Wednesday, September 3, 2008

60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் (3)

அத்தியாயம் 3


அம்மா என்னைப் பார்த்துச் சிரித்தார். எதற்காக சிரித்தார் என எனக்கே தெரியவில்லை. நானும் பதிலுக்கு நமட்டுச் சிரிப்பொன்றை சிரித்து வைத்தேன். நாங்கள் வந்து சேர்ந்ததில் பாட்டி வீடு லேசாகக் களைக்கட்டி இருந்தது.

பின்வாசலில் யாரோ வந்திருந்ததாக அறிந்தேன். யாராக இருக்க முடியும். என் மாமாவாக தான் இருக்கும். பண்ணை வேலைகளை முடித்துவிட்டு வருபவர்கள் வீட்டு பின் வாசலில் கை கால் கழுவிவிட்டுத்தான் நுழைவார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு மாமாவை பார்க்கிறேன். காலத்தின் ஓட்டம் அவரின் முதுமையில் தெரிந்தது.

என்னைப் பார்த்ததும் முகம் மலர அருகே வந்தார்.

“டேய் பாரிதாசா, நல்லா இருக்கியாப்பா? எப்ப வந்த? எங்கள பார்கனும்னு இப்பதான் ஞாபகம் வந்ததா?” என் தோள்களை உலுக்கியவாரு கேட்டார்.

நான் அவர் கைகளை பற்றிக் குலுக்கினேன்.
“நல்லா இருக்கிங்களா மாமா?”

“என்னக்கென்னப்பா, சௌக்கியமாதான் இருக்கேன், நீதான் ரொம்ப மாறிபோயிட்ட, முதல்ல பார்த்த போது யோரோனு நினைச்சேன்”, மாமா எனக்கு நேர் எதிரில் அமர்ந்துக் கொண்டார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு பாட்டி வீட்டிற்கு வந்திருக்கிறேன். எனக்கு இப்புதிய சூழல் அசுவாசத்தை ஏற்படுத்துகிறது.

“அவனுக்கு நம்மை பற்றி எங்க ஞாபகம் இருக்கு, இவனை வரவழைக்கறத்துக்கு கையில கால்ல விழுந்து அழ வேண்டியதா இல்ல இருக்கு”, என் அம்மா அவர் பங்குக்குப் பேசினார்.

“ரொம்ப நாளா டவுன்ல இருந்து பழகிப் போச்சு இல்லையா, எங்க தோட்டத்து பக்கம் வந்தா போரடிச்சிடுமோனு வர மாட்டுறான் போல. இந்தக் காலத்துப் பசங்க கம்பியூட்டர் முன்னாடியே வாழ்க்கையே ஓட்டனும்னு இல்லை நினைக்குறானுங்க”.

“அப்படியெல்லாம் இல்லை மாமா, வேலை அதிகமாயிடுது, அதுவும் இல்லாம புதுசா வேலைக்கு சேர்ந்து இருக்கேன் இல்லையா, அதிகமா ‘லீவு’ போட முடியாது”. மனசாட்சி இல்லாமல் பொய் சொன்னேன்.

மாமா சிரித்தபடி தலையாட்டிக் கொண்டார். பேச்சுவாக்கிலேயே வாசலைத் திரும்பிப் பார்த்தார். யாரோ வருவது தெரிந்தது. காலணியை வாசலில் விட்டுவிட்டு உள்ளே நுழைந்தாள் அந்தப் பெண். சுடிதாரில் இருக்கும் அவள் மிக அழகாய் இருந்தாள். அழகு அவளுக்கே உரியதென கொட்டிக் கிடந்தது. எங்கேயோ எப்போதோ பார்த்த முகமாய் இருந்த அவளை என்னால் சரியாக யூகிக்க முடியவில்லை.

“வாம்மா நந்தினி, சௌக்கியமா இருக்கியா? இன்னிக்கு வேலை இல்லையா?” அவள் கைகளை பற்றிக் கொண்டு என் அம்மா குசலம் விசாரிக்க ஆரம்பித்திருந்தார். நந்தினி சிரித்த முகத்தோடு இருந்தாள்.

அவள் நந்தினி தானா. முன்பு பார்த்ததை விட எவ்வளவு பருவ மாற்றங்கள். எனக்குள் நினைத்துக் கொண்டேன்.

“நல்லா இருக்கேன், நீங்க? வேலைத்தான் அத்த, சனிக்கிழமை அரை நேர வேலை. வேலை முடிஞ்சித்தான் வரேன்”.

நந்தினி எல்லோருக்கும் தேனீர் கலக்கி கொண்டு வந்து வைத்தாள். பளிச்சென்று இருந்த அவள் கை விரல்கள் என் கண்களை உறுத்தியது. நான் அதை ரசித்தேன். ஆணாக பிறப்பவன் இராமனாக வாழ்வது கடினம் என எவ்வளவு சரியாக சொல்லி வைத்திருக்கிறார்கள்.

திடீரென என் மீது பார்வையை திருப்பினாள். நான் அவளைத் தான் பார்க்கிறேன் என உணர்ந்துவிட்டாளோ. எனக்கு சங்கடமாய் போனது. என் மனதுள் சில பட்டாம் பூச்சிகள் பறந்து இனம் புரியாத உணர்வை ஏற்படுத்தியது.

*****
நான் கோலாலம்பூர் திரும்பியதும் முதல் வேலையாக நளினாவைக் காண சென்றேன். அவள் அங்கே இல்லை. போன் செய்துப் பார்த்தேன். எந்த பதிலும் இல்லை. என் மனம் கனத்து போனது. என் செயல் அவளை எவ்வளவு பாதித்துவிட்டது. அவள் அடிக்கடி போகும் இடங்களிலும் போய்த் தேடினேன். அவள் என் கண்களில் அகப்படாமலே போனாள்.

எங்கே போயிருப்பாள்? திட்டமிட்டிருந்த இடத்திற்கா? தனியாகவா போயிருப்பாள்? என் புத்தி நிலையற்று தடுமாறியது. காருக்குள் வந்தமர்ந்து குளிரூட்டியை தட்டிவிட்டேன். அந்தக் குளிர் காற்றில் என் வெப்ப பெருமூச்சுகளை இறக்கி வைத்துக் கொண்டிருந்தேன்.
அவளை பார்க்கும் ஆவலில் எவ்வளவு விரைவாக ஊரிலிருந்து கிளம்பினேன். என்னால் முடிந்தவரை வாகனத்தை வேகமாகத்தான் செலுத்தி வந்தேன். ஆனால் நளினா இங்கில்லை.

எனக்கு லேசாக தலை கனப்பதை போல் இருந்தது. அடுத்த மாதம் நான் மீண்டும் தோட்டத்திற்கு திரும்ப வேண்டும். ஆம், நந்தினிக்கு அடுத்த மாதம் திருமணம். மாமாவுக்கு ஆண்பிள்ளைகள் யாரும் இல்லை. நானும் போகவில்லையென்றால், நான் அவர் உறவினன் என்பதற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடாதா. அவரும் என் வரவை பெரிதும் எதிர்பார்த்திருப்பார் அல்லவா. நான் கிளம்பும் போது கூட பல முறை ‘மறக்காமல் வந்துவிடு’ எனக் கூறினாரே. அடுத்த மாதமும் நான் ஊருக்கு போவேன் என்பதை நளினாவிடம் எப்படி சொல்லப் போகிறேன்.

குடும்பத்தில் முதல் கல்யாணம். மூத்த மருமகன் வரப்போகிறான். மாமாவின் முகத்தில் ஒரு சந்தோஷ களை இருந்தது. அவர் வளர்த்த ஆட்டு கெடாக்களுக்கு மரண தண்டனை காத்திருக்கிறது.

“அடுத்ததா வீட்ல உன் கல்யாணமாதான் இருக்கும், சமையலுக்கு நம்ப தோட்டத்து நாட்டாடும் நாட்டுக் கோழியும் தான். என்ன புரிஞ்சதா?” மாமா அன்று சொன்னது என் நினைவுக்கு வந்தது. அப்போது எதையும் பேசாமல் என் சிரிப்பை மட்டும் பதிலாய் வைத்தேன்.

அடுத்த கல்யாணம் எனக்கா? எப்போது? யாரோடு? நளினா..? என்னைத் திருமணம் செய்துக் கொள்ளும் நோக்கில் தான் காதலிக்கிறாளா? காதல் இனிக்கும் கல்யாணம் கசக்கும் என்பார்கள். காதலிக்கும் தருணங்களில் குழந்தைத்தனமாய் இருக்கும் அந்தக் குமரியின் ஒவ்வொரு அசைவையும் இரசிக்கிறேன். திருமணம் என்றால் பொறுப்புகள் கூடும். வாழ்க்கைச்சுமை தலையெடுக்கும். அப்போதும் நளினா இப்படி இருந்தால் இரசிப்பேனா. என்னுள் இதற்கான பதிலை தேடுகிறேன்.

நொடிக்கொருமுறை சொல்வாளே. நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன் என. நானும் அப்படிச் சொல்ல வேண்டுமென எதிர்பார்ப்பாளே. திருமணத்திற்கு பிறகும் இப்படியே சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா. காதல் மட்டும் வாழ்க்கை இல்லை என்பதை உணர்ந்து தான் காதலிக்கிறாளா.

நளினாவின் காதல் பொய்யாக இருந்துவிட்டால். இதை நினைக்கவே என் மனம் கனக்கிறதே. நான் வேலைக்கு சேர்ந்த சமயம் என் நண்பர்கள் கூட சொன்னார்கள். நகரத்து பெண்களை நம்பாதே. இனிக்க இனிக்க பேசுவார்கள். உன்னிடம் இருக்கும் பணத்தை சக்கையென பிழிந்தெடுத்த பிறகு கழன்றுக் கொள்வார்கள் என. எனக்கு இப்படிப்பட்ட பேச்சுகளில் துளியும் உடன்பாடு இல்லை. இருந்தாலும் இக்கணம் அந்த நினைவுகளை மனம் நினைக்கிறது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நந்தினி என் சிந்தனையில் சிரித்துச் செல்கிறாள். பெண்களுக்கே உரிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என அனைத்தும் அவளிடம் ஊறிப்போய் கிடக்கிறது. பார்ப்பவருக்கு பூமியில் உதித்த தேவதையென தெரிகிறாள். பெரியவர்களிடம் காட்டும் மரியாதை, வீட்டு வேலைகளைகளில் காட்டும் பொறுப்பு. நல்ல பெண் என சொன்னால் அவளுக்கு அது குறைந்தபட்சமே.

நான் சிறுவனாக இருந்த சமயம் நந்தினி என்னோடு எவ்வளவு நெருக்கமாய் இருந்திருக்கிறாள். ஆற்றங்கரையில் ஆட்டம் போடும் போதும், மாங்காய் மரம் ஏறும் போதும் மாலை விளையாட்டுகளின் போதும் என்னை விட்டுப் பிரிந்த்ததில்லை. அவளுக்கு வேறு நண்பர்கள் இல்லாததும் காரணமாய் இருந்திருக்கலாம். ஆண் பிள்ளை என்ற கர்வம் கண் விழிக்கும் சமயங்களில் எத்தனை முறை அவளை அழ வைத்திருக்கிறேன். இருப்பினும் என்னைத் தானே நாடி வருவாள். அக்கனா காலங்கள் என் மனதில் பதிந்த கல்வெட்டுக்கள். என்றும் அழியாது.

நினைவுகள் கலைந்தது. எனது காரின் எண்ணெய் மிதியை அழுத்தினேன். என் நினைவுகளை போல அதுவும் விரைந்தது. வெறிச்சோடிய ஞாயிறாய் போனது இன்று. கடுப்பேறியதின் உச்சக்கட்டமாய் என் தலையை நானே ஆட்டினேன். பெருத்தக் கொடுமை ஒன்று என் வாழ்வில் நடக்கப் போவதை அறியாமல் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

தொடரும்....

15 Comments:

Anonymous said...

நல்லாயிருக்கு

ஜோசப் பால்ராஜ் said...

நல்லா இருக்கு தம்பி.
தொடர்கதைகளின் ஒவ்வொரு அத்தியாயமும், அடுத்த அத்தியாயத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்மும் விதமாய் இருக்க வேண்டும். இந்த பாகம் முடிந்த விதம் அப்படி எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாய் இருக்கின்றது. எழுத்தில் மெருகு கூடுகிறது. வாழ்த்துக்கள்.

விஜய் ஆனந்த் said...

சஸ்பென்ஸோட முடிச்சிருக்கீங்க!!!
சீக்கிரம் அடுத்த பகுதிய போடுங்க....

வால்பையன் said...

//அவள் நந்தினி தானா. முன்பு பார்த்ததை விட எவ்வளவு பருவ மாற்றங்கள்.//

அப்படியே கதையை கொண்டுபோய், கோடிக்கணக்கான வாசகர்களின் ஆசையை நிறைவேத்துனா நல்லாருக்கும்

வால்பையன் said...

//ஆணாக பிறப்பவன் இராமனாக வாழ்வது கடினம்//

அப்போ ராமன் ஆம்பளை இல்லையா

வால்பையன் said...

//என் மனதுள் சில பட்டாம் பூச்சிகள் பறந்து இனம் புரியாத உணர்வை ஏற்படுத்தியது.//

எழுத்துலகில் இந்த வசனம் எப்போது தான் மாறுமோ,
காதல் வந்துட்டாலே போதுமே,
பட்டாம் பூச்சியிலிருந்து டைனோசர் வரை மனசுக்குள் ஓடும்

வால்பையன் said...

//பெருத்தக் கொடுமை ஒன்று என் வாழ்வில் நடக்கப் போவதை அறியாமல் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.//

நீங்கள் பயணிக்கிறீர்கள்
நாங்கள் படிக்கிறோம்
அவ்வளவு தான் வித்தியாசம்

Anonymous said...

நல்லாயிருக்கு விக்னேஸ்...அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன் :)

மங்களூர் சிவா said...

இன்னைக்குதான் நைனா 3 பாகமும் படிச்சேன்!

நல்லா இருக்கு!

MADURAI NETBIRD said...

நல்லா இருக்கு.

ஹேமா said...

கதையின் போக்கு சரியாய் இருக்கிறது.திசைகள்...திருப்பங்கள் எப்படியோ!விக்கி யோசிக்காமல் தொடருங்கள்.வால்பையன் தான் கொஞ்சம் கடிக்கிறார்.
கவனிக்கவேணாம் அவரை.
எண்ணெய் மிதி>>>புதிய தமிழாக்கமா?கேள்விப்படாத ஒரு சொல்லாக இருக்கு.

சுப.நற்குணன்,மலேசியா. said...

உங்களுக்கு கதை நன்றாக வருகிறது. சொல்லாட்சிகள் நன்று. இன்னும் மேம்படுத்தலாம். 'எதார்த்தம்' எனப்படும் நடப்பியல் கூறுகளில் கவனம் செலுத்தவும். மொழிக்கலப்பு குறைவாகவே உள்ளது. பாராட்டுகள்.

வெங்கட்ராமன் said...

நல்லாயிருக்கு தொடர்,
பல இடங்கள் ரசிக்கும் படியாகவும் அழகாகவும் இருக்கிறது.

VIKNESHWARAN ADAKKALAM said...

@இனியவள் புனிதா

நன்றி

@ஜோசப்பால்ராஜ்

நன்றி.

@விஜய் ஆனந்த்

நன்றி

@வால்பையன்

ராமன் இருந்தாரா? :P, டைனாசார்... ஆஹா இப்படி போட்டா நல்லா இருக்குமே

@மலர்விழி

நன்றி

@மங்களூர் சிவா

நன்றி தலைவா. எல்லாம் உங்கள் ஆசீர்வாதம்.

@பாலாஜி

நன்றி

@ஹேமா

நன்றி

@சுப.நற்குணன்

பாராட்டுக்கு நன்றி ஐயா

@வெங்கட்ராமன்

நன்றி நண்பா.

VG said...

aaahhhha root maaruthey.. heheheh