Monday, September 29, 2008

60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் (7)

அத்தியாயம் 7

“டேய் பாரி. என்னாச்சு நேத்து? ஆள காணும்?” யாரோ முதுகில் தட்டவும் திரும்பிப் பார்க்கிறேன். என்னுடன் பணிபுரியும் முரளி அங்கே நின்றிருந்தான்.


"லீவு எடுக்க வேண்டியாதாப் போச்சு? கொஞ்சம் வேலையாயிருச்சு.”

“உன் மாமன் பொண்ணுக்கு தான் கல்யாணம்னு கேள்விப்பட்டேன், நீ எதுக்குடா தேவை இல்லாம ‘லீவு போட்ட” அவன் பேச்சில் கிண்டல் இருந்தது. எனக்கோ எரியும் நெருப்பில் நெய்யை வார்த்தது போல் இருந்தது.


“கல்யாண வேலையை நான் தான் குத்தகைக்கு எடுத்திருந்தேன், அதான் வர முடியல”, அவன் சிரித்தான்.

“நேத்து நீ வருவேன்னு எதிர்பார்த்திருந்தேன். அந்த “ஃபேராஜேக்ட்” விசயமா எல்லாம் பேசி முடிச்சாச்சு, இன்னும் ஒரு வாரத்தில் முடிவு தெரிஞ்சிடும்”.

“தேங்ஸ்டா, நீ கண்டிப்பா முடிச்சு கொடுத்திடுவேன்னு தெரியும்”.

“சரி அதை விடு. இன்னிக்கு “நைட் நீயும் போறீயா?”

அவன் கேட்க வருவது புரியாமல் நெற்றியை சுருக்கினேன், “எங்க போகனும்?”

“அட நம்ப சுந்தர் மகளுக்கு ஒரு வயசு பிறந்த நாள் கொண்டாறாங்கடா, அதுக்குள்ள மறந்துட்டியா?”

நான் மறந்து போய் இருந்தேன். “நீ போறீயாடா?”

“கண்டிப்பா.. போகமலா.. நீயும் வாயேன், நளினாவையும் கூட்டிக்கிட்டு”.

நளினா என்ற வார்த்தையை கேட்டவுடன் என்னுள் அச்சம் ஏற்பட்டது.குற்ற உணர்வு வாட்டியது. மனதை திட படுத்திக் கொண்டு என் கைப்பேசியை எடுத்தேன்.

“ஹலோ, நளி..”

“பாரி..” சட்டென அழைப்புத் துண்டித்து போனது. என்ன ஆனது. அவளுக்கு என் மேல் ஏதும் கோபமா.

ஓரிரு நொடிகளில் அவள் மீண்டும் அழைத்தாள், “பாரி எங்கடா போயிருந்த, நான் “கால் பண்ணப்ப கூட ‘அன்சர்’ பண்ணல… நான் உன்ன ‘ரொம்ப மிஸ் பண்றேன் தெரியுமாடா”.

எனக்குள் ஒரு நிம்மதி பெருமூச்சு வந்தது.

****

“என்னய்யா இன்னிக்கு சீக்கிரமா வந்துட்டே?” வீட்டிற்கு வெளியே காலனியை கழற்றிக் கொண்டிருந்தேன். அம்மா என்னருகே வந்து கேட்டார்.

“இல்லமா ‘நைட் ஒரு டின்னர் இருக்கு போகனும்” அம்மாவின் முகம் சுருங்கியது.

“முன்னாடியே போன் பண்ணி சொல்லிருக்கலாமேயா? வீட்டில அதிகமா சமைச்சிருக்க வேண்டாம்ல?”

நான் வரவேற்பு அறையில் இருந்த மெத்தை நாற்காலியில் என் உடலைக் கிடத்தினேன். அம்மாவும் என்னைத் தொடர்ந்து அருகே வந்தார்.

“ம்ம்ம்… என்ன சமைச்சீங்க?” வேண்டா வெறுப்பாக கேட்டேன்

“நான் சமைக்கலப்பா, நந்தினிதான் சமைச்சா, உனக்கு பிடிச்ச நண்டு பிரட்டல்”

எனக்கு எச்சில் ஊறியது. இது கண்டிப்பாக அம்மாவின் வேலையாகத்தான் இருக்க வேண்டும். அவர் தான் நந்தினியிடம் சொல்லி நண்டு பிரட்டல் செய்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் முன்பு பாட்டி சமைத்து வைக்கும் நண்டு பிரட்டலுக்கு நானும் அவளும் அடித்துக் கொள்வதை மனதில் வைத்திருந்து சமைத்திருக்க வேண்டும்.

அந்த நினைவுகள் அவள் மனதில் இருக்கக்கூடுமா? என் தட்டில் கூடுதலாக ஒரு துண்டு நண்டு இருந்துவிட்டாலும் போதும். எரித்துவிடும் பார்வைக் கனலை என் மீது எரிவாள். நான் வில்லத்தனமான ஒரு நமட்டுச் சிரிப்பை உதிர்த்து வைப்பேன்.

“சாப்பிடறதுக்கு கூட அடிச்சிகிட்டு… என்ன பிள்ளைகளோ”. பாட்டி கடிந்துக் கொள்வார்.

நான் ஒன்றும் பேசாமல் மெத்தை நாற்காலியில் சாய்ந்திருந்ததால் அம்மா சமையல் அறையை நோக்கி நடந்தார். என் கண்கள் பாரமாவதை உணர்ந்தேன். சிந்தனைகள் புரியாத புதிர் ஒன்றுக்கு விடை தேடி அலைய தொடங்கியது. மாமா வீட்டை விட்டு கிளம்பியதில் இருந்து நான் பேசுவது வெகுவாக குறைந்து போய் இருந்தது. சூழ்நிலை எனக்கு புதிதாய் புலப்பட்டது. கல்யாணம் ஆகிவிட்டது. ஊர் பார்வைக்கு நந்தினி என் மனைவி. ஆனால் என் மனம் அதை ஏற்க மறுத்தது.

அவளிடம் நான் எப்படி பேசுவது? ஆசையாகவா, அன்பாகவா, அதிகாரமாகவா. என்னுள் விடை தேடி அலுத்துப் போனேன். சில வேலைகளில் நினைப்பதுண்டு. ஊமையாக பிறந்திருந்தால் எவ்வளவு சுலபம். யாரிடமும் எதுவும் பேச தேவை இல்லை. கேட்கும் கேள்விகளுக்கு வார்த்தைகளை அடுக்கி பதில் சொல்லவும் தேவை இல்லை. எனக்கும் நந்தினிக்கும் ஏற்பட்ட இடைவெளி, வார்த்தை பரிமாற்றங்களுக்கு சுவர் எழுப்பிவிட்டிருந்தது. ஆனால் எங்களுக்கு ஏற்பட்ட திருமணம் நான் எதிர்பார்க்காத ஒன்று. விபத்து என்று சொன்னால் மிக பொருந்தும்.

அம்மாவின் பேச்சு சத்தம் கேட்டது. இப்போதெல்லாம் வீட்டில் அவர்தான் அதிகம் பேசுகிறார். வரவேற்பறையில் தூங்கி போய் இருந்த நான் மேல் மாடியை நோக்கி விரைந்தேன்.

குளித்து முடித்து கிளம்பும் போது மணி சரியாக 8.24. நான் என் கார் சாவியை எடுத்துக் கொண்டு காரை நோக்கி நடந்தேன். கதவோரமாக அம்மா நின்றுக் கொண்டிருந்தார்.

“சாப்பிடலையாப்பா?”

நான் இல்லை என்பதற்கு அறிகுறியாக தலையை மட்டும் அசைத்து வைத்தேன். யாரோ என்னை நெருக்கி வருவதாக தோன்றிற்று. திரும்பிப் பார்த்தேன். நந்தினி எங்களை நோக்கி வந்துக் கொண்டிருந்தாள்.

“நீங்க இன்னும் சாப்பிடலையாம்மா? நீங்களும் நந்தினியும் சாப்பிட்டுட்டு படுங்க, எனக்காக காத்திருக்க வேண்டாம், நான் வர ‘லேட்’ ஆகும்னு நினைக்கிறேன்”.

அம்மா என் கையை கிள்ளினார், “ஏய், அவளையும் கூட்டிட்டு போயேண்டா?” என் காதருகே மெதுவாகச் சொன்னார்.

“இல்லைம்மா.. அதெல்லாம் வேண்டாம், அவளை அழைச்சிட்டு போயிட்டா நீங்க வீட்டில் தனியா இருக்கனும், அதுவும் இல்லாம முரளியும் என் கூட வருவதா சொல்லியிருக்கான்”

நான் என் கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். நளினா எனக்காக காத்துக் கொண்டிருப்பது மனக் கண்களில் தெரிந்தது. நிச்சயம் அழகான உடைக் கொண்டிருப்பாள். எப்போதும் போல பலரின் பார்வைகள் அவளைத் திருடித் தின்னக் காத்திருக்கும். அதில் எனது கள்ளப் பார்வையும் ஒன்றல்லவா?

நான் காரில் அமர்ந்து தயாரானேன். என்னையும் அறியாமல் என் விழிகள் ஈர்த்துச் சென்று நந்தினியைப் பார்க்க வைத்தது. அவளும் என்னைதான் பார்த்திருந்தாள். எனக்கு ஒரு விதமான மன நெருடலாக போனது.

நான் வீட்டில் இருந்து கிளம்பியபோது எனது பயணம் விடுதலையை நோக்கிச் செல்வதை போல் இருந்தது. எத்துணை இனிமையான இரவு அது. மனம் குளிரும் இரவு. இறைமை எனது ஞாபக திறனை அழித்து விட்டிருந்தால் இந்த இரவு மேலும் அர்த்தப்படும்.

தொடரும்...

Thursday, September 18, 2008

60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் (6)

வீட்டு மொட்டை மாடி தடுப்பின் மீது முதுகை சாய்த்து அமர்ந்திருந்தேன். இங்குதான் பழைய பொருட்களை போட்டு வைக்கும் அறை இருக்கிறது. ஆட்கள் வருவதற்கும் வாய்ப்பு குறைவு. இரவின் குளிர் காற்று மெல்லியதாய் வீசிற்று. தனிமையை தேடிய மனதோடு இங்கு வந்து அமர்ந்திருக்கிறேன்.


படிக்கட்டுகளில் நான் உறிந்து போட்டு வைத்திருந்த 'சிகரெட்டு' துண்டுகள் உயிரற்று கிடந்தன. என் கையில் வைத்திருந்த 'சிகரெட்டின்' புகை இருதயத்தின் காயங்களை மேலும் காயமாக்கி வெளியேறிக் கொண்டிருந்தது. மனம் வலித்தது.


அம்மாவும் நளினாவும் என் சிந்தனையை சிதைத்துக் கொண்டிருந்தார்கள். மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிவிட்டேனே.


"பாரி இன்னும் தூங்க போகலையாப்பா?"


என் மாமாவின் குரல் கேட்டது. என் கையில் இருந்த சிகரட்டை தூக்கிப் போட்டுவிட்டு வாயில் இருந்த புகையை கக்கி ஊதினேன். இருந்தாலும் வாடை இருக்கும் அல்லவா?


"என்ன மன்னிச்சுருப்பா பாரி", அவர் குரலில் அமைதி இருந்தது.

"தப்பு என் பேரில்தான்", என்ன சொல்வதென அறியாமல் மௌனம் காத்தேன்.


"என் மேல கோபப்பட்டு என் பொண்ணோட வாழ்க்கையை வீணாக்கிடாதப்பா".


"இல்ல மாமாநாமெல்லாம் ஒரு குடும்பம் தானேஉங்களுக்கு உதவி செஞ்சதில நான் சந்தோஷப் படுறேன்".


உடைந்த மனதோடு அவரை சமாதானப் படுத்தினேன்.


"சரிப்பா போய் படுத்துக்க, ரொம்ப நேரம் பனியில நின்னா உடம்புக்கு ஆகாம போயிடும்".


'சரிதான் போயா, என் வாழ்க்கையே விளங்காம போச்சு இப்பதான் உடம்புக்கு ஆகாதாம்' என் பாழாய் போன மனம் என்னுள் பேசிக் கொண்டது.


மாடியில் இருந்து பார்த்தேன் முதலிரவு அறையில் விளக்குப் போட்டு வெளிச்சமாக இருந்தது. என் மனம் 'திக் திக்' என அடித்துக் கொண்டது. நந்தினி என்ன செய்துக் கொண்டிருப்பாள்? தூங்காமல் இருப்பாளா? அப்படி இருந்தால் நான் என்ன செய்வது. சிக்கலில் சிக்கினேன்.


மெதுவாக அறைக் கதவைத் திறந்தேன். மல்லிகையின் மணம் சுவாச துவாரத்தை ஆக்கிரமித்து சுகந்தமான நறுமணத்தை கொடுத்தது. நந்தினி அங்கே இல்லை. எங்கே போயிருப்பாள்? இன்னமும் தூங்காமல் இருக்கிறாளா? எனக்காகவா? இல்லை ஒருபோதும் அப்படி இருக்காது.


முதலில் கூட பார்த்தேனே. சோகத்தின் அத்தியாயங்கள் அவள் முகத்தில் குடி இருந்ததை. புகைபடங்கள் பிடிக்கும் போது கூட மற்றவர்கள் கேட்டுக் கொண்டதற்காக அல்லவா சிரித்தாள். அந்த புகைப்படக் கலைஞன் அவள் இடுப்பை அணைத்தபடி ஒரு படம் எடுக்க வேண்டும் என்றான். பயம், வெக்கம், அவமானம் என அனைத்தும் ஒன்றென கலந்து அவர் உடல் எவ்வளவு சில்லிட்டிருந்தது.


பரிசு பொட்டலங்கள் ஓர் ஓரமாய் இருந்தது. அதில் மணமகனாக என் பெயர் இல்லை. நான் எதற்கு அதை நினைத்து கவலை கொள்ள வேண்டும். 'கிடக்குது கழுதை' என் மனம் எனக்கு சமாதானம் கூறியது.


நறுமணம் கமழும் மெத்தையின் மீது என் உடலைக் கிடத்தினேன். அடித்து போட்டதை போல் இருந்த உடலுக்கு சற்றே சுகமாய் இருந்தது. ஒரு நொடியில் என்னவெல்லாம் நடந்துவிட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு பெண்ணுக்கு கணவனென மாறிவிட்டேனே. அதுவும் நான் நன்கு அறிந்த பெண்ணல்லவா அவள்.


பெரிய விளக்கை அணைத்துவிட்டு. மேசை விளக்கை மட்டும் போட்டு வைத்தேன். வெளியே போய் வரவேற்பு அறையில் படுத்துவிடலாமா என நினைத்தேன். மற்றவர்கள் பார்த்தால் வெட்கக் கேடாகிவிடும். யார் என்ன சொன்னாலும் சரி. காலையில் எழுந்தவுடன் தலைநகருக்கு பறந்துவிட வேண்டும் என திட்டம் தீட்டிக் கொண்டேன்.


கண்ணயர்வதற்குள் கதவு திறக்கப்படும் ஓசைக் கேட்டது. நான் தூங்கியதை போல் பாசாங்கு செய்தேன். நந்தினி உள்ளே நுழைந்தாள். என் இதயம் வெடித்துவிடும் போல் இருந்தது. அவள் என் அருகினில் வந்தாள். பக்கத்தில் இருந்த தலையணையை எடுத்துக் கொண்டு கதவை நோக்கி சென்றாள்.


கதவருகே நின்று என்னை கூர்ந்து நோக்கினாள். சோகத்தின் சாயலை அவள் முகத்தை நானும் பார்க்க தவறவில்லை.

***


"என்னப்பா காலையிலேயே எங்க கிளம்பிக்கிட்டு இருக்க?" மாமா என்னைக் கேட்டார். 'அட 'ச்சே' இந்த பெருசோட தொல்லை தாங்கலையே மனதில் கருவிக் கொண்டேன்.


"நான் இன்னிக்கு 'கே.எல்'க்கு போகனும் மாமா"


"ஏம்பா, அதுக்குள்ள என்ன அவசரம்?" அவர் குரலில் கலவரம் இருந்தது.


எச்சிலை விழுங்கி வார்த்தைகளை அடுக்கி பதில் சொல்ல ஆயத்தமானேன்.


"நான் விடுப்பு ஏதும் எடுக்கலவிடுப்பு எடுக்கும் எண்ணத்தோடும் இங்க வரல", மாமாவின் முகத்தில் சோகம் கவ்வி இருந்தது. என் கருத்தை ஆமோதிக்கும் வண்ணமாக தலையசைத்தார்.


"ம்ம்ம்யாரும் எதிர்பார்க்கவில்லை தான்.." நான் மௌனம் காத்தேன்.


"நந்தினிகிட்ட சொல்லியாச்சாப்பா?"


"இன்னும் சொல்லலை".


"ம்ம்ம்… கிளம்ப சொல்லுப்பா, பிறகு 'லேட்' பண்ணிட போறா".


நந்தினியும் என்னுடன் வந்தாகதான் வேண்டுமா.மனதுள் நொந்துக் கொண்டேன். அழைத்துச் செல்லாவிட்டால்

"நந்தினி ஒரு வாரம் விடுப்பில் இருக்கா. 'கே.எல்' பக்கம் கூட்டிகிட்டு போனாக்க அவளுக்கும் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்".


'ம்' கொட்டி தலையசைத்தேன். என் மனமே ஆறுதலைத் தேடித்தானே அலைகிறது. நான் எப்படி அடுத்தவருக்கு ஆறுதல் கொடுப்பது.


நான் என் காலை பசியாறலை முடித்துக் கொண்டு மூட்டை முடுச்சுகளைக் கட்டினேன். நந்தினி கதவருகே வந்து நின்றாள். எனக்கு என்னவோ போல் இருந்தது. நேற்றுதான் அவளுக்கு தாலி கட்டினேன். இன்றே ஒன்றும் சொல்லாமல் கிளம்பிக் கொண்டிருக்கிறேன். எப்படி பேச்சை ஆரம்பிப்பது என யோசித்தேன். மனதை திடப்படுத்திக் கொண்டு கேட்டேன்.


"நீயும் என் கூட வரப் போறீயா"


"உங்களுக்கு சம்மதமா?" நீண்ட இடைவெளிக்கு பிறகு என்னுடன் அவள்பேசிய முதல் வார்த்தை அது.


"வரதுனா வா…" வேண்டா வெறுப்பாக பதில் சொன்னேன். அவள் வரக் கூடாது என்ற எண்ணத்தில் தான் சொன்னேன்.


இருந்தாலும் அவள் என்னுடன் வந்தாள். வீட்டில் அனைவரிடமும் விடைப் பெற்றுக் கொண்டு கிளம்பினேன். மாமாவின் முகத்தைப் பார்க்கும் போது நடந்தது நடந்து விட்டது என என்னை நானே சாமாதானப்படுத்திக் கொள்ள முயன்றேன். ஆனால் நந்தினியை பார்க்கும் போதெல்லாம் நளினாவின் ஞாபகம் என்னை வாட்டியது. கோபம் வந்தது. மனம் நிம்மதியை இழந்தது


தொடரும்...

Tuesday, September 16, 2008

60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் (5)

அத்தியாயம் 5

அச்சமயம் மணமகனாக வேடம் போடுக் கொள்வது சற்றுக் கடினமாகவும் எரிச்சலாகவும் இருந்தது. என் உடல் மட்டுமே வேடம் பூண்டுக் கொண்டிருந்து. உயிர் அங்கில்லை. அது என்னைவிட்டு பிரிந்து எங்கோ பறந்துச் சென்றது. அது என் தேவதையைத் தேடி அலைந்துக் கொண்டிருந்தது. சில மாறுதல்கள் இக்கணம் நடக்க வேண்டுமென மனம் ஏங்கித் தவித்தது. அது நடக்குமா? நடந்தால் நான் பிழைப்பேன் அல்லவா என உயிர் மௌனக் கண்ணீர் வடித்தது.

மணமேடையில் அமர்ந்தேன். ஐயர் ஓர் ஈனப் பார்வை பார்த்தார். அவர் என்ன நினைத்திருப்பார். இவன் தானே முதலில் அங்கும் இங்கும் ஓடி வேலைப் பார்த்துக் கொண்டிருந்தான்? இவனா மாப்பிள்ளை? அப்படி இல்லையென்றால் அவர் விசயம் அறிந்திருக்கக் கூடும். நான் திடீர் மாப்பிள்ளை என்பது அவருக்கு தெரிந்திருக்கக் கூடும்.

அத்தருணம் நான் மாய லோகத்தில் புகுந்திருந்தேன். என் கண்கள் காட்சிகளை கண்டன. அதை இரசிக்கவில்லை. என் காதுகள் கேட்டன. பேசியது விளங்கவில்லை.கல்யாண விருந்துக்கு பலியாகிய ஆட்டுக் கெடாக்களின் நிலையை இப்போது என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது. ஒன்றை மட்டும் சரியாய் உணர்ந்திருந்தேன். இப்போது நடக்கும் பெயரில்லா நாடகத்தில் துரதிஷ்ட நடிகனாய், நாயகனாய் நான் மாட்டிக் கொண்டிருப்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையல்லவா.

இன்று காலை ஒரு விசயம் நடந்தது. அம்மா எழுப்பியதும் குளிக்க போனேன். போனவன் அங்கேயே நின்றுவிட்டேன். வெறித்துப் போய் யோசித்துக் கொண்டிருந்தேன். பாட்டிக்கு மட்டும் தான் என் எண்ணங்கள் சரியாய் தெரியும். நான் வந்ததுமே கொசு வலை வங்கி வைப்பார்.

"ஏன் இவன் படுக்க மட்டும் வலை" என அம்மா கேட்பார்.

"பாவம் பிள்ளை 'டவுன்'லேருந்து வந்திருக்கு, நிம்மதியா தூங்கட்டுமே", பாட்டி என்னை ஒரு போதும் விட்டுக் கொடுத்ததில்லை.

ஆனால் பாட்டி கூட இப்போது மௌனியாய் நிற்கிறாரே. அவரும் பரவாயில்லை கல்யாணம் நடக்கட்டும் என விட்டுவிட்டாரே. வாய் திறந்து வேண்டாம் என ஒரு வார்த்தை சொல்ல மாட்டாரா?

"என்ன காலையிலேயே 'பாத்ரூம்'கிட்ட தியானம் பண்ணிகிட்டு இருக்கிங்க" குரல் கேட்டு திரும்பிப் பார்த்தேன். அங்கே இந்திரா நின்றுக் கொண்டிருந்தாள். இந்திரா நந்தினியின் கடைசித் தங்கையாவாள்.

"ஆ… ஆ… இல்லை.. குளிக்கலாம்னு வந்தேன்.. தண்ணி ரொம்ப சில்லுனு இருக்கு. அதான்..".

"சுடுதண்ணி போட்டுக் கொடுக்கட்டுமா மாமா".

"ம்ம்ம்… இல்லை.. பரவாயில்லை… நான் குளிச்சிடுவேன்". கோலாலம்பூரில் எழுந்ததும் பீலியை திருகியவுடன் மழையெனக் கொட்டும் சுடுநீரை நினைவுபடுத்திக் கொண்டேன். அதன் சுகமே தனிதான்.

"ஏன் இவ்வளோ சிக்கிரம் எழுந்துட்டீங்க", எனக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் சிரித்து மட்டும் வைத்தேன்.

தலைநகர் வாசத்தின் போது இவ்வளவு சீக்கிரம் நான் எழுந்து தொலைத்ததில்லை. விடுமுறை நாட்களில் பத்துமணிவரை தலையணையை கட்டிக் கொண்டு உறங்கினால் மட்டுமே மனம் நிம்மதியடையும்.

நீர் நிரப்பப்பட்டிருந்த தொட்டிலில் லேசாய் என் கையை வைத்தேன். 'அப்பப்பா… எவ்வளவு சில்லிட்டிருந்தது அந்த நீர்… இதில் குளித்தால் விரைத்துப் போய்விட மாட்டேனா'. அந்த நீர் மிகத் தெளிவாக இருந்தது. பாட்டி வீட்டு பின்னால் இருக்கும் குளத்தில் இருந்து எடுக்கும் நீர் அது.

பாட்டி வீட்டு பின்னால் ஒரு ஆற்றங்கரை இருக்கு. முன்பு பள்ளி விடுமுறை நாட்களில் அந்த ஆற்றங்கரை தான் எனது விளையாட்டு மைதானம். பிய்ந்து போன வலை ஒன்றை வைத்துக் கொண்டு குட்டி மீன்களை பிடித்து அழகு பார்ப்பேன்.

சில மீன்கள் மிக அழகாய் இருக்கும். அதை திரும்பவும் ஆற்றில் விட மனம் இல்லாமல் வீட்டிற்கு கொண்டு வந்துவிடுவேன். இதோ என் முன் இருக்கும் இந்த தொட்டிலில் தான் அவற்றை நீந்தவிடுவேன். பாட்டிக்கு கெட்ட கோபம் வரும்.

"குளிக்கர தண்ணியில என்னடா விளையாட்டு", என ஏசுவார்.

மீன்களை ஆற்றில்விட்டு விட்டு தொட்டிலை சுத்தம் செய்ய சொல்வார். எனக்கு இந்தத் தொட்டிலைக் கழுவும் வேலைப் பழு கனமென தெரியும். என்ன செய்வது. செய்த பாவத்திற்கு சிரமப்பட்டு அதை சுத்தம் செய்வேன். நந்தினி எனக்கு உதவி செய்வாள்.

அதிக நேரம் குளியலறையில் இருந்துவிட்டால் பிரச்சனை. எல்லோரும் எழுந்து குளிக்க வந்துவிட்டார்கள் என்றால் சிரமம் என நினைத்து, கண்களை இறுக மூடி நீரை மொண்டு ஊற்றினேன். "ஆஆஹ்ஹ்ஹ்" என்ன ஒரு குளிர். என் பற்களும் குளிர்ப்பட்டு தட்டச்சு செய்ய ஆரம்பித்தன. விருவிருவென நான்கைந்து குவளை நீரை தலையில் ஊற்றிக் கொண்டு என் அறைக்கு விரைந்தேன்.

என் முன் இருந்த கண்ணாடியை பார்த்தேன். பேரங்காடிகளில் குளிரூட்டி பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் 'ஃபிரஸ்' காய்கறியை போல் இருந்தேன். எனக்கு மட்டும் இப்போது பறக்கும் சக்தி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அப்படியே மேலெலும்பி பறந்துச் சென்று என் அன்பின் இனியவளோடு இணைந்துவிடுவேன். மீண்டும் தோட்டபுறத்து பக்கம் தலை வைக்க மாட்டேன். அம்மா கூப்பிட்டாலும் வர போவதில்லை.

ஆனால் அப்படி ஒரு சக்தி எனக்கு இல்லையே. இருகட்டும். இன்றிரவு திருமணம் முடிந்தவுடன் சட்டென கிளம்பிவிட வேண்டும். மறுபடியும் இந்தப்பக்கம் தவறுதலாகக் கூட திருப்பிப் பார்க்க கூடாது. இன்று விடுதலை நிச்சயம் என இருமாந்து இருந்தேன்.

என் முகத்தில் ஈரப்பசை ஒட்டியிருந்தது. புல்லில் விழுந்த பனித்துளியென முடியில் கொஞ்சமாய் நீர் கோர்த்து இருந்தது. என் கை இடுக்குகளில் முடியை லேசாக கோதிக் கலைத்தேன். நளினாவின் கைவிரல்கள் என் முடியை கோதிய பொன்மாலை போதுகள் என் நினைவுகளில் ஊஞ்சலாடின. அந்த சுகத்திற்கு மனம் ஏங்கிற்று.

"உன் முடி இவ்வளோ 'சாஃப்ட்டா' இருக்கே.." என் தலைமுடியை கோதிக் கொண்டே சொன்னாள்.

"தெரிஞ்சா சரிதான்", விளம்பர படங்களில் வருவதை போல் என் தலை முடியை அலையென அசைத்துக் காட்டினேன்.

"என்ன 'ஷாம்பு' 'யூஸ்' பன்றே?"

"கண்டிப்பா சொல்லனுமா?"

"ம்ம்"

"சொல்லாட்டி"

"சொல்லுடா" என என் முடியை பிடித்து இருக்கினாள்.

"எய்… சரி.. சரி… சொல்றேன்… முடிய விடு"

"ம்ம்… என்ன"

"தேங்காய் எண்ணெய் தான்".

"என்ன… தேங்காய் எண்ணெய்யா?... பொய் சொல்லாதடா…"

"நிஜம்தான்", நான் என் மனதுக்குள் சிரித்தேன். நான் பொய் சொல்கிறேன் என்பதை கண்டுக் கொண்டவள் என்னைப் பிடித்துத் தள்ளினாள்.

"திமிர் தான் உனக்கு" என்று சொல்லி என்னை செல்லமாய் கிள்ளினாள்
"ஏய், திமிர் பிடிச்ச அழகன்னு மரியாதையா சொல்லு".

மற்றவர்களுக்கு எப்படியோ. காதலர்களுக்கு ஒவ்வொரு கணமும் சரித்திர சுவடுகள் அல்லவா. சில சமயம் வேண்டுமென்றே அவளை கோபம் கொள்ளச் செய்வேன். கோபித்துக் கொண்டு போய்விடுவாள். இரண்டு மூன்று நாட்கள் என்னோடு பேச மாட்டாள். மறுபடியும் என்னைத் தேடி வருவாள்.

நளினா என்னுடன் இருப்பதை மட்டுமே விரும்புகிறாள். அவளுடைய காதலை நான் முழுமையாக உணர்கிறேன்.

"பாரி நான் எப்போதும் உன் கூடவே இருக்கனும்". என் கையை அணைத்து தோளில் சாய்ந்துக் கொண்டு சொன்னாள்.

"என்ன ரொம்ப ரொம்ப காதலிக்கிறியா?" அவள் ''ஆம்'' என தலையசைத்தாள்.

"எனக்காக என்ன வேணும்னாலும் செய்வீயா?", அவள் மீண்டும் தலையசைத்தாள்.

எவ்வளவு பெரிய பாவத்தைச் செய்கிறேன். வாழ்நாள் முழுக்க நளினாவோடு வாழ நினைத்தேனே. இனி நான் அவள் சொந்தமில்லை என்பதை ஏற்றுக் கொள்வாளா? நான் நந்தினியின் சொந்தமாக போகிறேனே. இது நிஜமா?... இல்லை… இல்லை… நந்தினி எனக்குரியவள் இல்லை… நானும் அவளுக்குரியவன் அல்ல. இது தானே உண்மை.

தொடரும்...

Tuesday, September 9, 2008

60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் (4)

அத்தியாயம் 4

மேள தாளங்களோடு திருமண மண்டபம் களைக் கட்டிக் கொண்டிருந்தது. இங்கே ஏதோ ஒரு அறையில் தான் நந்தினியை அலங்காரம் செய்து கொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன். விடியற்காலையில் இருந்து இங்கே தான் இருக்கிறேன். கல்யாண வேலைகள் செய்து மாளவில்லை. நான் சோர்ந்து போனேன்.



“ரொம்ப களைப்பா இருந்தா கொஞ்ச நேரம் ஓவ்வெடுத்துக்கப்பா”, மாமா சொன்னார்.



வழக்கம் போல் என் பாணியில் சிரிப்பை மட்டும் பதிலாய் வைத்தேன். தாகத்தை தனிக்க புட்டி நீரை வாயில் கொட்டிக் கொண்டேன். விருந்தினர்களின் வருகை அதிகரித்த வண்ணமாய் இருந்தது. சிறு பிள்ளைகள் அங்கும் இங்குமாய் ஓடி ஆடிக் கொண்டிருந்தார்கள். ஆரவாரம் அதிமானது.



மண்டபத்தில் ஓய்வெடுக்கும் அறை ஒன்று இருந்தது. அதை நோக்கி நடந்தேன்.

“மாமா எங்க இவ்வளோ வேகமா?” சாந்தி சிரித்துக் கொண்டே என்னைப் பார்த்துக் கேட்டாள். சாந்தி நந்தினியின் தங்கை.



“கொஞ்சம் ‘ரெஸ்ட்’ பண்ணலானு…”



“பொய் சொல்லாதிங்க, ரொம்ப பேர் வந்தோன ‘எஸ்கேப்பா’ “.



நான் சிரித்துவிட்டு அங்கிருந்து விறுவிறுவென நடந்தேன். ஓய்வறையில் மெத்தை நாற்காளிகள் இருந்தன. அதில் சாய்ந்துக் கொண்டேன். எவ்வளவு இதமாக இருக்கிறது. நோகும் உடம்பை பிடித்துவிடுவது போல் இருந்தது அந்த பஞ்சு நாற்காலி.



அதிகாலையிலேயே அம்மா என்னை எழுப்பிவிட்டிருந்தார். தூக்க வெறி என்னைக் கடுப்பேத்தியது. என்ன செய்வது வாழ்க்கையில் ஒருமுறை நடக்கும் நிகழ்வு. மனதை தேற்றிக் கொண்டு கல்யாண வேலைகளில் ஈடுபடலானேன்.



விடிந்தவுடன் அறிமுகம் குறைவான சொந்த பந்தங்கள் வீட்டில் நிறைய ஆரம்பித்தார்கள். சிலர் என்னைப் பார்த்து ஏதோ குசுகுசுத்தார்கள். எனக்கு என்னவோ போல் இருந்தது. பாவம் என் மாமன். அங்கும் இங்கும் அலைந்துக் கொண்டிருந்தார். சலிப்போ, களைப்போ எந்த அறிகுறியும் அவர் முகத்தில் பிரதிபலிக்கவில்லை. பெண்ணை பெற்று வளர்த்து திருமணம் செய்விப்பது ஒரு தந்தைக்கு எவ்வளவு அளப்பரிய கடமையாக அமைகிறது.



நான் என் கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். திருமணத்திற்கு இன்னும் நேரம் இருந்தது. இரண்டு மூன்று முறை கோட்டவாய் வந்து மூளைக்கு ஓய்வு வேண்டுமென கெஞ்சியது. எனக்கு கண்கள் சொக்கியது. மண்டபத்தின் ஆட்களின் சத்தம் போக போக தூரமாகிக் கொண்டிருந்தது.

*****
“பாரி.., ஏய் பாரி… எழுந்திரிய்யா…” யாரோ என் தோளைப் பிடித்து உலுக்கினார்கள். எனக்கு தூக்கிவாரி போட்டது. திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தேன்.



அம்மா நின்றிருந்தார். அவரை தான் முதலில் பார்த்தேன். அவர்தான் எழுப்பிவிட்டிருக்க வேண்டும். ‘என்னடா இது கொஞ்ச நேரம் கூட நிம்மதியா இருக்க முடியலையே என நொந்தேன். மீண்டும் ஒரு கோட்டவாய் வந்து தூக்கம் போதவில்லை என்றது. அம்மாவின் பக்கத்தில் மாமாவும் அத்தையும் நின்றிருந்தார்கள்.



“என்ன மா, வாங்க மாமா” நான் என் கண்களைத் துடைத்துக் கொண்டு சுதாரித்து அமர்ந்தேன். அம்மா. மாமா, அத்தை என முவரும் என் முன் நின்றிருந்தார்கள். என் கடிகாரத்தை பார்த்தேன். படுத்து ஐந்து நிமிடம் தான் ஆகியிருக்கும் என நினைத்திருந்தேன். அக்கணக்கு தவறாக போனதை உணர்ந்தேன்.



மாமாவின் முகம் பேயடித்த்தை போல் வெளிறிப் போய் இருந்தது. அத்தையோ முகத்தருகே கைக்குட்டையை வைத்துக் கொண்டு கண்ணீர்வடித்துக் கொண்டிருந்தார்.


“சாரி மாமா, அசதியில் தூங்கிட்டேன், ரெண்டு நிமிசத்தில் ‘ரெடியாகிடுறேன் இருங்க” அவர் முகம் சுருங்கியது. அதில் போபமும், வருத்தமும் கலந்திருந்த்தை உணர்ந்தேன். அம்மாவை பார்த்தேன். உடனே அம்மா என் கையை பிடித்து ஒரு ஓரமாக இழுத்துச் சென்றார்.


“என்னாச்சிமா, எல்லோரும் ஏன் ஒரு மாதிரி இருகிங்க?”


“மாப்பிள்ளை வீட்டில் இருந்து யாரையும் காணும்டா,” மறுபடியும் என் கைக்கடிகாரத்தை சரி பார்த்தேன். முகூர்த்த நேரம் தாண்டிக் கொண்டிருந்தது.


“ஏன் இன்னும் வரல, ஏதாவது ‘டிராப்பிக் ஜேமில்’ மாட்டிக்கிட்டாங்களோ?” அம்மா பெருமுச் செரிந்தார்


மாமா என் அருகினில் வந்தார் “தெரியலப்பா, நானும் இப்ப வரைக்கும் ‘போன்’ பண்ணிக்கிட்டு தான் இருக்கேன், பதில் கிடைக்கல, நந்தினியும் ரொம்ப தடவ ‘போன்’ போட்டு பார்த்துட்டா.”


நான் குழப்பிப் போனேன். நான் அந்த மாப்பிள்ளை பையனை பார்த்தது கூட இல்லை. பார்த்திருந்தாலாவது அவனை தேடிப் பிடித்து, என் குடும்பத்தை கஷ்டப்படுத்தியதற்காக தலையில் இரண்டு தட்டு தட்டி அழைத்து வந்திருப்பேன். இப்போதைக்கு வெயிலில் அகப்பட்ட புழுவாய் நோகும் மாமனை பார்த்தபடி மட்டுமே என்னால் இருக்க முடிந்தது. எனக்கு வேதனையயக இருந்தது.


மண்டபத்தில் ஆட்கள் நிறைந்துவிட்டிருந்தார்கள். அவர்களினும் சிலர் பிரச்சனனயை அறிந்துவிட்டிருக்க வேண்டும். ஒரு வித குழப்பப் பேச்சு அவர்களினும் ஏற்பட்டிருந்ததை உணர முடிந்தது.


நான் மெல்ல கல்யாண மேடையை எட்டிப் பார்த்தேன். ஐயர் அங்க வேர்த்து போய் அமர்ந்திருந்தார். மாமா என்னை நந்தினி இருக்கும் அறைக்கு அழத்துச் சென்றார். அம்மாவும் அத்தையும் கூடவே வந்தார்கள். அந்த அறைக்குள் நுழைய எனக்கு என்னவோ போல் இருந்தது. நான் நந்தினியை நினைத்துப் பார்த்தேன். அவள் மனநிலை எப்படி இருக்கும். கவலை, வெட்கம், அவமானம் என அனைத்து கொடுமைகளையும் தாங்கிக் கொண்டிருப்பாள் அல்லவா. இந்நிலையில் நான் அவளை பார்க்கதான் வேண்டுமா?


நான் அங்கிருந்து நகர எண்ணினேன். முக்கியமாக பசி என் வயிற்றைக் கிள்ளியது. அதற்கு ஏதாவது வழி செய்யுமாறு மூளை வற்புறுத்தியது. நான் நகர்வதற்குள் மாமா என்னை அவ்வறைக்குள் இழுத்தார்.


“சொல்லுங்க மாமா.”


“நாந்தான்பா தப்பு பன்னிட்டேன்.” உணர்ச்சியை கட்டுப்பத்தி நா தழு தழுக்க கூறினார்.


“ஏன் மாமா, நீங்க என்ன தப்பு செஞ்சிங்க?”


“தெரிஞ்ச பையனா இருக்கானு நான் தான் நந்தினிய அந்தப் பையனுக்கு நிச்சயம் செஞ்சி வச்சேன், அவன் இப்படி பண்ணுவானு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல,” எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. கதவருகே நின்றிருந்த அம்மாவைப் பார்த்தேன்.


“பாரி நீதான்யா மாமாவுக்கு உதவனும்”.


என்னால் முடிந்த உதவியை கண்டிப்பாய் செய்வேன். ஆனால் இப்போது என்ன செய்ய முடியும். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன புண்ணியம். இப்போது நான் பினாங்கு போய் அவனை தேடிக் கொண்டும் வர முடியாது. என்னையும் அம்மாவையும் தனியாய் விட்டு மாமா சற்று தள்ளி நின்றார்.


“உன் மாமா பாவமய்யா, ரொம்பவும் அவமான பட்டுபோய் இருக்காரு. யாரும் இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல. ஆளாளுக்கு ஒரு மாதிரி பேச ஆரம்பிச்சுட்டாங்க,” அம்மாவின் குறலில் கலவரம் இருந்தது.


“பாரி.. உன்னாலதான்பா எல்லாத்தையும் சரி பன்ன முடியும், மாமா அவமானப்பட்டு நிக்குறத என்னால பார்க்க முடியாதுப்பா,” அம்மாவின் கண்களில் நீர் பெருக்கெடுத்தது.


“அம்மா,” அவர் அழுவதை பார்க்க என்னால் தாங்க முடியவில்லை.


“அம்மா உன்னை நம்புறேன்பா, மாமாவுக்கு இந்த உதவியை நீதான் செய்ய முடியும், அந்த மாப்பிள்ளைக்கு பதில நீதான்யா மணமேடையில் உட்காரனும்”.


“ஹா…” ஒரு கனம் என் தலைச் சுற்றியது. உலகம் இருண்டு போனதாய் உணர்ந்தேன்.



தொடரும்...

Wednesday, September 3, 2008

60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் (3)

அத்தியாயம் 3


அம்மா என்னைப் பார்த்துச் சிரித்தார். எதற்காக சிரித்தார் என எனக்கே தெரியவில்லை. நானும் பதிலுக்கு நமட்டுச் சிரிப்பொன்றை சிரித்து வைத்தேன். நாங்கள் வந்து சேர்ந்ததில் பாட்டி வீடு லேசாகக் களைக்கட்டி இருந்தது.

பின்வாசலில் யாரோ வந்திருந்ததாக அறிந்தேன். யாராக இருக்க முடியும். என் மாமாவாக தான் இருக்கும். பண்ணை வேலைகளை முடித்துவிட்டு வருபவர்கள் வீட்டு பின் வாசலில் கை கால் கழுவிவிட்டுத்தான் நுழைவார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு மாமாவை பார்க்கிறேன். காலத்தின் ஓட்டம் அவரின் முதுமையில் தெரிந்தது.

என்னைப் பார்த்ததும் முகம் மலர அருகே வந்தார்.

“டேய் பாரிதாசா, நல்லா இருக்கியாப்பா? எப்ப வந்த? எங்கள பார்கனும்னு இப்பதான் ஞாபகம் வந்ததா?” என் தோள்களை உலுக்கியவாரு கேட்டார்.

நான் அவர் கைகளை பற்றிக் குலுக்கினேன்.
“நல்லா இருக்கிங்களா மாமா?”

“என்னக்கென்னப்பா, சௌக்கியமாதான் இருக்கேன், நீதான் ரொம்ப மாறிபோயிட்ட, முதல்ல பார்த்த போது யோரோனு நினைச்சேன்”, மாமா எனக்கு நேர் எதிரில் அமர்ந்துக் கொண்டார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு பாட்டி வீட்டிற்கு வந்திருக்கிறேன். எனக்கு இப்புதிய சூழல் அசுவாசத்தை ஏற்படுத்துகிறது.

“அவனுக்கு நம்மை பற்றி எங்க ஞாபகம் இருக்கு, இவனை வரவழைக்கறத்துக்கு கையில கால்ல விழுந்து அழ வேண்டியதா இல்ல இருக்கு”, என் அம்மா அவர் பங்குக்குப் பேசினார்.

“ரொம்ப நாளா டவுன்ல இருந்து பழகிப் போச்சு இல்லையா, எங்க தோட்டத்து பக்கம் வந்தா போரடிச்சிடுமோனு வர மாட்டுறான் போல. இந்தக் காலத்துப் பசங்க கம்பியூட்டர் முன்னாடியே வாழ்க்கையே ஓட்டனும்னு இல்லை நினைக்குறானுங்க”.

“அப்படியெல்லாம் இல்லை மாமா, வேலை அதிகமாயிடுது, அதுவும் இல்லாம புதுசா வேலைக்கு சேர்ந்து இருக்கேன் இல்லையா, அதிகமா ‘லீவு’ போட முடியாது”. மனசாட்சி இல்லாமல் பொய் சொன்னேன்.

மாமா சிரித்தபடி தலையாட்டிக் கொண்டார். பேச்சுவாக்கிலேயே வாசலைத் திரும்பிப் பார்த்தார். யாரோ வருவது தெரிந்தது. காலணியை வாசலில் விட்டுவிட்டு உள்ளே நுழைந்தாள் அந்தப் பெண். சுடிதாரில் இருக்கும் அவள் மிக அழகாய் இருந்தாள். அழகு அவளுக்கே உரியதென கொட்டிக் கிடந்தது. எங்கேயோ எப்போதோ பார்த்த முகமாய் இருந்த அவளை என்னால் சரியாக யூகிக்க முடியவில்லை.

“வாம்மா நந்தினி, சௌக்கியமா இருக்கியா? இன்னிக்கு வேலை இல்லையா?” அவள் கைகளை பற்றிக் கொண்டு என் அம்மா குசலம் விசாரிக்க ஆரம்பித்திருந்தார். நந்தினி சிரித்த முகத்தோடு இருந்தாள்.

அவள் நந்தினி தானா. முன்பு பார்த்ததை விட எவ்வளவு பருவ மாற்றங்கள். எனக்குள் நினைத்துக் கொண்டேன்.

“நல்லா இருக்கேன், நீங்க? வேலைத்தான் அத்த, சனிக்கிழமை அரை நேர வேலை. வேலை முடிஞ்சித்தான் வரேன்”.

நந்தினி எல்லோருக்கும் தேனீர் கலக்கி கொண்டு வந்து வைத்தாள். பளிச்சென்று இருந்த அவள் கை விரல்கள் என் கண்களை உறுத்தியது. நான் அதை ரசித்தேன். ஆணாக பிறப்பவன் இராமனாக வாழ்வது கடினம் என எவ்வளவு சரியாக சொல்லி வைத்திருக்கிறார்கள்.

திடீரென என் மீது பார்வையை திருப்பினாள். நான் அவளைத் தான் பார்க்கிறேன் என உணர்ந்துவிட்டாளோ. எனக்கு சங்கடமாய் போனது. என் மனதுள் சில பட்டாம் பூச்சிகள் பறந்து இனம் புரியாத உணர்வை ஏற்படுத்தியது.

*****
நான் கோலாலம்பூர் திரும்பியதும் முதல் வேலையாக நளினாவைக் காண சென்றேன். அவள் அங்கே இல்லை. போன் செய்துப் பார்த்தேன். எந்த பதிலும் இல்லை. என் மனம் கனத்து போனது. என் செயல் அவளை எவ்வளவு பாதித்துவிட்டது. அவள் அடிக்கடி போகும் இடங்களிலும் போய்த் தேடினேன். அவள் என் கண்களில் அகப்படாமலே போனாள்.

எங்கே போயிருப்பாள்? திட்டமிட்டிருந்த இடத்திற்கா? தனியாகவா போயிருப்பாள்? என் புத்தி நிலையற்று தடுமாறியது. காருக்குள் வந்தமர்ந்து குளிரூட்டியை தட்டிவிட்டேன். அந்தக் குளிர் காற்றில் என் வெப்ப பெருமூச்சுகளை இறக்கி வைத்துக் கொண்டிருந்தேன்.
அவளை பார்க்கும் ஆவலில் எவ்வளவு விரைவாக ஊரிலிருந்து கிளம்பினேன். என்னால் முடிந்தவரை வாகனத்தை வேகமாகத்தான் செலுத்தி வந்தேன். ஆனால் நளினா இங்கில்லை.

எனக்கு லேசாக தலை கனப்பதை போல் இருந்தது. அடுத்த மாதம் நான் மீண்டும் தோட்டத்திற்கு திரும்ப வேண்டும். ஆம், நந்தினிக்கு அடுத்த மாதம் திருமணம். மாமாவுக்கு ஆண்பிள்ளைகள் யாரும் இல்லை. நானும் போகவில்லையென்றால், நான் அவர் உறவினன் என்பதற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடாதா. அவரும் என் வரவை பெரிதும் எதிர்பார்த்திருப்பார் அல்லவா. நான் கிளம்பும் போது கூட பல முறை ‘மறக்காமல் வந்துவிடு’ எனக் கூறினாரே. அடுத்த மாதமும் நான் ஊருக்கு போவேன் என்பதை நளினாவிடம் எப்படி சொல்லப் போகிறேன்.

குடும்பத்தில் முதல் கல்யாணம். மூத்த மருமகன் வரப்போகிறான். மாமாவின் முகத்தில் ஒரு சந்தோஷ களை இருந்தது. அவர் வளர்த்த ஆட்டு கெடாக்களுக்கு மரண தண்டனை காத்திருக்கிறது.

“அடுத்ததா வீட்ல உன் கல்யாணமாதான் இருக்கும், சமையலுக்கு நம்ப தோட்டத்து நாட்டாடும் நாட்டுக் கோழியும் தான். என்ன புரிஞ்சதா?” மாமா அன்று சொன்னது என் நினைவுக்கு வந்தது. அப்போது எதையும் பேசாமல் என் சிரிப்பை மட்டும் பதிலாய் வைத்தேன்.

அடுத்த கல்யாணம் எனக்கா? எப்போது? யாரோடு? நளினா..? என்னைத் திருமணம் செய்துக் கொள்ளும் நோக்கில் தான் காதலிக்கிறாளா? காதல் இனிக்கும் கல்யாணம் கசக்கும் என்பார்கள். காதலிக்கும் தருணங்களில் குழந்தைத்தனமாய் இருக்கும் அந்தக் குமரியின் ஒவ்வொரு அசைவையும் இரசிக்கிறேன். திருமணம் என்றால் பொறுப்புகள் கூடும். வாழ்க்கைச்சுமை தலையெடுக்கும். அப்போதும் நளினா இப்படி இருந்தால் இரசிப்பேனா. என்னுள் இதற்கான பதிலை தேடுகிறேன்.

நொடிக்கொருமுறை சொல்வாளே. நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன் என. நானும் அப்படிச் சொல்ல வேண்டுமென எதிர்பார்ப்பாளே. திருமணத்திற்கு பிறகும் இப்படியே சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா. காதல் மட்டும் வாழ்க்கை இல்லை என்பதை உணர்ந்து தான் காதலிக்கிறாளா.

நளினாவின் காதல் பொய்யாக இருந்துவிட்டால். இதை நினைக்கவே என் மனம் கனக்கிறதே. நான் வேலைக்கு சேர்ந்த சமயம் என் நண்பர்கள் கூட சொன்னார்கள். நகரத்து பெண்களை நம்பாதே. இனிக்க இனிக்க பேசுவார்கள். உன்னிடம் இருக்கும் பணத்தை சக்கையென பிழிந்தெடுத்த பிறகு கழன்றுக் கொள்வார்கள் என. எனக்கு இப்படிப்பட்ட பேச்சுகளில் துளியும் உடன்பாடு இல்லை. இருந்தாலும் இக்கணம் அந்த நினைவுகளை மனம் நினைக்கிறது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நந்தினி என் சிந்தனையில் சிரித்துச் செல்கிறாள். பெண்களுக்கே உரிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என அனைத்தும் அவளிடம் ஊறிப்போய் கிடக்கிறது. பார்ப்பவருக்கு பூமியில் உதித்த தேவதையென தெரிகிறாள். பெரியவர்களிடம் காட்டும் மரியாதை, வீட்டு வேலைகளைகளில் காட்டும் பொறுப்பு. நல்ல பெண் என சொன்னால் அவளுக்கு அது குறைந்தபட்சமே.

நான் சிறுவனாக இருந்த சமயம் நந்தினி என்னோடு எவ்வளவு நெருக்கமாய் இருந்திருக்கிறாள். ஆற்றங்கரையில் ஆட்டம் போடும் போதும், மாங்காய் மரம் ஏறும் போதும் மாலை விளையாட்டுகளின் போதும் என்னை விட்டுப் பிரிந்த்ததில்லை. அவளுக்கு வேறு நண்பர்கள் இல்லாததும் காரணமாய் இருந்திருக்கலாம். ஆண் பிள்ளை என்ற கர்வம் கண் விழிக்கும் சமயங்களில் எத்தனை முறை அவளை அழ வைத்திருக்கிறேன். இருப்பினும் என்னைத் தானே நாடி வருவாள். அக்கனா காலங்கள் என் மனதில் பதிந்த கல்வெட்டுக்கள். என்றும் அழியாது.

நினைவுகள் கலைந்தது. எனது காரின் எண்ணெய் மிதியை அழுத்தினேன். என் நினைவுகளை போல அதுவும் விரைந்தது. வெறிச்சோடிய ஞாயிறாய் போனது இன்று. கடுப்பேறியதின் உச்சக்கட்டமாய் என் தலையை நானே ஆட்டினேன். பெருத்தக் கொடுமை ஒன்று என் வாழ்வில் நடக்கப் போவதை அறியாமல் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

தொடரும்....

Monday, September 1, 2008

60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் (2)

அத்தியாயம் 2


"போன வருசம் வந்துட்டு போன பிறகு நீ இந்தப் பக்கம் தலை காட்டவே இல்லை. இன்னும் கொஞ்சம் நாள் போனால் உன் முகமே எல்லோருக்கும் மறந்திடும் போல. உன் மாமா கூட அப்பப்ப உன்னை பத்தி விசாரிப்பாரு. அவர் ஞாபகமாவது உனக்கு இருக்கா?''

"அப்படி என்ன உங்க அண்ணனுக்கு என் மேல பாசம்? என்னன்னு விசாரிச்சாரு?'' அம்மாவின் கேள்விக்கு கேள்வியே பதிலாய் வந்தது.

"எங்க உன் பையன ஆளயே காணும், ஏதாவது பொண்ண கட்டிக்கிட்டு ஓடிட்டானானு கேப்பாரு". அம்மாவுக்கும் கிண்டல் அதிகமாகிவிட்டது.
"ஓ… அப்படியா, இதோ இப்ப வந்திருக்கேன், அவர் பொண்ணை எனக்குக் கட்டி வைக்கச் சொல்றிங்களா?". நானும் கிண்டல் பேச்சில் சளைத்தவன் இல்லை என்பதாக பதில் கொடுத்தேன்.
"டேய் பெரியவங்கள அப்படியா பேசறது. படவா"
"அதுக்கில்லைமா, அவர்தான் நான் எவளையாவது இழுத்துக்கிட்டு ஓடிடுவேனு சொல்றாரே, அவருக்கு இருக்கும் மூணு பொண்ணுல ஒன்னை எனக்கு கட்டி வச்சிட்டா நான் ஓடிட மாட்டேன் இல்லையா". என் பேச்சில் மீண்டும் கிண்டல் இருந்தது.
"என் அண்ணன் பொண்ணுங்களுக்கு என்னடா குறைச்சல். மூக்கும் முழியுமா அழகாத்தானே இருக்காளுங்க". இதற்கு மேல் நான் பேசினால் வில்லங்கமாய் போய்விடும் என என் மனம் சொன்னது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நளினா என் நினைவை ஆக்கிரமித்தாள். அவளைத் தவிர்த்து வேறு பெண்ணா. ஒருக் காலும் நடக்காது. அவள் அல்லவா அழகி. என் மனதின் நாயகி.


******

திடீரென ஒலித்த கைபேசியின் சத்தம் என் நினைவுகளுக்கு மூட்டை கட்டியது. யாராக இருக்கும்? நளினாவா? அழைப்பு வந்த பெயரைக் கூட கவனியாமல் பேசும் விசையை அழுத்தி காதில் வைத்தேன்.

"ஹாலோ பாரி".

"சொல்லுங்க மா, நல்லா இருக்கிங்களா? என்ன விசயம்?" அது நளினா இல்லை. என் அம்மா தான் அழைத்திருந்தார்.

"நான் நல்லா இருக்கேன், இன்னிக்கு பாட்டி வீட்டுக்கு கிளம்பனும். உனக்காகதான் காத்திருக்கேன். பாட்டிக்கிட்டயும் மாமாகிட்டயும் நீ வரதா சொல்லியாச்சு.நீ உடனே கிளம்பி வா. நீ வராம நான் போறதா இல்லை''.
"யாரைக் கேட்டு நான் வரப் போறதா முடிவு பண்ணுனிங்க, எனக்கு இங்க நிறைய…..".

"நீ எதுவும் சொல்ல வேண்டாம். நான் இங்க எல்லாம் ரெடி பண்ணிட்டேன். நீ வந்ததும் கிளம்புறோம்" பட்டென அழைப்பை துண்டித்துவிட்டார்.

இப்போது நான் யாரைச் சமாளிப்பது. நளினாவையா இல்லை என் அம்மாவையா? இன்னும் சற்று நேரத்தில் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு நளினா வந்துவிடுவாள். மூன்று வாரமாக அவளைக் கவனிக்காத தொல்லை. சரி இந்த விடுப்புக்கு வெளியே போய் வரலாம் என சொல்லி வைத்தேன். இப்போது முடியாது என சொன்னால் பத்திரகாளியாகிவிட மாட்டாளா?

செய்வதறியாமல் அமர்ந்திருந்தேன். அடுத்து நான் என்ன செய்யப் போகிறேன் என எந்த யோசனையும் ஏற்படவில்லை. இந்த விடுமுறை அமைந்ததை விட வேலை நாளாகவே இருந்திருக்கலாம் எனத் தோன்றியது. சிந்தனைக்கள் மூலைக்கொன்றாய்ப் பறந்துக் கொண்டிருந்தது. என் அறைக் கதவு தட்டபடும் ஓசையைக் கூட நான் அறியவில்லை.

லேசாக திறக்கப்படும் அறைக்கதவை என் எரிச்சலான பார்வையோடு எதிர் நோக்கினேன். வேறு யாருமல்ல. என் அழகுப் பதுமை நளினாதான்.
"ஹாய் பாரி" மலரென புன்னகையை உதிர்த்து என்னை நோக்கினாள்.

இன்று எவ்வளவு அழகாய் ஆடை அணிந்திருக்கிறாள். நளினா என் ரசனை அறிந்தவள். பேரங்காடிகளுக்குப் போகும் சமயம் அவள் தேர்ந்தெடுக்கும் ஆடைகளைப் பார்த்து நொந்து போய் இருக்கிறேன். என் ரசனைக்கு மாறுபட்டது அவள் ரசனை. நவீனம் எனும் பெயரில் விளங்காததை மாட்டிக் கொண்டு அலைவதை நான் கண்டித்துக் கூறியிருக்கிறேன். அன்றே எனக்காக அவள் ரசனையை புதைத்துவிடாள். இன்று என் ரசனைக்கேற்ற நளினாவை காண்கிறேன்.

"எப்படி?''

"ம்ம்ம்… ரொம்பவே அழகா இருக்க", நான் ஏதோ பகடியடித்தை போல நளினா சிரித்தாள்.

"நான் அழகா இருக்கிறது இருக்கட்டும், நம்ப ப்ளான் என்னாச்சுப்பா?''.

என்ன சொல்வது. என் மூச்சை லேசாக அடைத்தது. என்னதான் நடக்கப் போகிறது என நினைத்து லேசாக தலைச் சுற்றியது. செல்லிதான் ஆக வேண்டும். வேறு என்ன செய்ய முடியும்.
மறுப்பதற்கு அறிகுறியாகத் தலையசைத்தேன்.
"ஏன் என்ன ஆச்சு".
"முடியாதுனு நினைக்கிறேன்". வருத்தத்தோடுதான் கூறினேன்.
"பாரி உன் விளையாட்டுக்கு அளவே இல்லை. சரி கிளம்பு. போகலாம்".

"இல்லை நளி, உன்மையா தான் சொல்றேன்".
"ஏன்?" கண்கலங்கியவளாய் குரல் தழுதழுக்க கேட்கிறாள்.
அவளுக்கு கோபம் தலைக்கேறிக் கொண்டிருக்கிறது. என் அமர்விடத்தை விட்டெழுந்து அவளை நோக்கினேன். என் மனதிற்குள் கேட்டுக் கொள்கிறேன். 'அவளைச் சமாதானப் படுத்தமுடியுமா?'.
காதலில் எனக்குப் பிடிக்காத விசயமே கோபமடைந்த காதலியை சமாதானப்படுத்துவது தான். காதலில் பிரச்சனைகளே இல்லாமல் இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

அவள் முகவாய்க்கட்டையை நிமிர்த்தினேன். கண்கள் சிவந்து போய் விட்டிருந்தது. கருமேகம் சூழ்ந்த வானத்தை போல் முகம் களை இழந்து போய் இருந்தது.

"என்னை புரிஞ்சிக்க நளினா, அம்மா அவசரமா போன் பண்ணி கண்டிப்பா வர சொல்லிட்டாங்க. நான் போகலனா பிரச்சனையாகிடும்".

காது இடுக்கில் அவள் முடியை கோதிவிட்டபடி கூறினேன். சலித்துக் கொண்டே நெருப்புப் பார்வையை என் மீது வீசினால்.
"வீட்டுக்கு போக மாட்டேன்னு தானே சொன்ன? வெளிய போலான்னு ப்ளான் பன்னினது கூட நீதானே."

"ஆமா… ஆனா இந்த முறை முடியாது…".
"அதுக்குள்ள அம்மா பிள்ளையா மாறிட்டியேடா".
"அவுங்க என் அம்மா, என் அம்மாவுக்கு நான் முக்கியதுவம் கொடுக்காமல் இருக்க முடியுமா?, என் நிலைமையில் உன்ன வச்சு யோசிச்சுப் பார்த்தா உனக்கே புரியும் நளினா".

"அப்ப நான் உனக்கு முக்கியம் இல்லையாடா" அழுகை தாளாமல் கேட்டாள். அவள் தோள் மீது இருந்த என் கையை உதறித் தள்ளினாள்.

"நளி ரெண்டே நாள் தான்டா, ஞாயிற்றுக் கிழமை கண்டிப்பா வீட்டிலிருந்து கிளம்பிடுவேன். வந்ததும் முதல் வேலையா உன்னை வந்து பார்க்கிறேன். சரியா?"

அவள் சமாதானம் ஆனதாக எனக்குத் தெரியவில்லை. கோபம் எனும் அரக்கன் அவள் அழகை மாசு படுத்தத் தோற்றுப் போனான். இப்பொழுதும் அவள் எனக்கு அழகாய் தான் தெரிகிறாள். அவளை சோகமாக்கிவிட்டேனே. இப்படி ஒரு சூழ்நிலை உருவானதற்கு என்னையே நான் நொந்து கொண்டேன். அவளோ முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டாள்.

"உன் இஷ்டம் பாரி.. சரி நான் வீட்டுக்கு போறேன்." என் அறைக் கதவை பாதி திறந்தவளாய் என்னை நோக்கினாள்.

"என்ன வீட்ல கொண்டு போய் விட மாட்டியா." இந்தக் கேள்வியை நான் சற்றும் எதிர் பார்க்கவில்லை.
"ஆ… ஆ…. நீ உன் கார் கொண்டு வரலயா."
"ஹும்…"

கோப அனலை கக்கியவள், என் அறைக் கதவை இழுத்து சாத்தினாள். அக்கதவுக்கு மட்டும் உயிர் இருந்திருந்தால் மடிந்து போயிருக்கக் கூடும். இல்லையென்றால் கொச்சை வார்த்தைகளில் அவளை அது திட்டியிருக்கக் கூடும். அது என் மீது காட்ட வேண்டிய கோபம் தான். கதவின் மீது காட்டி இருந்தாள். அவள் கதவை சாத்திய விதம் என் கன்னத்தில் விழுந்த அறையென தோன்றியது.

அவளை சமாதானப் படுத்த முயன்றதில் என் தொண்டைத் தண்ணீர் வற்றிப் போயிற்று. வார்த்தைகளை அடுக்கிச் சொல்ல எவ்வளவு சிரமமாகி விட்டது. என் மாடித் திரைத் துணியை விலக்கி கீழே நோக்கினேன். விரு விரு வென நடந்து போகிறாள் நளினா. என் அறைக் கதவை போலவே அவள் கார் கதவும் அறையப்படுகிறது.

தொடரும்...