Thursday, October 30, 2008

60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் (10)

அத்தியாயம் 10

தூக்கம் வரவில்லை. விருந்தில் எடுத்த சிறிது உணவையும் சரியாக சாப்பிடாத காரணத்தினால் நன்கு பசித்திருந்தேன். மதியம் அம்மா சொன்ன நண்டு பிரட்டல் நாக்கில் எச்சிலை ஊற வைத்தது. நண்டை உறிந்துக் கடிக்கும் ருசியே தனியாயிற்றே. சரி கொஞ்சம் ருசி பார்ப்போமே எனக் கிளம்பினேன்.

நான் படுத்திருந்த அறையைவிட்டு வெளிவந்தேன், நந்தினி நன்கு தூங்கிக் கொண்டுதான் இருந்தாள். சமையற்கட்டை நோக்கி விரைந்தேன். இன்னமும் அந்த நண்டு பிரட்டல் இருக்குமா? இல்லை காலியாய் போயிருக்குமா? நான் முதலில் காட்டிய வீராப்பிற்காக அம்மாவும் நந்தினியும் சாப்பிட்டு முடித்திருப்பார்களா?

மூடு வலையை எடுத்துப் பார்த்தேன். வீராப்பின் வினை அங்கு படுத்துறங்கிக் கொண்டிருந்தது. கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை. அடுப்பின் மீதிருந்த சட்டியைத் திறந்தேன். பிரட்டிய நண்டின் மணம் மூக்கை துளைத்து நாக்கில் வடிந்தது. கொஞ்சமாக சோற்றை போட்டுக் கொண்டு நிறைவாக நண்டு பிரட்டலையும் போட்டுக் கொண்டேன். அமைதியாய் அமர்ந்துச் சாப்பிட ஆரம்பித்தேன். இச்சமயம் யாரும் வராதிருத்தலே நலம் என நினைத்துக் கொண்டேன்.

மேசை மீதிருந்த கிண்ணத்தில் நீரை நிரப்பினேன். என்னைச் சுற்றினும் வெளிச்சம் பரவுவதை உணர்ந்தேன்.

"பாரி என்னய்யா இது, இருட்டில் உட்கார்ந்து சாப்பிட்டுகிட்டு இருக்க", அம்மாவின் இக்கேள்வி எனக்கு வெட்கமாய் போய்விட்டது.

" யாராவது திருடன் வீட்டில் புகுந்துட்டானோனு பயந்துட்டேன். சரி, எத்தன மணிக்கு வீட்டுக்கு வந்த?"

"12 மணிக்கு மேலாச்சிமா".

"விருந்துக்கு தானே போறேனு சொன்ன? இப்ப என்னடானா சாப்பாட்டுத் தட்டோடு உட்கார்ந்திருக்க. ரொம்ப பசியாப்பா, இன்னும் சோறு வைக்கவா?"

"அங்க சாப்பாடு சரியில்லமா, அதான் சரியா சாப்பிடல".

"நண்டு பிரட்டல் சாப்பாடுத் திருப்தியா இருக்கா?" நக்கலாக கேட்டார்.

"நீங்க இன்னும் தூங்கலையா?" சாப்பாட்டை முடித்துக் கொண்டு கைகழுவிக் கொண்டிருந்தேன்.

"முதல்லயே தூங்கிட்டேம்பா. நண்டு சாப்பிட்டதும் உடம்பு சூடு தாங்கல. சரியான தாகமா இருக்கேனு தண்ணி குடிக்க வந்தேன்".

" சரிப்பா நான் போய் படுக்கிறேன். நீயும் தூங்கு".

அமைதியாக சாப்பிட்டுவிட்டு போகலாம் என நினைத்தேன். நடக்கவில்லை. நல்ல வேலை வந்தது அம்மா. நந்தினி இல்லை.

வெளிச்சம் பட்டு கண் விழித்துப் பார்த்தேன். சன்னல் திரையை விலக்கிவிட்டதினால் அதீத சூரிய ஒளி வீட்டில் குடி புகுந்து என் தூக்கத்தைக் கலைத்துவிட்டது. சோம்பல் முறித்தெழுந்து சுதாரித்துக் கொண்டேன். வரவேற்பறையில் இருந்த சொகுசு நாற்காலியில் தூங்கிப்போய்யிருக்கிறேன். இரவு சாப்பிட்டக் களைப்பில் இங்கேயே படுத்துவிட்டேன் போல.

கடிகாரத்தைப் பார்த்த போது மணி ஏழாகியிருந்தது. சமயற்கட்டின் பக்கம் திறந்து வைக்கப்பட்டிருந்த வானொலியின் செய்தியறிக்கை அதை மேலும் உறுதிப்படுத்தியது. சமைலறையை நோக்கிச் சென்றேன். அங்கு யாரும் இல்லை. பின் திருப்பியபோது நந்தினி அங்கு வந்திருந்தாள்.

"அம்மா எங்க நந்தினி?" காற்றடைத்துக் கொண்டதைப் போல் என் குரல் மெல்லமாய் வந்தது. இவளோடு நான் பேசுகிறேனே. அது எனக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. காலையிலேயே குளித்து வழிபாடு செய்துவிட்டு மிக எழிலோடு இருந்தாள்.

" 'மார்க்கெட்டுக்கு' போயிருக்காங்க அத்தான்", என்றாள்.

அவள் பதில் எனக்கு வேம்பாக இருந்தது. என்னை அத்தான் என அழைக்கிறாளே. என்ன வார்த்தை இது. அத்தான் பொத்தான் என சொல்லிக் கொண்டு. முன்பெல்லாம் பாரி என்றுதானே அழைப்பாள். பெயருக்கு திருமணம் நடந்துவிட்டால் மரியாதையோடு அழைத்திட வேண்டுமா என்ன.

"பசியார எடுத்து வைக்கட்டுமா அத்தான்", மீண்டும் அந்தச் சொல்லை சொல்லியேக் கேட்டாள். பல் துலக்காதவனுக்கு பசியாறை ஒரு கேடா. நான் பதில் ஏதும் பேசமல் அவளை நோக்கினேன். அவளையே பார்த்திருந்தேன். அவளோடு பேச வேண்டுமேன இருந்தது. என்ன பேசுவதென்று தெரியவில்லை.

இந்தத் தனிமை ஆபத்தானது தான் போல. இச்சூழல் என்னை அவளோடு நெருங்க வைக்கிறதே.

"அம்மா போய் ரொம்ப நேரமாகுதா?"

"இல்லைங்க கொஞ்ச நேரம் முன்னாடிதான். சீக்கிரம் வந்திடுறதா சொன்னாங்க". அவள் குரலில் நடுக்கமும் பயமும் கலந்திருந்தது.

இனி என்ன கேட்பது என தெரியவில்லை. அவளோடு பேசுகையில் என் பேச்சில் இருக்கும் தடுமாற்றத்தையும் நடுக்கத்தையும் அவள் உணராதிருத்தலே நலம். அது என் கௌரவ பிரச்சனையும் கூட. மேல் மாடியில் இருக்கும் எனதறைக்கு விரைந்தேன்.

அறை முற்றினும் மாறுபட்டிருந்தது. அது நந்தினியின் கைவண்ணமாகத் தான் இருக்க வேண்டும். நல்லவிதமாக அழகுபடுத்தி வைத்திருந்தாள். கட்டிலின் தலைப்பகுதிக்கு மேல் நான் பல்கலைக்கழகத்தில் பட்டம் வாங்கிய பெரிய படம் ஒன்றும் அதச் சுற்றினும் சிறு சிறு படங்களும் மாட்டி வைக்கப்பட்டிருந்தன.

அந்த நாட்கள் மிகவும் இனிமையானது. நானாக விரும்பிக் கேட்டாலும் அந்நாட்கள் திரும்பிக் கிடைக்கப் போவதில்லை. மகிழ்சியின் எல்லையை அனுபவித்தது அக்கல்லூரி பருவ நாட்களில் தான்.

குளித்துவிட்டு கீழிறங்கிய போது அம்மா வந்துவிட்டிருப்பதைப் பார்த்தேன். பிளாஸ்டிக் பைகளில் இருந்த சாமான்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.

8 Comments:

வால்பையன் said...

இரவில் வந்து சாப்பிட்டு, தூங்கி எழுந்து மறுநாள் காலை சாப்பிட்டதுக்கு ஒரு பதிவா

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

வால்பையன் said...

சுருக்க சொல்லுதல் குறைந்த நீரில் சரக்கடிப்பதை விட கடினம் தான். அதற்க்காக இப்படியா

வால்பையன் said...

தொலைக்காட்சி மெகா தொடர் போல இருக்கு

வெங்கட்ராமன் said...

பாரி மோசமான ஆளா இருப்பாம் போல. வீட்ல நந்தினிய ரசிக்கிறான் வெளில நளினாவ ரசிக்கிறான். இவன் கேரக்டரையே புரிஞ்சுக்க முடியலயே. . .

Anonymous said...

Inthe pativu konjam bored...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ வால்பையன்

மன்னிக்கனும் திருத்திகிறேன்...

@ வெங்கட்ராமன்

வருகைக்கு நன்றி...

@ நவா

மன்னிக்கனும்...

A N A N T H E N said...

//வீராப்பின் வினை அங்கு படுத்துறங்கிக் கொண்டிருந்தது.//
எப்படி? போர்த்திக்கொண்டா?

//அங்க சாப்பாடு சரியில்லமா, அதான் சரியா சாப்பிடல"//
ஹப்பா சட்டென ஒரு பொய்ய சொல்லி தப்பிச்சானே, எனக்கு தோனாம போயிடுதே இப்படி வகையா தப்பிக்க

//"முதல்லயே தூங்கிட்டேம்பா. நண்டு சாப்பிட்டதும் உடம்பு சூடு தாங்கல. சரியான தாகமா இருக்கேனு தண்ணி குடிக்க வந்தேன்".// திரைக்கதை எனப்படும் திறன் மிளிர்கிறது இங்கே.

//"அம்மா எங்க நந்தினி?"//
முதல்ல இதைத் தவறா படிச்சி புட்டேன், “அம்மா, எங்க நந்தினி,” ன்னு

//மரியாதையோடு அழைத்திட வேண்டுமா என்ன.//
அதானே “டேய், பாரி இங்க வாடா... அங்க போடா,”ன்னு பேசினாத்தானே சரிப்பட்டு வரும்... ஹிஹிஹி

//பட்டம் வாங்கிய பெரிய படம் ஒன்றும்...//
பட்டம்ன்னா... கயிறு கட்டி வானத்துல பறக்கவிடுறதா?

VG said...

yenna ithu... surukamana oru nigalvu thaan.. nandu panuna velaiyoo