ளை? அப்படி இல்லையென்றால் அவர் விசயம் அறிந்திருக்கக் கூடும். நான் திடீர் மாப்பிள்ளை என்பது அவருக்கு தெரிந்திருக்கக் கூடும்.

அத்தருணம் நான் மாய லோகத்தில் புகுந்திருந்தேன். என் கண்கள் காட்சிகளை கண்டன. அதை இரசிக்கவில்லை. என் காதுகள் கேட்டன. பேசியது விளங்கவில்லை.கல்யாண விருந்துக்கு பலியாகிய ஆட்டுக் கெடாக்களின் நிலையை இப்போது என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது. ஒன்றை மட்டும் சரியாய் உணர்ந்திருந்தேன். இப்போது நடக்கும் பெயரில்லா நாடகத்தில் துரதிஷ்ட நடிகனாய், நாயகனாய் நான் மாட்டிக் கொண்டிருப்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையல்லவா.

இன்று காலை ஒரு விசயம் நடந்தது. அம்மா எழுப்பியதும் குளிக்க போனேன். போனவன் அங்கேயே நின்றுவிட்டேன். வெறித்துப் போய் யோசித்துக் கொண்டிருந்தேன். பாட்டிக்கு மட்டும் தான் என் எண்ணங்கள் சரியாய் தெரியும். நான் வந்ததுமே கொசு வலை வங்கி வைப்பார்.

"ஏன் இவன் படுக்க மட்டும் வலை" என அம்மா கேட்பார்.

"பாவம் பிள்ளை 'டவுன்'லேருந்து வந்திருக்கு, நிம்மதியா தூங்கட்டுமே", பாட்டி என்னை ஒரு போதும் விட்டுக் கொடுத்ததில்லை.

ஆனால் பாட்டி கூட இப்போது மௌனியாய் நிற்கிறாரே. அவரும் பரவாயில்லை கல்யாணம் நடக்கட்டும் என விட்டுவிட்டாரே. வாய் திறந்து வேண்டாம் என ஒரு வார்த்தை சொல்ல மாட்டாரா?

"என்ன காலையிலேயே 'பாத்ரூம்'கிட்ட தியானம் பண்ணிகிட்டு இருக்கிங்க" குரல் கேட்டு திரும்பிப் பார்த்தேன். அங்கே இந்திரா நின்றுக் கொண்டிருந்தாள். இந்திரா நந்தினியின் கடைசித் தங்கையாவாள்.

"ஆ… ஆ… இல்லை.. குளிக்கலாம்னு வந்தேன்.. தண்ணி ரொம்ப சில்லுனு இருக்கு. அதான்..".

"சுடுதண்ணி போட்டுக் கொடுக்கட்டுமா மாமா".

"ம்ம்ம்… இல்லை.. பரவாயில்லை… நான் குளிச்சிடுவேன்". கோலாலம்பூரில் எழுந்ததும் பீலியை திருகியவுடன் மழையெனக் கொட்டும் சுடுநீரை நினைவுபடுத்திக் கொண்டேன். அதன் சுகமே தனிதான்.

"ஏன் இவ்வளோ சிக்கிரம் எழுந்துட்டீங்க", எனக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் சிரித்து மட்டும் வைத்தேன்.

தலைநகர் வாசத்தின் போது இவ்வளவு சீக்கிரம் நான் எழுந்து தொலைத்ததில்லை. விடுமுறை நாட்களில் பத்துமணிவரை தலையணையை கட்டிக் கொண்டு உறங்கினால் மட்டுமே மனம் நிம்மதியடையும்.

நீர் நிரப்பப்பட்டிருந்த தொட்டிலில் லேசாய் என் கையை வைத்தேன். 'அப்பப்பா… எவ்வளவு சில்லிட்டிருந்தது அந்த நீர்… இதில் குளித்தால் விரைத்துப் போய்விட மாட்டேனா'. அந்த நீர் மிகத் தெளிவாக இருந்தது. பாட்டி வீட்டு பின்னால் இருக்கும் குளத்தில் இருந்து எடுக்கும் நீர் அது.

பாட்டி வீட்டு பின்னால் ஒரு ஆற்றங்கரை இருக்கு. முன்பு பள்ளி விடுமுறை நாட்களில் அந்த ஆற்றங்கரை தான் எனது விளையாட்டு மைதானம். பிய்ந்து போன வலை ஒன்றை வைத்துக் கொண்டு குட்டி மீன்களை பிடித்து அழகு பார்ப்பேன்.

சில மீன்கள் மிக அழகாய் இருக்கும். அதை திரும்பவும் ஆற்றில் விட மனம் இல்லாமல் வீட்டிற்கு கொண்டு வந்துவிடுவேன். இதோ என் முன் இருக்கும் இந்த தொட்டிலில் தான் அவற்றை நீந்தவிடுவேன். பாட்டிக்கு கெட்ட கோபம் வரும்.

"குளிக்கர தண்ணியில என்னடா விளையாட்டு", என ஏசுவார்.

மீன்களை ஆற்றில்விட்டு விட்டு தொட்டிலை சுத்தம் செய்ய சொல்வார். எனக்கு இந்தத் தொட்டிலைக் கழுவும் வேலைப் பழு கனமென தெரியும். என்ன செய்வது. செய்த பாவத்திற்கு சிரமப்பட்டு அதை சுத்தம் செய்வேன். நந்தினி எனக்கு உதவி செய்வாள்.

அதிக நேரம் குளியலறையில் இருந்துவிட்டால் பிரச்சனை. எல்லோரும் எழுந்து குளிக்க வந்துவிட்டார்கள் என்றால் சிரமம் என நினைத்து, கண்களை இறுக மூடி நீரை மொண்டு ஊற்றினேன். "ஆஆஹ்ஹ்ஹ்" என்ன ஒரு குளிர். என் பற்களும் குளிர்ப்பட்டு தட்டச்சு செய்ய ஆரம்பித்தன. விருவிருவென நான்கைந்து குவளை நீரை தலையில் ஊற்றிக் கொண்டு என் அறைக்கு விரைந்தேன்.

என் முன் இருந்த கண்ணாடியை பார்த்தேன். பேரங்காடிகளில் குளிரூட்டி பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் 'ஃபிரஸ்' காய்கறியை போல் இருந்தேன். எனக்கு மட்டும் இப்போது பறக்கும் சக்தி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அப்படியே மேலெலும்பி பறந்துச் சென்று என் அன்பின் இனியவளோடு இணைந்துவிடுவேன். மீண்டும் தோட்டபுறத்து பக்கம் தலை வைக்க மாட்டேன். அம்மா கூப்பிட்டாலும் வர போவதில்லை.

ஆனால் அப்படி ஒரு சக்தி எனக்கு இல்லையே. இருகட்டும். இன்றிரவு திருமணம் முடிந்தவுடன் சட்டென கிளம்பிவிட வேண்டும். மறுபடியும் இந்தப்பக்கம் தவறுதலாகக் கூட திருப்பிப் பார்க்க கூடாது. இன்று விடுதலை நிச்சயம் என இருமாந்து இருந்தேன்.

என் முகத்தில் ஈரப்பசை ஒட்டியிருந்தது. புல்லில் விழுந்த பனித்துளியென முடியில் கொஞ்சமாய் நீர் கோர்த்து இருந்தது. என் கை இடுக்குகளில் முடியை லேசாக கோதிக் கலைத்தேன். நளினாவின் கைவிரல்கள் என் முடியை கோதிய பொன்மாலை போதுகள் என் நினைவுகளில் ஊஞ்சலாடின. அந்த சுகத்திற்கு மனம் ஏங்கிற்று.

"உன் முடி இவ்வளோ 'சாஃப்ட்டா' இருக்கே.." என் தலைமுடியை கோதிக் கொண்டே சொன்னாள்.

"தெரிஞ்சா சரிதான்", விளம்பர படங்களில் வருவதை போல் என் தலை முடியை அலையென அசைத்துக் காட்டினேன்.

"என்ன 'ஷாம்பு' 'யூஸ்' பன்றே?"

"கண்டிப்பா சொல்லனுமா?"

"ம்ம்"

"சொல்லாட்டி"

"சொல்லுடா" என என் முடியை பிடித்து இருக்கினாள்.

"எய்… சரி.. சரி… சொல்றேன்… முடிய விடு"

"ம்ம்… என்ன"

"தேங்காய் எண்ணெய் தான்".

"என்ன… தேங்காய் எண்ணெய்யா?... பொய் சொல்லாதடா…"

"நிஜம்தான்", நான் என் மனதுக்குள் சிரித்தேன். நான் பொய் சொல்கிறேன் என்பதை கண்டுக் கொண்டவள் என்னைப் பிடித்துத் தள்ளினாள்.

"திமிர் தான் உனக்கு" என்று சொல்லி என்னை செல்லமாய் கிள்ளினாள்
"ஏய், திமிர் பிடிச்ச அழகன்னு மரியாதையா சொல்லு".

மற்றவர்களுக்கு எப்படியோ. காதலர்களுக்கு ஒவ்வொரு கணமும் சரித்திர சுவடுகள் அல்லவா. சில சமயம் வேண்டுமென்றே அவளை கோபம் கொள்ளச் செய்வேன். கோபித்துக் கொண்டு போய்விடுவாள். இரண்டு மூன்று நாட்கள் என்னோடு பேச மாட்டாள். மறுபடியும் என்னைத் தேடி வருவாள்.

நளினா என்னுடன் இருப்பதை மட்டுமே விரும்புகிறாள். அவளுடைய காதலை நான் முழுமையாக உணர்கிறேன்.

"பாரி நான் எப்போதும் உன் கூடவே இருக்கனும்". என் கையை அணைத்து தோளில் சாய்ந்துக் கொண்டு சொன்னாள்.

"என்ன ரொம்ப ரொம்ப காதலிக்கிறியா?" அவள் ''ஆம்'' என தலையசைத்தாள்.

"எனக்காக என்ன வேணும்னாலும் செய்வீயா?", அவள் மீண்டும் தலையசைத்தாள்.

எவ்வளவு பெரிய பாவத்தைச் செய்கிறேன். வாழ்நாள் முழுக்க நளினாவோடு வாழ நினைத்தேனே. இனி நான் அவள் சொந்தமில்லை என்பதை ஏற்றுக் கொள்வாளா? நான் நந்தினியின் சொந்தமாக போகிறேனே. இது நிஜமா?... இல்லை… இல்லை… நந்தினி எனக்குரியவள் இல்லை… நானும் அவளுக்குரியவன் அல்ல. இது தானே உண்மை.

தொடரும்...

7 Comments:

Anonymous said...

விக்கி, நளினாவிடம் எப்ப உண்மையை உடைக்க போறிங்க?..அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் கதையை நகர்த்தும் உங்கள் திறமை சூப்பர்.....வாழ்த்துக்கள்...

Anonymous said...

கதை நல்லா போகுது விக்னேஸ்.
சிறு வயது நினைவலைகள்- ஆற்றில் போடும் ஆட்டம், மீன் பிடிக்கும் கலை, பாட்டியிடம் வாங்கும் சின்ன சின்ன திட்டுகள் கடந்த காலத்தில் என் அண்ணன் செய்யும் குறும்பையும் நான் மாட்டிவிட்டி வேடிக்கைப் பார்ப்பதையும் நினைவுப்படுத்துகிறது! நன்று!

//"பாரி நான் எப்போதும் உன் கூடவே இருக்கனும்". என் கையை அணைத்து தோளில் சாய்ந்துக் கொண்டு சொன்னாள்.//

இதமான தருணங்கள் அல்லோ!?

//வாழ்நாள் முழுக்க நளினாவோடு வாழ நினைத்தேனே. இனி நான் அவள் சொந்தமில்லை என்பதை ஏற்றுக் கொள்வாளா?//

மனதை நெருடுகிறது.
அடுத்து என்னவாகும்?

ஜெகதீசன் said...

அம்மாடியோவ்.... கலக்கலா எழுதுறீங்க...
:)

விஜய் ஆனந்த் said...

:-)))....

VIKNESHWARAN ADAKKALAM said...

@உஷா

வருகைக்கு நன்றி. மீண்டும் வருக.

@ மலர்விழி

ரொம்ப ரசிச்சி படிச்சிருக்கிங்க... நன்றிங்க... மீண்டும் வருக...

@ ஜெகதீசன்

நன்றி

@விஜய் ஆனந்த்

நன்றி

வால்பையன் said...

உணர்வுகளை விவரிக்கும் விதம் அருமை!

கொஞ்சம் உண்மையை பேசுவோமே!
கதையின் நடை கொஞ்சம் பழைய பாணியை கொண்டுள்ளது!
மனநிலையை உணர்த்த ஓரிரு வார்த்தைகளே போதும்!
மேலும் சில இடங்களில் சினிமா தனம் போல் காட்சிகளை இழக்க பயன்படுவது போல் தெரிகிறது,

வசனங்களை விட காட்சியமைப்புகளை விவரிப்பதிலும், மன நிலைகளை விவரிப்பதிலும் உங்கள் ஆர்வம் மேலோங்கி நிற்கிறது.

நல்லது தான் ஆனால் சிறிது பிசகினாலும் மனதில் இருக்கும் கதாபாத்திரம் களைந்து விடும்
கவனமாக கையாளவும்

தாமதத்திற்கு மன்னிக்கவும்

VG said...

ithil enaku piditha vari..

~~கல்யாண விருந்துக்கு பலியாகிய ஆட்டுக் கெடாக்களின் நிலையை இப்போது என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது.~~

soolnilai kaitikku mathume soolnilai telivaga puriyum.. :)